4 Jan 2018

தமிழ்நாடு - புதிய கணிப்புகள்

தமிழ்நாடு - புதிய கணிப்புகள்
            இரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிக அதிகமாக தமிழகத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்தத் தலைப்பில் நிறைய வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.
            தமிழ் மக்கள் நாயக புனைவு பிம்பத்தில் எந்த அளவுக்கு சிக்கிக் கிடக்கிறார்கள்? மீட்க முடியாத அளவுக்கு பிம்ப ரசனை எனும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்ற வரலாற்றுப் பேருண்மையின் வெளிப்பாடு இது.
            அரசியலில் எது நிகழும்? எது நிகழாதது? என்பதைக் கணிப்பது சிரமம். மேனாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திரையுலக வாழ்வில் நடிகையாக இருந்த போது முரசொலி மாறன் அவர்கள் சொன்னதாக, 'போகிறப் போக்கைப் பார்த்தால் ஜெயலலிதா கூட முதல்வர் ஆகி விடுவார் போலிருக்கிறது!' என்ற கூற்றைச் சொல்வார்கள். பின்னர் அது உண்மையானது வரலாறு.
            இரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆகக் கூடாது என்பதற்கான விவாதங்கள் முகநூலில் ஒரு பக்கம் நடக்கிறது. அவர்கள் முரசொலி மாறன் அவர்கள் சொன்ன கூற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.
            இரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்கான விவாதங்களும் இன்னொரு பக்கம் நடக்கிறது. அவர்கள் அடுத்து இரஜினிதான் என்றால்...
            அதற்கடுத்து விஜய் - அஜித் - விஷால் - சிம்பு - விஜய் சேதுபதி - சிவ கார்த்திகேயன் ... என்று வருகின்ற நீண்டப் பட்டியலை எண்ணிப் பார்க்க வேண்டும். அல்லது இரஜினி - தனுஷ் - யாத்ரா என்று நீளப் போகும் பட்டியலை எண்ணிப் பார்க்க வேண்டும்.
            இன்னொரு பக்கம் ஸ்டாலின் - உதயநிதி என்றப் பட்டியல் இருக்கிறது. வை.கோ.வும் அந்த சீனியாரிட்டி லிஸ்டில் இருக்கிறார். அன்புமணி பசுமைத் தாயகத்தோடு காத்திருக்கிறார்.
            இரஜினிகாந்துக்கு முன்னரே விஜயகாந்த் காத்துக் கொண்டு இருக்கிறார். கமலஹாசன் வர காத்து இருக்கிறார்.
            இன்னபிற கட்சிக்காரர்களும், இன்ன பிற நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெயர் விடுபட்டிருப்பதாகக் கருதி விடக் கூடாது. பத்தி பெரிதாகி விடும்.
            காலம் என்ன முடியவாப் போகிறது? ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டுதானே இருக்கப் போகிறது. ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகள் வீதம் ஆண்டுக் கொண்டு போகட்டும் என்கிறீர்களா? காலத்துக்கு முடிவில்லை. ஆண்டுகள் நிறைய இருக்கின்றன, வருசங்கள் வந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. ஆம்! ஆண்டுகள் நிறைய இருக்கின்றன. தமிழ்நாடு ஒன்றுதானே இருக்கிறது.
            கணிப்பு என்பது முன்பு மாதிரி இல்லை. கணிப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது. அதுவும் திருமங்கலம் பார்முலா, ஆர்.கே. நகர் பார்முலா என்ற வந்தப் பிறகு ரொம்பவே சிரமமாக இருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வரப் போகிறார்கள் என்ற கணிப்போ என்று நினைத்து விடாதீர்கள். யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற கணிப்பு.
            சரியாக கணித்தால் அதை கணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறைகளே கணிக்க முடியாமல் வெடித்துச் சிதறி விடும் என்று நினைக்கிறேன். அதனால் கூட சரியாக கணிக்காமல் வைத்திருக்கலாம் அல்லவா!    

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...