10 Jan 2018

வானுக்கு முறையிடச் செல்லும் உழவர்கள்!

குறளதிகாரம் - 2.4 - விகடபாரதி
வானுக்கு முறையிடச் செல்லும் உழவர்கள்!
            உழவர்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால், மனிதர்கள் சோற்றில் கை வைக்க முடியுமா?
            வர வேண்டிய காவிரியும் வரா விட்டால், பொழிய வேண்டிய மழையும் பொழியா விட்டால் உழவர்கள் எப்படி சேற்றில் கால் வைப்பர்?
            மண் சேறாக நீர் வேண்டுமே!
            ஆழ்துளைக் குழாய்கள் ஆழப்பட்டுக் கொண்டே போகின்றன. இன்னும் எவ்வளவு ஆழம் செல்லுமோ! ஓர் குறிப்பிட்ட ஆழத்திற்குப் பின் நீரின்றிப் போகுமோ!
            அதன் பின் நிலத்தடி நீர் மட்டத்தைத்தான் உயர்த்த வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்குமோ!
            நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் அறுவடை முக்கியம் என்ற முழக்கம் முழு வீச்சோடு செயல் வடிவம் பெறுமோ! மழைநீர் அறுவடை செய்யப்பட்டால்தான் உழவில் அறுவடை செய்ய முடியும் என்பது உணரப்படுமோ!
            எந்த வடிவில் பார்த்தாலும் மழையே இறுதியில் வந்து உழவைக் காக்க வேண்டியதாக இருக்கிறது.
            குளம், குட்டை, ஏரி, ஆறு, ஆழ்துளைக் குழாய் என்று அனைத்துக்கும் மழைநீரே முலாதாரமாக இருக்கிறது.
            விளைந்து நெல் வரும் காலம் வரை, விளைந்திருந்த நெல்லை சேமிப்பதற்கு அப்போது வீட்டுக்கு வீடு குதிர்களும், பத்தாயங்களும் இருந்தன. அதுபோலவே மழை வந்த காலத்திற்கு பின், மீண்டும் மழை வரும் காலம் வரும் வரை பொழிந்த மழையைச் சேமித்து வைப்பதற்கு ஊருக்கு ஊர் குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் நம்மிடம் ஏராளமாக இருந்தன.
            இப்போது வீட்டுக்கு வீடு குதிர்களும் இல்லை, பத்தாயங்களும் இல்லை. ஊருக்கு ஊர் குளங்களும் இல்லை, குட்டைகளும் இல்லை.
            குளங்களையும், குட்டைகளையும் தூர்த்த நிலத்தின் மேல் நின்று கொண்டுதான் வானத்தைப் பார்த்து மழைப் பொழியுமா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
            இருந்த ஏரிகளைக் குறுக்கி அதன் மேல் அபார்ட்மெண்ட்களைக் கட்டி லேக் வியூ அபார்ட்மெண்ட் என்று பெயரிட்டு, மெலிந்து கிடக்கும் அந்த ஏரி நிரம்பும் அளவு கூட மழை பொழிய மாட்டேன்கிறதே என்று துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
            மழையை அமிழ்தம் என்று சொல்லித்தான் வள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தைத் தொடங்குகிறார்.
            அமிழ்தம் எனப் பொழியும் மழையைச் சேமிக்காமல், பணத்தைச் சேமிப்பதில் குறியாக இருக்கும் மக்களால் பருவமழைக்கு என்ன கோபம் ஏற்பட்டதோ! பருவம் தப்பிப் பொழிகிறது. பொழியாமலும் போகிறது.
            இருந்த விளைநிலங்களில் எல்லாம் கட்டிடங்கள் விளைந்த பிறகு, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச விளைநிலங்களுக்காகவாவது வான்மழை கருணை காட்டுமா?
            காவிரி ஆணையம் கருணைக் காட்டாத போது,
            இருந்த குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் ஷாப்பிங் மால்களாய் வளர்ந்த பிறகு,
            ஆழ்துளைக் குழாய்கள் சிறு குழந்தைகளின் புதை குழிகளாக மாறி விட்டப் பிறகு,
            தேசத்தின் தலைநகர் வரை உழவர்களின் நிர்வாணப் போராட்டங்கள் நிகழ்ந்த பிறகு,
            குறை தீர்க் கூட்டங்களில் நெஞ்சாண்கிடையாக அதிகாரிகளின் கால்களில் உழுது செம்மாந்த விவசாயிகள் தொழுது ஏமாந்து வீழ்ந்த பிறகு,
            உலகுக்கே உணவு கொடுக்கும் உழவர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம் வரை நடத்தி விட்டப் பிறகு,
            சத்தியமாக,
            நிச்சயமாக
            வான்மழைதான் கருணை காட்ட வேண்டும்.
            அதுவும் கருணை காட்டா விட்டால்,
            ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
            இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நிலைமை இப்படித்தான் ஆகும் என்று எப்படிக் கணித்தீர் வள்ளுவரே!
            இங்கிருக்கும் தலைமைகளிடமும், அமைப்புகளிடமும் முறையிட்டு முறையிட்டுத் தோற்று, இதற்கு மேல் முடியாது என வெறுத்து, வேறு வழியின்றி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வான் உலகம் சென்று அந்த வான்மழையிடமாவது முறையிடுவோம் என்று சென்று கொண்டு இருக்கின்றனரே எம் வேளாண்பெருங்குடி மக்கள்!
            உழவர் என்ற இனம் இருந்தால்தானே காவிரி நீர் கேட்டு போராடப் போகிறார்கள். அவர்களும் தற்கொலை செய்து கொண்டு அழிந்து விட்டால் இந்தக் காவிரி நீரைக் கேட்க யார் இருக்கப் போகிறார்கள்?
            சபாஷ்! சரியானத் திட்டம்! பத்துக்குப் பத்தடி என்ற வீதத்தில் செருகப்படட்டும் மீத்தேனுக்கான குழாய்கள்!
            விளைநிலங்கள் அழிந்த, உழவர்கள் ஒழிந்த, ஏரோடாத நிலத்தில், மீத்தேன் எடுத்து காரோடச் செய்து ப்ளாஸ்டிக் அரிசியை தின்போம்! தின்போம்! வயிறு முட்டத் தின்போம் எம் மக்கா!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...