22 Jan 2018

தமிழுக்குப் பனம்பழம் என்று பேர்!

தமிழுக்குப் பனம்பழம் என்று பேர்!
            கற்பனை உள்ளவர் உலகை ஆள்வர் என்பர் ஆன்றோர்.
            கற்பனையில் உண்டாகும் படைப்புகளே இன்று உலகை ஆள்கின்றன. நாளை உலகை ஆளக் காத்திருக்கும் குழந்தைகளின் கற்பனையை மேம்படுத்தும் படைப்பாற்றலுடன் கூடிய கல்வியே இன்றைய குழந்தைகளின் தேவை.
            அக்கல்வியும் தாய்மொழியில் அமைந்து விட்டால் குழந்தைகள் எட்டும் உயரம் சிகரத்தின் தலையைத் தட்டும்.
            அறிவியல் ஞானி அப்துல் கலாம், சந்திராயன் வேந்தர் மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் அதற்குத் தக்கச் சான்று பகர்வோர்களாய் விளங்குகின்றனர். அவர்கள் தாய்மொழியாம் தமிழில் கல்வி கற்றவர்கள். அறிவியலோடு தமிழிலும் படைப்பாளுமையோடு ஒளி வீசுபவர்களாய் உள்ளனர்.
            இன்பத் தமிழ் கல்வி யாவரும் கற்றவர்
            என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
            துன்பங்கள் நீங்கும் சுகம் வரும்
            நெஞ்சினில் வீரம் வரும்
                        என்பார் பாவேந்தர். நம் தலைமுறைகள் கற்பதோ ஆங்கில வழிக் கல்வியாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் நம் துன்பங்கள் நீங்காமல் இருப்பதற்கும், நெஞ்சினில் வீரம் வராமல் இருப்பதற்கும் அதுவும் ஒரு காரணமோ என்று ஐயம் கொள்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.
            வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்
            வாழ்வினில் உயர்ந்ததும் தமிழையேப் பழித்தார்
            நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
            நாம் உணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்
                        என்றும் பாவேந்தர் பாடியிருக்கிறார். அவர் பாடிய நான்கு வரிகளில் மூன்று வரிகள் அப்படியே வரலாறு. நான்காவது வரியான 'நாம் உணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்' என்ற அவரது எதிர்பார்ப்பு மட்டும் ஏக்கமாகி ஏக்கமாகி, அப்படியே கனவாகிக் கனவாகி இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குக் கனவாகவே நீடிக்கப் போகிறது என்ற ஏக்கப் பெருமூச்சு நிலவுகிறது.
            படித்தப் பாடங்கள் அனைத்தையும் தமிழில் படித்தச்  சூழ்நிலை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதைத்தான் மெல்லத் தமிழினிச் சாகும் என்று பாரதி சொன்னாரோ!
            நிலைமை இப்படியிருக்க, தமிழை மட்டுமே தமிழில் படிக்கும் சூழ்நிலைதான் அரசுப் பள்ளிகள் தவிர்த்து பெரும்பான்மையானப் பள்ளிகளின் சூழ்நிலையாக உள்ளது. அரசுப் பள்ளிகளும் மெல்ல மெல்ல ஆங்கிலப் பயிற்று மொழிக்கான நெருக்கடியானச் சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
            ஆங்கிலத்தைத் தடுமாறித் தடுமாறி வாசித்து, தமிழைத் தடுமாறாமல் வாசித்தத் தலைமுறை போன தலைமுறையாகவும், தமிழைத் தடுமாறித் தடுமாறி வாசித்து, ஆங்கிலத்தைத் தடுமாறாமல் வாசிக்கும் தலைமுறை புதிய தலைமுறையாகவும் வடிவம் மாற்றம் கொள்வதைக் காண முடிகிறது.
            இம்மாற்றத்தை உலகமயமாக்கலின் பரிணாம மாற்றமாகக் கொள்வதா? வேலைவாய்ப்பையும், பிழைப்பையும் மட்டும் கருத்தில் கொள்ளும் தமிழர்களின் பரிமாண மாற்றமாகக் கொள்வதா?
            எத்தனையோ கல்வியாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், உளவியல் வல்லுநர்கள், மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் என அனைவரும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்று எடுத்துக் கூறியும், அவர்கள் புறக்கணிக்கச் சொன்ன அந்நிய வழிக் கல்வியை நாம் கொண்டாடிக் கொண்டாடி நாம் எப்படி ஏற்றுக் கொண்டோம் என்பது அவரவர் மட்டும் அறிந்த ரகசியமாக நீடிக்கிறது.
            ஆங்கிலம் வேலைவாய்ப்பைத் தரும் என்றால் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வேலைவாய்ப்பற்றுத் திரியும் எத்தனையோ இளைஞர்களுக்கு அது ஏன் வேலைவாய்ப்பை நல்கவில்லை? ஆங்கிலம் கற்றால் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆற்றல் வரும் என்றால், ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்கார்கள் அவர்களின் நாட்டில் இருக்கிறார்களே, அவர்களுக்கு ஏன் ஆங்கிலம் கோடிகளைக் கொட்டி கொடுக்கவில்லை? ஆங்கிலம் தெரிந்தால் எந்நாட்டிலும் குடியேறி பிழைத்துக் கொள்ளலாம் என்றால் ஆங்கிலம் தெரிந்தும் அகதிகளாக இருப்போரை அமெரிக்கா ஏன் விரட்டியடிக்க முற்படுகிறது?
            இப்படியெல்லாம் பேசி ஆங்கிலத்தைத் தாழ்த்துவதோ, தமிழை உயர்த்திப் பிடிப்பதோ நம் நோக்கமில்லை. தாழ்ந்து கொணடிருக்கும் தமிழை மேலும் தாழ விடாமல் தடுப்பது நம் நோக்கம்.
            அனைத்துப் பாடங்களும் தமிழாக இருந்த படித்த நிலை இன்று தமிழ் என்ற ஒற்றைப் பாடமாக சுருங்கி இருக்கிறது. ஒற்றைப் பாடமாக சுருங்கினாலும் ஒரு பாடமாக இருக்கும் தமிழ், வருங்காலத்தில் அனைத்துப் பாடங்களும் தமிழாக மாறி தலைவிரிக்கும் என்பதற்கான முயற்சிகள் இனியேனும் தொடங்கப்பட வேண்டும்.
            பெற்றோர்களும், மற்றோர்களும் அதைச் செய்வதற்கு முன் கற்பிப்போர் தமிழ்த் திசையை நோக்கிய முன்னத்தி ஏரை நகர்த்த வேண்டியதாக இருக்கிறது.
            தமிழ்க் கற்பிப்போரின் தலையில் மிகப் பெரிய சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. அடுத்த நூற்றாண்டுக்கான தமிழ் விதைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப் பெரிய மூட்டைச் சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. குருவி தலையில் பனம்பழமா என்பது போன்ற ஒரு சுமைதான் இது. ஊர் கூடி தேரிழுத்தால் வராத தேர் எங்கு இருக்கிறது? நான்கு குருவிகள் சேர்ந்து சுமந்தால் ஒவ்வொரு பனம்பழமாய் எத்தனைப் பழம் வேண்டுமானாலும் சுமக்க முடியும்தானே. மேலும் குருவிக்கு நடக்க மட்டுமா ‍தெரியும்? பறக்கவும்தானே தெரியும். தமிழ் எனும் பனம்பழத்தைத் தமிழ் ஆர்வமிக்க தமிழ்க் குருவிகள் நான்கு நான்காய் அல்லது ஐந்து ஐந்தாய்ச் சேர்ந்து சுமந்தால்... பறந்து, பறந்து உலகு எங்கும் தமிழ்ப் பனம்பழத்தை விதைத்துச் செழிக்கச் செய்யலாம். தமிழ் பனம்பழம் போன்றதுதான். விதைக்கக் கூடத் தேவையில்லை. விழுந்தால் போதும் முளைத்து, நீருற்றக் கூட தேவையில்லாமல் வளர்ந்து செழித்து விடும்.
            விதையொன்று முளை விடுமானால் அதை விதைத்தது நீயாக இரு என்ற மொழிக்கேற்ப உலகெங்கும் ஒரு தமிழன் உருவாகிறான் என்றால் அவனுள் தமிழை விதைத்தது ஒரு தமிழாசிரியராக இருப்போம்!

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...