அனைவர்க்கும் முதல் இனிய புத்தாண்டு
வாழ்த்துகள்!
அறிவுப் பகிர்தல் வேண்டும் என்பதற்காக
படிப்பதில் சிறந்த வரிகளை நாளொரு நன்மொழி என்று பதிந்து வருவது என ஒரு முடிவு.
ஜனவரி 1, 2018 புத்தாண்டு அன்று ஜி.நாகராஜனின்
'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்ற வரியைப் பதிந்து விட்டது,
ஆசிரியர் இராமமூர்த்தி அருமையான வாசகம்
என்றார்.
நண்பன் கணேஷ் அதற்குப் புத்தாண்டு வாழ்த்து
சொல்லியிருந்தான். நண்பனில் மகத்தான நட்புப்பயல் அவன்.
பண்டு உத்திரா உண்மைதான் என்றார்.
முகநூலில் போட்டு அநேகமாக மிக அதிகபட்சமாக
மூன்று கமெண்ட்டுகள் வாங்கிய பதிவு அதுவாகத்தான் இருக்கும் என்று நினைப்பு.
மத்தபடி அலைபேசியில் எதிர்கொண்டது கண்டனங்கள்.
புத்தாண்டு அன்று போடக் கூடிய வாசகமா என வறுத்து எடுத்து விட்டார்கள்.
முகநூலில் பதிந்ததை அப்படியே வாட்ஸ் அப்பில்
பதிவது. அதில் யாரேனும் பிராண்டி விடுவார்களோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில்
நல்லவேளையாக யாரும் எதுவும் அப்படிச் செய்து விடவில்லை.
ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் முன் சல்லிப்பயலாக
இருக்கக் கூடாது என்ற ஆசை. மற்றபடி மனதுக்குள் அப்படி ஒரு சல்லிப்பயலாக இருப்பதில்தான்
ஆனந்தம் மற்றும் பேரானந்தம்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு இப்படி ஒன்றைப்
போட்டாகி விட்டது. தமிழ்ப் புத்தாண்டுக்கு இதை விட பயங்கராமாகப் போட வேண்டும் என்ற
ஆசையெல்லாம் இல்லை.
ஆங்கிலப் புத்தாண்டு என்ற பிரக்ஞை இல்லாமல்
பதிந்து விட்டது. நிறைய புத்தாண்டு வாழ்த்துகள் வந்த பிறகுதான் சுதாரிப்பதற்குள் பதிவு
கடந்து கை மீறிப் போய் விட்டது.
வருஷத்துக்கு ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப்
புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு என்று நிறைய புத்தாண்டுகள் வருவதன் கஷ்டம் இது.
நாம் அநேகமாக எல்லா புத்தாண்டுகளையும் கொண்டாடி விடுகிறோம்.
வருசத்துக்கு ஒரு முறை புத்தாண்டு கொண்டாடுவது
என்ற நிலை மாறி ஒரு வருசத்துக்குள்ளேயே நிறைய புத்தாண்டுகளைக் கொண்டாடி விடுகிறோம்
அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு புத்தாண்டு என்பது மாதிரியோ அல்லது நான்கு மாசத்துக்கு
ஒரு புத்தாண்டு என்பது மாதிரியோ, அவரவர் கொண்டாடும் புத்தாண்டுகளின் எண்ணிக்கையைப்
பொருத்து இது வேறுபடும்.
நமக்குக் கொண்டாட்டங்கள் தேவையாக இருக்கிறது.
நம்மை மட்டுமே கொண்டாடுபவர்கள் தேவையாக இருக்கிறார்கள்.
பள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள் ஜூனில்
துவங்குகிறது. கல்லூரிகள் ஜூனோ, ஜூலையோ ரிசல்ட்டைப் பொருத்து முன்னே பின்னே இஷ்டப்படி
துவங்கும்.
பொருளாதார வருஷம் ஏப்ரலில் துவங்குகிறது
என்கிறார்கள்.
ஆட்சியமைப்பதாவது இந்த ஜனவரியில் துவங்குகிறதா?
எப்போது ஐந்தாண்டு கால ஆட்சி முடிகிறதோ அப்போதுதான் துவங்குகிறது. அல்லது திடீர்த்
தேர்தல்களால் மாறினாலும் ஜனவரி ஒன்றில் துவங்குவதில்லை.
அதனால் ஆங்கிலப் புத்தாண்டில் லாபம் எதுவும்
என்று சொல்லி விட முடியுமா?
தொலை தூரக் கல்வியில் காலண்டர் வருஷத்தில்
படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது.
வெறென்ன?
டைரி, காலண்டர் புதிதாக வாங்க வேண்டியிருக்கிறது.
வாசலில் கலர்க் கோலம் போட்டு ஹேப்பி
நியூ இயர் என்று கட்டாயம் எழுத வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் வீட்டில் இருக்கும்
பெண்கள், பிள்ளைகள் கோபித்துக் கொள்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment