17 Jan 2018

வரலாற்றுக் களங்கம் வேண்டாமெனில்...

குறளதிகாரம் - 3.1 - விகடபாரதி
வரலாற்றுக் களங்கம் வேண்டாமெனில்...
            துறவியர்களின் பெருமை என்று எல்லா துறவியர்களையும் நூல்களில் பெருமைபடுத்தி விட முடியுமா?
            துறவி என்றால் துறந்தவர் என்று பொருள்.
            ஒழுக்கத்தையும் துறந்தவர் என்று பொருளாகாது.
            நான் முற்றும் துறந்த முனிவன் என்பதற்காக அவர் ஒழுக்கத்தையும் துறத்தல் ஆகாது. துறவியர் எதை வேண்டுமானாலும் துறக்கலாம். ஒழுக்கத்தைத் துறந்து விடக் கூடாது. ஒழுக்கத்தைத் துறந்தால் அவர் துறவி ஆகார்.
            ஒழுக்கத்தைத் துறந்து காம நித்தியமே ஆனந்தம் எனும்படியான துறவிகள் செய்திச் சேனல்களை நீலப்படச் சேனல்களாக்குவர். ஒழுக்கத்தைத் துறந்த துறவிகள் சிறைச்சாலையைத் தவச்சாலையாகக் கொண்டு பிரம்மமே ஆனந்தமே என்று இருக்க தலை வைக்கப்படுவர்.
            துறத்தல் என்பது ஒழுக்கக் கேட்டைத் துறத்தல் ஆகும். ஒழுக்கக் கேட்டை அடைவதற்காகத் துறத்தல் என்பது அறத்தை மறத்தல் ஆகும்.
            இல்லறத்தின் ஒழுக்கக் கேடு சமூகத்தல் பழி தூற்றப்படும் என்றால், துறவறத்தின் ஒழுக்கக் கேடு வரலாற்றால் பழி தூற்றப்படும். அதாவது நூல்களில் பதியப்பட்டு காலத்துக்கும் வஞ்சம் தீர்க்கப்படும்.
            இந்தியச் சாமியார்களிலிருந்து ரஷ்யாவின் ரஸ்புடீன் சாமியார் வரை உலக அளவில் இதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது, சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.
            காலத்தைக் கடந்து நிற்கும் நூல்களால் தூற்றப்படும் பழி காலத்தாலும் அழிக்க முடியாத கறை, வரலாற்றாலும் ஒழிக்க முடியாத களங்கம்.
            துறவற ஒழுக்கக் கேட்டை ஒருவேளை மனிதர்கள் மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் நூல்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வகையிலான மன்னிப்பு என்பது நூல்களுக்குப் பிடிக்காத வார்த்தை.
            நூலால் ஆன ஆடையே மனித மானத்தைக் காக்கிறது என்றால், நூலால் ஆன வரலாறே மனிதர் மாண்ட பின்னும் அவர் மானத்தைக் காத்து நிற்கிறது.
            வாழும் போதும் இழிவு, வாழ்ந்து மாண்ட பின்னும் நூல்களால் எழுதப்பட்ட வரலாற்று இழிவு என்பது அறிந்து துறவியர் ஒழுக்கத்தில் உயிராய் நிற்க வேண்டும் அல்லது உயிரை விட்டு விட வேண்டும். ஒழுக்கக் கேட்டிற்காக துறவு பூண்டு உயிர் வாழ நினைத்தால் காலத்துக்கும் இழிவைச் சுமப்பதைத் தவிர்க்க முடியாது.
            ஒழுக்கத்தில் நின்ற துறவியர்களின் பெருமையை நூல்கள் உயர்வாகப் பேசுகின்றன. அஃதில் நிற்காக துறவியர்களின் சிறுமையை இழிவாகப் பேசுகின்றன, கேவலம் செய்கின்றன, கச்சமலம் என்கின்றன.
            துறவியர் ஒழுக்கமானவர் என்று ஒழுக்கமற்றவர்களும் நம்புவர். அவர்களின் நம்பிக்கைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நூல்கள் அடையாளம் காட்டி விடும். மனித குலத்தின் ஒளி விளக்கு நூல்கள் என்பதால் நூல்கள் அந்தக் கடமையைச் செய்யும்.
            மேலும் ஒழுக்கத்தை மனிதச் சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் கடமையும் துறவியர்க்கு உண்டு. அவர்களே ஒழுக்கக் கேட்டில் நின்றால்...? சாமி காப்பாற்றும் என்று கோயிலில் நுழைய, சாமியே செவுளில் அறைந்தால் எப்படி இருக்கும்? நீதிபதி முறைசெய்வார் என்று நீதிமன்றத்தில் நுழைய, நீதிபதியே முறை தவறினால் எப்படி இருக்கும்? உயிரைக் காப்பர் என்று மருத்துவமனையில் நுழைய, மருத்துவரே கொலை வாளினை உருவிக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?
            ஒழுக்கமே அறத்தின் அடிப்படை. ஒழுக்கம் தவறுதல் அற வழு. அற வழு மிக மோசமாக தண்டிக்கப்படும் அல்லது வரலாற்றால் மிக மோசமாக நூல்களில் கண்டிக்கப்படும். இரண்டில் ஒன்று நிகழ்ந்தே தீரும். ஒன்று முன்னது நிகழ வேண்டும், அல்லாது போனால் பின்னது நிகழ்ந்தே தீரும்.
            ஆக, மீண்டும் சொல்வதால் குற்றம் ஆகாது என்பதாலும், மீண்டும் சொல்லாது போனால் பெருங்குற்றம் ஆகி விடும் என்பதாலும்,
            ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றும் துறவியரே நூல்களில் பெருமையாக வைக்கப்படுவர். ஒழுக்கத்தை கை விட்ட துறவியர் தலையின் இழிந்த மயிரென நூல்களில் இழிவு செய்யப்படுவர்.
            ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
            ஒழுக்கக் கேட்டுக்காக ஆசைப்பட்டு துறவு பூணக் கூடாது. வரலாற்றுக் களங்கம் வேண்டாம் என நினைப்பவர்கள் அந்த முடிவைத்தான் எடுப்பார்கள்.
            ஒழுக்கத்தில் நிற்கும் உறுதி மிக்க வீரர்களே துறவுக்குத் தகுதியானவர்கள். உண்மையான உறுதி என்பது அதுவே. உண்மையான வீரம் என்பதும் அதுவே. அத்தகைய உறுதியும், வீரமும் இல்லாதவர்கள் துறவில் காலடி எடுத்து வைத்து காலா காலத்துக்கும் அசிங்கப்பட வேண்டாம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...