10 Jan 2018

மனதோடு மனதால் வாழ்பவர்கள்!

மனதோடு மனதால் வாழ்பவர்கள்!
            வருவது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை இருந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பான் எஸ்.கே.
            வருவது என்னவென்று அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிதானம் மனதுக்கு வாய்க்குமா என்ன?
            எதுவும் அப்படி வருவதில்லை. நினைத்தபடி நடப்பதில்லை. கொஞ்சம் முயன்று தள்ளிய போது சிலது நிகழ்ந்திருக்கலாம். எவ்வளவு முயன்று தள்ளிய போதும் நிகழாது போனவைகள் நிறைய. அதனாலென்ன, முயற்சி ஓர் அனுபவத்தைக் காட்டியது. உழைப்பு இப்படியும் செயல்படலாம் என்று திருப்தியைக் கொடுத்தது. அந்த வகையில் உழைப்பை நம்பலாம். மனதை நம்பக் கூடாது. ஏமாற்றி விடும்.
            மனதை நம்பித்தான் ஏமாந்து கொண்டிருக்கிறான் மனிதன். அதற்கு நேரம் கொடுப்போம், மனது சரியானால் அதுவே தானாக செய்து விடும் என்று நினைக்கிறான். ஒன்றை நூறாக செய்யும் சக்தி அதுவாக இசைந்தால்தான் உண்டு நினைக்கிறான். அப்படி நினைத்து நினைத்துதான் ஏமாறுகிறான்.
            மனதைப் பற்றிச் சொல்லப்படுபவைகள் எல்லாம் பொய்கள். மனமே ஒரு பொய்தான். நம்மைப் பொருத்த வரையில், மற்றவர்களைப் பொருத்த வரையில் அது உண்மை. ஏனெனில் அவர்கள், நாம் எல்லாரும் மனதால் வாழ்பவர்கள்.
            யார் மனதால் வாழ நினைத்தாலும் அம்போதான். மனம் நிறைவுறாத ஒரு பிசாசு. கானல் நீரைத் தேடி ஓடும் மாய மான். திருப்தி வந்து விட்டால் மனம் அமைதி அடைந்து விடும் என்று நினைக்கலாம். திருப்தி மட்டும் வந்து விடக் கூடாது என்ற அதிருப்தி மனத்தின் கட்டுமானமும் அந்த மனதுக்குள்தான் இருக்கிறது.
            மனதைப் புரிந்து கொள்வது தந்திரமானது. மனமே தந்திரமானதுதான். மனதைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது. மனதைப் புரிந்து கொண்ட மனமும் இன்னொரு மனமாக இருந்து ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும்.
            விரும்பினால் மனம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லது விலக்கி விட்டு நடக்கலாம். இந்த இரண்டுதான் இந்த உலகில் இருக்கிறது. இடையில் எதுவும் இல்லை. இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் எல்லாமும் ஏமாற்று வேலைகளே.
            புரிந்து கொள்பவர்கள் மனமற்று வாழ்கிறார்கள். புரிந்து கொண்டதாக நடிப்பவர்கள் மனதோடு வாழ்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...