17 Jan 2018

இணையச் சுற்றலும் தலைச் சுற்றலும்!

இணையச் சுற்றலும் தலைச் சுற்றலும்!
            சில நாட்களுக்கு முன்பு குறிப்பாகப் பொங்கல் கொண்டாட்ட நாட்களில் ஐந்து நிமிடத்தில் இணையதள இணைப்பில் செய்து முடிக்க வேண்டியப் பணிகளை ஒரு மணி நேரத்துக்கும் நேரமாகப் போராடி முடிக்க முடியாமல் அல்லாடினேன். ‍பொங்கல் கொண்டாட்டம், இணையத்தளத் திண்டாட்டம் என்றாகி விட்டது.
            இணையம் சுற்றோ சுற்றோ என்று தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியை விட வேகமாகச் சுற்றிக் கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் முக்கால்வாசி வேலை முடிந்ததே போதுமடா சாமி என்று கும்பிடு போட்டு விட்டு எழுந்து விட்டேன்.
            அப்புறம் இரண்டு மணி நேரம் கழித்து இணைப்பில் புகுந்து பார்த்தேன். பேஸ்புக் லோட் ஆவதற்குள் சகதியில் சிக்கிக் கொண்ட லாரியைப் போல உர் உர் என்று இழுத்துக் கொண்டு இருந்தது.
            இம்முறை மிகுந்த எச்சரிக்கையாக உடனடியாக ஒரு கும்பிடு போட்டு விட்டு எஸ்கேப் ஆனேன்.
            இந்த தலைசுற்றல் மறுநாளும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுநாளும் சுற்றோ சுற்றுதான். இணைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்த இணையத்தைப் பரிதாபத்தோடு பார்த்தபடி வெளியேறினேன்.
            இந்த அனுபவத்தைப் பற்றிச் சகாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, நிறைய பேர் இணையத்தைப் பயன்படுத்தினால் இந்த கதிதான் ஏற்படும் என்றார்கள். அப்படியானால் நான் நிறைய பேர் பயன்படுத்தாத இணையத்தில்தான் இத்தனை நாள் இவ்வளவு வேகமாக உலாவிக் கொண்டிருந்தேனா என்று எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.
            திடீரென்று ஈ ஓட்டிக் கொண்டிருந்த கிராமங்கள் எப்படி தி.நகர் ரங்கநாதன் தெருவைப் போல (உயர்வு நவிற்சியில் வந்த உவமை அணி) ஆனது என்கிறீர்களா?
            பட்டணத்துக்காரர்கள் கிராமத்தை நோக்கிச் செய்த பொங்கல் பிரவேசம்தான் அதற்குக் காரணம். இப்போது பட்டணங்கள் வெறிச்சோடி ஈ ஓட்டிக் கொண்டு இருக்கும் என்ற நினைக்கிறேன்.
            வருடம் முழுவதும் பொங்கலாக, தீபாவளியாக இருந்தால் கிராமங்கள் நிரம்பி வழியும். பொங்கலாவது பரவாயில்லை, வருடம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாட காசுக்கு எங்கே போவது?
            பட்டணங்களிலிருந்து பொங்கலைக் கொண்டாட கிராமத்தை நோக்கிப் படையெடுத்தவர்கள், மீண்டும் பட்டணத்தை நோக்கிப் படை விலக்கிப் போகும் போது இணைய நிலைமை சீராகும் என்று நினைக்கிறேன்.
            பட்டணத்துக்காரர்கள் வந்து புகுந்த உடனே, பட்டணத்து டிராபிக் நெரிசல் அப்படியே இணையத்திலும் புகுந்து விட்டதைப் பாருங்களேன்.
            டிராபிக்கும், சிக்னல் விழும் வரை புழுக்கத்தில் வெயிட்டிங்கும் அவர்களுக்குப் பழகியவை. எதை எடுத்தாலும் காற்றாடச் செய்து பழகிய பட்டிக்காட்டானுக்கு இது புதுசு பாருங்கள்!
            அதிலும் பொங்கலைக் கொண்டாட வந்த கிராமத்துப் பட்டணத்துக்காரர்கள் பாதிக்கும் கீழ்தான். அதுக்கே கிராமம் இப்படி ஆகிறது. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு உட்பட பலவற்றிற்கான அடிப்படை வசதிகள் கிராமங்களில் பேணப்படுகின்றன என்பது அறியப்பட வேண்டிய ரகசிய செய்தி.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...