3 Jan 2018

மனக்கவலைக்கு மருந்து

குறளதிகாரம் - 1.7 - விகடபாரதி
மனக்கவலைக்கு மருந்து
            மனக்கவலை இல்லாத மனிதர்கள் யார்?
            கிராமங்களில் மூக்கு இருக்கும் காலம் வரை சளி இருக்கும் என்பார்கள். அது போல் மனம் இருக்கும் காலம் வரை மனக்கவலை இருந்துதான் தீருமா? அதை நீக்க வழி கிடையாதா?
            'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கு ஒரு இடம் வேண்டும்!' என்ற புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன் பாடுவது போல பாடி மருகி அலைவதிலே வாழ்க்கை கழிந்து விடுமா?
            வள்ளுவர் காலத்திலே மனிதர்களுக்கு மனக்கவலை எனும் பிரச்சனை இருந்திருக்கிறது. இந்த அளவுக்கு தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளராத காலக்கட்டம் அது. மனிதர்கள் எளிமையாக, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலக்கட்டம் அது.
            அப்போதே அப்படி என்றால்... இப்போது கேட்கவா வேண்டும்? வாட்ஸ் அப் வஞ்சங்கள், பேஸ்புக் பழிவாங்கல்களைப் பட்டியல் போட்டால் பக்கங்கள் தாங்காது.
            மக்கள் கூடி வாழ்ந்த வள்ளுவர் காலத்திலே மனக்கவலை என்றால், இன்று ஒவ்வொரு மனிதனும் தனித்தனித் தீவாய் வாழும் காலக் கட்டத்தில் மனக்கவலையை மனநோயாக்கி அதற்கு மருத்துவம் செய்யும் தனி மருத்துத் துறையே வந்து விட்டது.
            இப்படி மருத்துவம் இல்லாமல், மருந்து இல்லாமல் பைசா காசு செலவில்லாமல் அதைப் போக்க ஏதேனும் ஒரு வழியுண்டா என்றால் வழியிருக்கிறது.
            காலங்கள் ஓடுகின்றன. வாழ்க்கை முறைகள் மாறுகின்றன. வளர்ச்சிகள் உண்டாகின்றன. என்றாலும் மனிதனின் சிக்கல்களும், பிரச்சனைகளும் அதன் அடிப்படையான தன்மையிலிருந்து மாறவில்லை என்பதைத்தான் மனக்கவலை என்பதை மையமாகக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் கால மனிதனுக்கும் மனக்கவலை இருந்திருக்கிறது. இந்தக் கால மனிதனுக்கும் அது இருக்கிறது. மிக மிக மிக அதிகமாகவே இருக்கிறது. வருங்கால மனிதனுக்கும் அது இருக்கத்தான் போகிறது.
            அப்படி எந்தக் கால மனிதனுக்கும் மனக்கவலை இல்லாமல் இருக்க ஒரு வழியுண்டா என்றால் வழியிருக்கிறது.
            என்ன வழி என்றால்... அந்த வழிதான்... அவரவர்க்கான வழிகாட்டி. உங்களுக்கென ஒரு வழிகாட்டி இருந்தால் மனக்கவலை இருக்காது.
            வழிகாட்டி இல்லாத போதுதான் பாதை புரியாமல் இருட்டாக இருக்கிறது. புதிராக ஒரு மாயத்தோற்றம் உண்டாகிறது. வழிகாட்டி வந்து விட்டால் பாதை புலனாகிறது. மனக்கவலை எனும் இருள் விலகுகிறது. மாயத்தோற்றம் அகலுகிறது.
            ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மகாத்மாவாம் காந்தியடிகள் தன்னுடைய வழிகாட்டியாய் டால்ஸ்டாய், ரஸ்கின் போன்றோர்களைக் கொண்டு தன் மனக்கவலையை அகற்றிக் கொண்டார்.
            பாரத இளைஞர்களின் விடியலாம் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரஹம்சரைத் தன் வழிகாட்டியாய்க் கொண்டு தன் மனதைக் குடைந்த கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்ற ஐயப்பாடெனும் மனக்கவலையைப் போக்கிக் கொண்டார்.
            பிளாட்டோவுக்கு சாக்ரடீஸ், அரிஸ்டாட்டிலுக்கு பிளாட்டோ என்று இந்த மனக்கவலைக்கான மருந்து கீழை நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
            வழிகாட்டிகள் தனக்குவமை இல்லாதவர்கள். அவர்களால்தான், அந்த வழிகாட்டிகளால்தான், அந்த ஒளி விளக்குகளால்தான் மனக்கவலை எனும் நோய் விலகுகிறது. இல்லாவிட்டால் கஷ்டம்தான், அரிதுதான்.
            தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர்.
            ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வழிகாட்டிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதன் மூலமே மனக்கவலை தீர்கிறது.
            உங்களுக்கான வழிகாட்டி யார் என்று தேடுங்கள்.
            அவர்களைக் கண்டடையும் வரை வாழ்வில் ஏதோ ஒன்று குறைவது போலத்தான் தோன்றும். அந்த மனக்குறையை அவர்களை அடையும் வரை சரிசெய்ய முடியாது.
            அந்த வழிகாட்டி காந்தியா? பெரியாரா? அம்பேத்காரா? விவேகானந்தரா? சாக்ரடீஸா? உங்கள் ஊரிலே இருக்கும் ஒரு பெரியவரா? உங்கள் குடும்பத்திலே இருக்கும் உறவா? ஒவ்வொருவருக்கும் ஒருவர். யார் அவர்? அவரை நீங்கள்தான் கண்டடைய வேண்டும். அவரைக் கண்டடையுங்கள். மனக்கவலைக்கான மருந்து கொள்ளுங்கள்.
            இதுதான் மனக்கவலைக்கு வள்ளுவர் சொல்லும் மருந்து.
            மனக்கவலைக்கு மருந்து சொன்ன மருத்துவராம் வள்ளுவருக்கு மருத்துவக் கட்டணம் கொடுக்க வேண்டாமா? என்ன கொடுக்க வேண்டும் என்கிறீர்களா?
            உங்கள் வழிகாட்டியை அடையுங்கள். ஒளி கூட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வழிகாட்டியின் மூலம் பெற்ற ஒளியின் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு மனக்கவலை தீர்க்கும் வழிகாட்டியாய் மாறுங்கள். அதுதான் வள்ளுவருக்கும் கொடுக்க வேண்டிய மருத்துவக் கட்டணம்.
            அப்துல் கலாம் குறிப்பிடுவது போல இந்த தேசம் நல்ல முன்மாதிரிகள் இல்லாமல் அல்லாடுகிறது. ஒரு தேசம் தவறான பாதையில் போகாமல் இருக்க வேண்டும் என்றால் அந்த தேசத்தில் நல்ல முன்மாதிரிகள் இருக்க வேண்டும். அதான் அன்பர்களே நல்ல வழிகாட்டிகள் இருக்க வேண்டும். மனக்கவலை தீர்க்கும் தனக்குவமை இல்லாதவர்கள் இருக்க வேண்டும்.
            அப்படி ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியைப் பெற்று வழிகாட்டியாக மாறினால் அவர்கள் ஒரு தனிநபர்க்கு மட்டுமா மருந்தாகிறார்கள்? இந்தத் தேசத்திற்கே, இந்த உலகுக்கே மருந்தாகிறார்கள். விவேகானந்தரிடம் மருந்து உண்டது இந்தத் தேசம் மட்டுமா? உலகமேதானே மருந்துண்டது. அவர்கள் பிரபஞ்ச மருந்து.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...