குறளதிகாரம் - 3.6 - விகடபாரதி
பெருந்தலைவர்கள்
எப்படி உருவாகிறார்கள் என்றால்...
மனித மனதை
ஊடுருவிப் பார்ப்பதும், அதில் உள்ளது இன்னதென்று அறிதலும் எளிய காரியம் அன்று, அரிய
காரியம்.
மெய் (உடல்),
வாய், மூக்கு, கண், காது என்ற ஐம்புலன் அடக்கம், மன ஒடுக்கம், அறிவு அடக்கம், தன்னடக்கம்
கொண்டு தன்னை அறிந்த மெய்யறிவு பெற்ற துறவிகளுக்கே அது சாத்தியம்.
துறவிகளின்
சாதனை என்பது மனதைத் தொட்டுச் செய்யும் சாதனை. அது செயற்கரிய ஒன்று.
இந்தியாவின்
இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட இந்திர காந்தி அவர்கள் புலி வாலைப் பிடித்து விட்டதாக
கருதிக் கொண்ட ஒரு சிக்கலானக் காலக் கட்டத்தில்
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆலோசனையையே நாடினார் என்பது வரலாற்றுச் சான்று.
உளவியல் ஆய்வுகளும்,
உளவியல் அறிஞர்களும் இருந்தாலும் உலகின் மீது பற்றற்ற, ஆனால் உலக மக்கள் மீது பற்று
கொண்ட துறவிகள் மனதை அணுகும் விதமே அலாதியானது.
ஆதரவற்றோர்க்காக
அன்னை தெரசா அவர்கள் ஒரு கடைக்காரரிடம் நன்கொடை கேட்ட கதை நாம் அறிந்தது.
நன்கொடை
கேட்ட அன்னையை நோக்கிக் கடைக்காரர் எச்சிலை உமிழ்கிறார்.
தெரசா அமைதியாக,
"இது எனக்குப் போதும். என் பிள்ளைகளுக்கு ஏதாவது தாருங்கள்!" என்கிறார்.
அந்தப் பதிலுக்குப்
பின் கடைக்காரர் என்ன செய்திருப்பார்?
கடைக்காரரின்
கொடுக்க முடியாது என்ற மனப்பூட்டை அமைதி எனும் சாவியால் திறந்து, அவமானத்தைக் கூட
சக மனிதன் மீது கொண்ட அன்பால் பொறுத்து, மனதை ஊடுருவி செய்யும் செயற்கரிய காரியம்
இது. தான் எனும் சுய பற்றினால் உருவாகும் அகந்தை இல்லாத ஒருவரால்தான் இதைச் செய்ய முடியும்.
சம காலத்தில்
இது நடந்திருந்தால் எச்சில் உமிழ்ந்த கடைக்காரர் மீது ஒரு வன்முறை வெறியாட்டமே நிகழ்ந்திருக்கும்.
சிறியவர்கள் செய்கின்ற காரியம் அது.
இப்படிப்
சுய பற்றற்ற நிலையில், மனித குலம் மீது கொண்ட பற்றினால்தான் செயற்கரிய காரியங்கள்
நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன.
காந்தி அப்படி
ஓர் இல்லறத் துறவியாக விளங்கிச் செயற்கரிய செய்தார். இந்தியர்களின் மனநிலையை துல்லியமான
ஊடுருவிய அவர் ஆயுதமற்ற ஓர் ஆயுதமாக அஹிம்சையைத் தேர்ந்து கொண்டார். இன்று அவர் தேர்ந்த
வழிமுறையே உலகின் வழிமுறையாகவும் மாறிக் கொண்டு இருக்கிறது. அவரின் அடிச்சுவட்டைப்
பின்பற்றி நெல்சன் மண்டேலா, ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் செயற்கரிய செய்தது
சரித்திரம்.
அப்துல் கலாம்
அப்படி தான், எனது எனும் பற்றற்ற நிலையில் மனித குலம் மீது கொண்ட பற்றினால் செயற்கரிய
செய்தார். மிகை ஊதியம் மிக பெற்றுக் கொண்டு நாசா விஞ்ஞானிகள் சாதிக்க முடியாத பலவற்றை,
அவர்களை விட பலமடங்கு குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு செயற்கரிய செய்தார்.
அமெரிக்காவின்
ஆப்பிள் நிறுவனப் பிதாமகர் ஸ்டீவ் ஜாப்ஸூம் இதை உறுதிபடுத்தியிருக்கிறார். பற்றற்ற
நிலையில் செயல்படுவதை அவர் மிக விரும்பினார். செயற்கரிய பல நுட்பங்களை அவர் தன் ஆப்பிள்
மூலம் செய்து காட்டினார்.
இன்றும் கூட
புதிய பொற்கால ஆட்சியைத் தருகிறோம் என்று எந்த அரசியல்வாதியும் பேச முடியாமல், கடந்தக்
காலத்துக் காமராசர் ஆட்சியைத் தருவோம் என்றுதான் பேசுகிறார்கள். தனக்கென, தன் குடும்பத்துக்கெனச்
சொத்து சேர்க்க வேண்டும் என்ற பற்றற்ற நிலையில் மனித குலம் மீது கொண்ட பற்றினால்
காமராசர் செய்த செயற்கரிய காரியச் சாதனை அது. அப்படி ஒரு பற்றற்ற நிலைக்கு வராமல் தமிழகத்தின்
எந்த அரசியல்வாதியாலும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் காமராசர் ஆட்சியைத்
தர முடியாது.
காமராசருக்கு
இன்னொரு பெயர் கர்மவீரர். நமது சமகாலத் தலைவர்கள் தனக்கெனவும், தங்கள் சந்ததிக்கெனவும்
சொத்தகள் சேர்த்துக் கொண்ட மர்ம வீரர்கள். யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று
தெரியாமல் வருமான வரித்துறையே சோதனை சோதனை மேல் சோதனை செய்து அல்லாடும் போது இவர்களை
மர்ம வீரர்கள் என்று சொல்வதில் என்ன பிழை இருக்க முடியும்!
ஆக, இதில்
உள்ள அடிப்படைச் சிக்கல் என்னவென்றால்...
காமராசர்
ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முன் காமராசரின் மனதைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசியல்வாதிகளைப்
பொருத்த வரையில் செயற்கரிய ஒன்று.
பணத்தின்
மீதும், சொத்துகளின் மீதும், பினாமிகளின் மீதும் பற்று கொண்ட மனதோடு ஊழலும், கையூட்டுமே
செயற்குரிய ஒன்று என்று இருப்போரிடம் செயற்கரிய ஒன்றை எதிர்பார்ப்பதற்கு வாய்ப்புகள்
இருக்கிறதோ என்னவோ!
சுய பற்றற்ற,
சாதி, மத, இன பற்றற்ற நிலையில் ஆற்றிய காரியங்களே செயற்கரிய காரியங்களாகி செய்தவர்களை
பெரியார்களாக்கியிருக்கின்றன. சுய பற்றோடு ஆற்றிய காரியங்கள் செயற்கரிய செய்ய இயலாமல்
செய்தவர்களை சிறியார்களாக்கியிருக்கின்றன.
செயற்கரிய
செய்யும் ஆற்றல் பெருந்தன்மையான மனதில்தான் எழுகிறது. பற்றுள்ள குறுகிய மனதால் செயற்கரிய
செய்வது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல சில நேரங்களில் செயலுக்கு உரியதைச் செய்வது
கூட சாத்தியமில்லை.
காந்தி செய்த
காரியமும், ஹிட்லர் செய்த காரியமும் இப்படித்தான் அவர்களை பெரியார் என்றும், சிறியார்
என்றும் அடையாளப்படுத்துகிறது. இருவரும் தங்கள் நாட்டுக்கு செயற்கரிய செய்யப் போவதாகக்
கருதித்தான் செய்தார்கள். ஆனால் ஹிட்லர் செய்ததில் இனப்பற்று இருந்தது. காந்தி செய்ததில்
எதிரிகளான ஆங்கிலேயரையும் நேசிக்கும் அன்பு இருந்தது. அதனால்தான் காந்தி பெரியார் ஆகிறார்.
ஹிட்லர் சிறியார் ஆகிறார். இருவரும் துப்பாக்கிக் குண்டுக்குத்தான் பலியானார்கள். காந்தியின்
மரணம் உலகையே திண்டாட வைத்தது. ஹிட்லரின் மரணம் உலகையேக் கொண்டாட வைத்தது.
இப்படி வரலாறு
நிறைய ஏகப்பட்ட சான்றுகள். கார்ல் மார்க்ஸ் எவ்வளவோ வறுமையை எதிர்கொண்ட போதும்,
மனித குலம் மீது கொண்ட பற்றினால், சுய பற்றையோ, குடும்பப் பற்றையோப் பெரிதெனக் கருதாமல்
செயற்கரிய செய்து மூலதனம் என்ற நூலை படைத்தார். செயற்கரிய செய்த பெரியார் ஆனார்.
ஆக இப்படி
எப்படி ஒரு பெரியார் உருவாகிறார், ஒரு பெருந்தலைவர் உருவாகிறார் என்ற புதிருக்கான விளக்கம்தான்,
செயற்கரிய
செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலாதார் என்ற குறள்.
பெருந்தன்மையும்,
மனித குலத்தின் மீது பேரன்பும் கொண்ட பெரியார்கள் பற்றற்ற நிலையில் செயற்கரிய காரியங்களை
நிகழ்த்துகிறார்கள். குறுகிய மனப்பான்மையும், சுய பற்றும், சாதிப் பற்றும், இனப் பற்றும்
கொண்ட பற்றுகளால் கட்டுண்ட சிறியார்கள் அல்பத்தனமான காரியங்களையும், வன்முறை வெறியாட்டங்களையும்
நிகழ்த்துகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கானோரைக்
கொன்று குவித்த போது பெற முடியாத பெரியார் எனும் பெரும் சிறப்பை, மரங்களை நட்டதன்
மூலம்தான் பேரரசர் அசோகர் பெற்றார் என்றால்...
செயற்கரிய
காரியங்களைச் செய்ய பெரியார் ஆக வேண்டியது ஒவ்வொருவரின் கடமை மற்றும் வருங்காலச் சந்ததிக்கானத்
தேவை. சிறியார் ஆகுவது கீழ்மை மற்றும் அவஸ்தை. சிறியாரால் செயற்கரிய காரியங்களை செய்ய
முடியாதது மட்டுமல்லாமல் செயற்குரிய காரியங்களையும் செய்ய முடியாது.
*****
No comments:
Post a Comment