25 Jan 2018

எளிமையாகக் சிக்கிக் கடினமாகத் தப்பித்தல்!

எளிமையாகக் சிக்கிக் கடினமாகத் தப்பித்தல்!
            நிறைய வேலைகளை உருவாக்கிக் கொண்டு அதில் நிறைய கட்டுபாடுகளை உருவாக்கிக் கொண்டான் எஸ்.கே. எவ்வளவு வேலைகள் செய்ய முடியும் என்று கணக்கு இருக்கிறது. அதற்கென உரிய சட்டங்கள் இருந்த போதே இந்த அளவு மீறப்பட்டது.
            சட்டங்கள் மீறப்பட்ட பிறகு, இலக்குகள் வந்த பிறகு அந்த அளவுக்கு வேலை பார்க்க வேண்டியில்லாத ஆனால் நிறைய வேலை பார்ப்பது போன்ற ஓர் ஏமாற்றுச் சூழ்நிலை பிறந்தது. ஓர் இலக்கைக் காட்டி இன்னொன்றை எளிதாகப் புறக்கணிக்க முடிந்தது.
            ஆனால் சட்டங்கள் மீறப்படாததற்கு முன் இருந்த போது செய்த வேலைகள் அத்தனையையும் ஒன்று விடாமல் இழுத்துப் போட்டுக் கொண்டான் எஸ்.கே. உண்மையில் அந்த அளவுக்கு வேலை செய்யத் தேவையில்லை என்ற போதும்,
            அதற்கு மேலும் எஸ்.கே. சில வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ள, அவைகள் எல்லாவற்றையும் அவனால் தாங்க முடியுமா என அவன் யோசிக்கவில்லை. விளைவு அவ்வளவு பொதுநலத்தையும் தாங்கும் சுயபலம் அவனுக்குள் இல்லை. ஓய்வு கொள்ளும் அளவுக்கு உடல் களைப்பை உணர ஆரம்பித்தது. மனதில் சலிப்பும், சோர்வும் மிகுதியானது. இப்போது வேறு வழியில்லாமல் ஓய்வு கொள்ளும் எஸ்.கே. மாற்றம் உண்டாவதை உணர்கிறான்.
            எஸ்.கே.வைப் போன்றவர்கள் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த அளவுக்கு உடலும், மனமும் ஒத்துழைக்கும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
            கிட்டதட்ட சோர்ந்து போகும் நிலையில், நடக்கப் போகின்ற நிகழ்வுகள் விபரீதம் ஆகும் நிலையில் ஓய்வை தேடுவதில் அர்த்தமில்லை.
            எப்போது நடக்கின்ற நிகழ்வுகள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லையோ, சூழ்நிலைகள் எல்லாம் அச்சத்தையும், சோர்வையும் விதைப்பதாக உள்ளதோ அப்போதே ஓய்வைத் தேடுங்கள்.
            நீயேன் இப்படி அடிக்கடி இடையீடு செய்து தலையிடுகிறாய், நான் உன் சார்ந்த விசயங்களில் முறையாக நடக்கிறேனே என்று ஓய்விடம் கேள்வி கேட்காதீர்கள்!
            நன்றாக ஓய்வு கொள்ளும் நாட்களில் மனதோடு வாத பிரதிவாதங்கள் புரியாதீர்கள். ஓய்வுக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.
            குறிப்பாக எஸ்.கே.வைப் போல,
            உன் மனதுக்கு அப்படிச் செய்கிறது என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அ‍து உன் மனது. நீதான் சரி செய்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு நீ எங்களைச் சரி செய்யும் வேலையில் ஈடுபடுகிறாயே என்று எதிரில் எவரேனும் இருப்பதைப் போல கற்பனையாக உளறிக் கொட்டிக் கொண்டு இருக்காதீர்கள்.
            உன்னிடம் போய் எதையாவது எதிர்பார்ப்பேனோ? அது பைத்தியக்காரத்தனம் அன்றோ! அந்தப் பைத்தியகாரத்தனத்தை எத்தனை முறைதான் செய்வேன்? பலமுறை பலமுறை செய்தாகி விட்டது, இப்போதும் அதையே செய்கிறேன் என்றபடி புலம்பிக் கொண்டும் இருக்காதீர்கள்.
            அட மூட மனமே! உன் மூலம் பெறும் சிற்றின்பத்தால் நான் என்ன சாதிக்கப் போகிறேன்? அந்த சிறு நேர மன மகிழ்ச்சிக்காக நான் என் மனநிம்மதியை விலையாகக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று மனதோடு சண்டை பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள்.
            நீ நீயாக இரு. பிழையில்லை. என்னையும் என் விருப்பம் போல் இருக்க விடு என்று மனதோடு மன்றாடிக் கொண்டு இருக்காதீர்கள்.
            ஏனென்றால், ஒவ்வொரு ஓய்வின் போதும் எஸ்.கே. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறான். இதனால் பணிச்சுமையை விட அவனுக்கு ஓய்வு பெரிய சுமையாகி விடுகிறது.
            அது உங்கள் மனம். மற்றவர்களை எந்த அளவுக்கு சுதந்திரமாக இருக்க அனுமதிப்பீர்களோ, அதே அளவுக்கு அதையும் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவர்களை எந்த அளவுக்கு கைவிட்டு விடுவீர்களோ அதே அளவுக்கு உங்கள் மனதையும் கைவிட்டு விடுங்கள்.
            ஆகவே எஸ்.கே.வைப் போல்,
            வாழ்க்கையில் செய்த தவறுகளையே மீண்டும் செய்து கொண்டு இருக்கக் கூடாது. அதுதான் உண்மையான அறியாமை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...