6 Jan 2018

பெருங்கடலும் சிறு குட்டை

குறளதிகாரம் - 1.10 - விகடபாரதி
பெருங்கடலும் சிறு குட்டை
            பிறத்தல் பிறவி.
            பிறவி ஒரு கடல். இல்லையில்லை பெருங்கடல் என்றாலும் பிழையில்லை.
            பிறந்த இப்பிறவியில் பிறவி எனும் பெருங்கடலை நீந்தியாக வேண்டும்.
            நீச்சல் தெரிகிறதோ, தெரியவில்லையோ மனிதன் எனும் பிறப்பெடுத்து பிறந்து விட்டால் அவனைத் தூக்கி கடலில் போட்டு விடுகிறது இந்த உலகம். அதை நீந்திக் கடந்துத் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.
            பிறந்த எல்லா மனிதர்களும் இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து விடுவதில்லை.
            போட்ட இடத்திலே மிதந்து கொண்டிருப்பவர்கள் சிலர்.
            போட்ட இடத்திலிருந்து சிறிது முன்னேறி நீந்திக் கொண்டிருப்பவர்கள் சிலர்.
            கால்வாசிக் கடலை நீந்திக் கடந்தவர்கள் சிலர்.
            அரைவாசிக் கடலை நீந்திக் கடந்தவர்கள் சிலர்.
            முக்கால்வாசிக் கடலை நீந்திக் கடந்தவர்கள் சிலர்.
            முழுக்கடலையும் நீந்திக் கடந்தவர்கள்தான் மனிதனாய்ப் பிறந்ததற்கான முழுமையைப் பெறுகிறார்கள்.
            பிறவியெனும் இப்பெருங்கடலை முழுமையாக நீந்திக் கடப்பதற்குள்தான் எத்தனை எத்தனை தடைகள்!
            கடலை நீந்திக் கடப்பது என்பது அவ்வளவு சுலபமா என்ன?
            அலைகளின் சீற்றம், கொடுஞ் சுறாக்களின் தாக்கம், நடுக்கடலில் திசை தெரியா குழப்பம் என எவ்வளவு இடர்பாடுகள். இவ்வளவையும் கடந்து நீந்திக் கடப்பதற்கு  நமக்கு முன் நீந்திச் சென்ற ஒருவரின் பழுத்த அனுபவம், வழிகாட்டல் தேவைப்படுகிறது.
            அவர் சென்ற வழியைப் பின்பற்றி அவர் சென்ற அடியொற்றி நீந்திக் கடப்பது எளிதாகிறது, கொலம்பஸூம், வாஸ்கோடகாமாவும், அமெரிக்கோ வெஸ்புகியும் கடற்பயண வழிகாட்டியான வரைபடங்களைத் தந்த பிறகு எளிதான கடற்பயணங்களைப் போல. இல்லையேல் எந்த வழியில் நீந்தினால் நீந்திக் கடக்க முடியும் என்பதைக் கண்டறிவதற்குள் வாழ் நாட்கள் முடிந்து போகிறது. எதிர்வரும் இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பதைச் சிந்தித்து முடிவெடுப்பதற்குள் பிறவி முடிந்து போகிறது.
            ஒரு விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது கடலைக் கடக்கும் கப்பல் போன்றதுதான். ஏன் கப்பல் கடலைக் கடக்க வேண்டும்? கடலின் இடர்பாடுகளை, தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டால்... கப்பல் செய்யப்பட்டதன் நோக்கம் அதற்காகத்தானே. கப்பல் செய்யப்பட்டதன் நோக்கம் கடலைக் கடப்பதற்குதான். கரையிலே நின்றால் கப்பலுக்குப் பாதுகாப்புதான். என்றாலும் கப்பல் அதற்காகச் செய்யப்படவில்லை. ஆபத்துகள், இடர்பாடுகள், தாக்குதல்களை இவைகளை எதிர்கொண்டு வெற்றிகரமான கடல் பயணத்தை எதிர்கொள்ளத்தான் செய்யப்படுகின்றன.
            இந்தப் பிறவியில் பிறப்பு எடுத்ததன் நோக்கமும் கப்பலின் நோக்கமும் போன்றதுதான். பிறவியெனும் பெருங்கடலை எத்தகைய இடர்பாடுகள், தாக்குதல்கள், ஆபத்துகள் இருந்தாலும் நீந்திக் கடக்க வேண்டும். வாழும் வரைப் போராட வேண்டும்.
            இப்பெருங்கடலை நமக்கு முன் எதிர்கொண்டு செம்மையான வழியைக் கண்டறிந்து, இடர்பாடுகளை இன்முகத்தோடு எதிர்கொண்டு, ஆபத்துகளை அசால்ட்டாகக் கடந்து, தாக்குதல்களைக் கண்டு அஞ்சாது உறுதியோடு நீந்திக் கடந்தவர்கள் இருக்கிறார்கள்.
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று கருதத் தக்க மனிதர்கள் அவர்கள். அதாவது நம் முன்னோடிகள், நம் முன்னோர்கள், நம் தெய்வங்கள். அதாகப்பட்டது அவர்களே நம் இறைவன்கள்.
            கார்த்திக் சுப்புராஜ் ஒரு படம் எடுத்தார் அல்லவா, நம் குடும்பத்தில் இருக்கும் பெண்களே இறைவி என்று. அதுபோல நம் முன்னோர்கள், நாம் வாழ வழிகாட்டியச் செம்மல்களே நம் இறைவன்கள்.
            நாம் எதிர்கொள்ளப் போகும் கடற்பயண ஆபத்துகளை, வழிக் குழப்பங்களை, சிக்கல்களை நமக்கு முன்னே எதிர்கொண்டவர்கள் அவர்கள். தாம் பட்ட இடர்பாடுகளை தம் சந்ததிகள் சந்திக்கக் கூடாது என அதற்கான வழிமுறைகளைப் பாடமாகச் சொல்லிச் சென்றவர்கள் அவர்கள். வருங்காலச் சந்தததிக்கு வளமான காப்பு செய்த அதனாலேயே அவர்கள் இறைவன்கள் ஆகிறார்கள்.
            அவர்கள் சென்ற அடியைப் அதாவது அவர்கள் சென்ற வழியைப் பின்பற்றி நீந்தினால் உற்சாகம் குறையாமல், தடைகளைக் கண்டு தயங்கிடாமல், உத்வேகம் பெற்று நீந்திக் கடந்து விடலாம். இல்லையென்றால் நீந்திக் கடப்பதில் தடைகள் நேர்ந்து எடுத்தப் பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றாமல் போய் விடலாம்.
            செய்யப்பட்ட கப்பல் தன் கடற்பயணத்தைச் சரியாக நிறைவு செய்யா விட்டால் எப்படி இழிவுக்கு உள்ளாகிறதோ, அதுபோலத்தான் பிறந்து விட்ட மனிதன் பிறவியெனும் இப்பெருங்கடலை ஆசா, பாசம், அன்பு, பகை, நட்பு, துரோகம், பரிவு, வஞ்சகம், பாராட்டு, பொறாமை, ஏற்றம், இறக்கம், புகழ்ச்சி, இகழ்ச்சி, நன்மை, தீமை என எல்லாவற்றையும் கடந்து நீந்திக் கடந்ததாக வேண்டும்.
            இவ்வளவு தடைகளையும் கடந்து நீந்திக் கடப்பது சுலபமா? ஒரு சிலர் இவைகளில் ஏதேனும் ஒன்றில் அகப்பட்டு அங்கேயே தங்கி விடுகிறார்களே! புகழ்ச்சியில் மயங்கி அங்கேயே தங்கியவர்கள் இருக்கிறார்கள். இகழ்ச்சியில் மனம் உடைந்து சோர்ந்து கிடப்பவர்கள் இருக்கிறார்கள். நட்பில் ஏமாந்து சிதிலமாகிப் போனவர்கள் இருக்கிறார்கள். பகையைக் கண்டு பயந்து பம்மிக் கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி ஏதேனும் ஒன்றில் அகப்பட்டு அங்கேயே தங்கி விடாமல், பிறவியெனும் மிகப் பெரும் பெருங்கடலைச் சாகசப் பயணமாகக் கருதி, புதுப்புது அனுபவங்களைப் பெறும் ஆர்வத்தோடு நீந்திக் கடந்த நம் முன்னோர்கள் எனும் இறைவன்களின் கடல்பயண வரைபடம் அறிவுரைகள் எனும் வடிவில், நூல்கள் எனும் வடிவில், போதனைகள் எனும் வடிவில், கோட்பாடுகள் எனும் வடிவில், தத்துவங்கள் எனும் வடிவில் நம்மிடம் இருக்கின்றன. அது அவர்கள் காட்டிய வழி. அவர்கள் சென்ற அடி. அவ்வடியைப் பின்பற்றி நடந்தால் அதாவது நீந்தினால் பிறவிப் ‍பெருங்கடல் என்ன? இந்தப் பிரபஞ்சப் பெருவெளியையும் கடந்து விடலாம்.
            ஆம்! பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் முன்னோர் வழி வந்த ஜீன்களின் அடிச்சுவடு மரபில் பொதிந்து இருக்கிறது. அவர்கள் காட்டிய வழி அனுபவம் எனும் வடிவில் அறிவுக் களஞ்சியங்களாக நிறைந்து இருக்கிறது. ஆர்வமும், ஊக்கமும் கொண்டு அவர்கள் காட்டிய வழியில் முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது!
            அவர்கள் காட்டிய அடியைப் பின்பற்றி நீந்தினால் பெருங்கடலும் சிறு குட்டை. அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற மறந்தால் சிறு குட்டையும் பெருங்கடல்.
            பெருங்கடல் என்பது ஓர் உருவகம். பிறந்த பிறப்பு எனும் பிறவியை எளிதாக நாம் புரிந்து கொள்ள வள்ளுவப் பேராசான் எடுத்துக் கொண்ட புரிதலுக்கான ஒரு வழிமுறை அது. நமக்காக எவ்வளவு‍ மெனக்கெட்டு சிந்தித்து இருக்கிறார் பாருங்களேன்!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...