25 Jan 2018

துறவிகள் முதலில் துறக்க வேண்டியது...

குறளதிகாரம் - 3.9 - விகடபாரதி
துறவிகள் முதலில் துறக்க வேண்டியது...
            காடு பெரியது. தீப்பொறி சிறியது.
            பெரிய காட்டை அழிக்க சிறிய தீப்பொறி போதும்.
            வாழ்க்கை பெரியது. கோபம் சிறியது.
            அதாவது சிறு சிறு கணங்களால் ஆன வாழ்க்கை பெரியது. அதில் எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் ஏற்படும் கோபம் சிறியது.
            அந்தப் பெரிய வாழ்க்கையை அழிக்க சிறிய கோபம் போதும்.
            கோபம் சிறு கணம்தான். அந்த சிறுகணம் பல கணங்களைக் கொண்ட வாழ்க்கையை ஆட்டம் காணச் செய்து விடுகிறது.
            கோபத்தை விட்டு விட்டுக் குணத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டியது மனித குலத்தின் தேவை.
            குணத்தில் உயர்ந்த நிலையில்தான் கோபம் உதிர்கிறது.
            காசிக்குச் சென்ற தாத்தாவின் கதையை நாம் அறிந்திருப்போம்.
            காசிக்குச் சென்ற தாத்தா அதன் ஞாபகார்த்தமாக தான் கோபப்படுவதை விட்டு விட்டதாகப் பேரனிடம் குறிப்பிடுவார்.
            வேண்டுமென்றே பேரன் மீண்டும் கேட்பான், "காசிக்குச் சென்று எதை விட்டு விட்டு வந்தீர்கள் தாத்தா?" என்று.
            தாத்தா மீண்டும் சொல்வார், "கோபத்தை விட்டு விட்டேன்!" என்று.
            பேரன் விடாமல் மீண்டும் அதையே கேட்பான், தாத்தா மீண்டும் சொல்வார்.
            இந்த உரையாடல் அப்படியே மீண்டும், மீண்டும் பேரன் கேட்க, தாத்தா சொல்ல என்று நூறாவது முறை பேரன் கேட்க, தாத்தா தன்னையுயறியாமல் கோபப்பட்டு பேரனை அடிக்க ஓடுவார்.
            "நீயாவது கோபத்தை விடுவதாவது?!" என்று கேலி பேசியபடி சிரித்துக் கொண்டே ஓடுவான் பேரன்.
            கோபத்தை விடுதல் அவ்வளவு எளிதா என்ன?
            எல்லாவற்றையும் துறந்து விடும் துறவிகளால் கூட கோபத்தைத் துறப்பது என்பது அவ்வளவு எளிதில் முடியாது.
            மது பழக்கத்தை விட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், போதைப் பழக்கத்தை விட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், சிகரெட் பழக்கத்தை விட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கோபத்தை விட்டவர்கள் வெகு குறைவாகவே இருக்கிறார்கள்.
            அப்படி கோபத்தை விட்டவர்கள் உயர்ந்து குணக் குன்றுகளாகத் தோற்றம் தருகிறார்கள்.
            ஆக, துறவிகள் என்போர் முதலில் துறக்க வேண்டியது குடும்பத்தையா? ஆசையையா? அல்லது பற்றையா? என்றால்... முதலில் துறக்க வேண்டியது கோபத்தைத்தான்.
            கோபப்படுபவர்கள் துறவிகளாக இருக்க தகுதியாக மாட்டார்கள்.
            கோபத்தைத் துறந்தவர்களே துறவிகளாக இருக்கத் தகுதியானவர்கள்.
            துறவிகளுக்கு மட்டுமல்லாது, மானிடர் யாவரும் குணக்குன்றுகளாக உயர்வது அவசியம். அப்படி உயர்ந்தால் அவர் சாதாரண மானிடராக இருந்தாலும், அவர் துறவியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோபத்தை விட்டவர் துறவியினும் மேலானவர்.
            அப்படிக் குணக்குன்றுகளாக ஆகி விட்டால்...
            கோபமே வராதா?
            ஆம்! வராது!
            ஒருவேளை தப்பித் தவறி வந்து விட்டால்...
            கண நேரம் கூட அந்தக் கோபம் நிற்காது.
            கோபம் எந்த வழி வந்ததோ, அந்த வழியே கோபம் நொடியில் பறந்து விடும். குணக்குன்றுகளாகத் திகழ்வோர்களால் கோபத்தைக் கண நேரம் கூட காத்து வைக்க முடியாது.
            இதைத்தான் வள்ளுவர்,
            குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்கிறார்.
            கோபத்தில் சாபம் இருக்கிறது என்பார்கள்.
            கோபம் இல்லாத இடத்தில் வரம் இருக்கிறது. கோபமின்மையே ஒரு வரம்தான் அல்லவா!
            கோபமின்மை ஒரு சொர்க்கம்.
            அந்தக் கோபத்தை விட முடியாமல்தான் பல பேர் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
            கோபத்தை விட்டவர்கள் இமய மலையை விட உயர்ந்த குணக் குன்றுகளாக வாழ்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...