16 Jan 2018

சிநேகித நிறுவன பிரஸ்தாபங்கள்

சிநேகித நிறுவன பிரஸ்தாபங்கள்
            எஸ்.கே.வுக்கு தனது பிரிய சிநேகிதரான ஒருவரைப் பற்றிய மேலும் ஒரு புரிதல் கிடைத்தது. அப்பிரிய சிநேகிதர் தெரிந்து கொண்டே கேட்கும் ரகம். ஏதேனும் விளக்கம் சொன்னால் விவரம் தெரிந்த என்னையே ஏமாற்றுகிறாயா என்று மண்டையில் குட்டும் வகையறா.
            எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளான் விளக்கம் சொன்னால் ஆர்வமாக கேட்பவர்கள் இருக்கிறார்களே! இச்சிநேகிதப் பிரானாகப்பட்டது என்ன வித்தியாசமாக மண்டையில் குட்டுகிறதே என்று நினைத்தால் காரணம், விவரம் அறியாதவர்கள் ஒரு விவரத்தைச் சொல்லும் போது ஆர்வமாகக் கேட்பார்கள், தெரிந்து கொண்டே தெரியாதது போல அல்லது நம்மை ஆழம் பார்ப்பது போலக் கேட்பவர்கள் அந்த வேலையைத்தான் செய்வார்கள். அதைத்தான் அச்சிநேகிதப் பிரானாகப்பட்டது செய்கிறது. ஆகவே கேட்பவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அதற்குத் தகுந்தாற் போல் பேச வேண்டும். எல்லாரிடத்தும் ஒரே மாதிரியாகப் பேசுவது எடுபடாது. மண்டையில் குட்டுப்படச் செய்யும்.
            நிறுவனத்தைப் பொருத்த வரையில், அதுவும் பொது எனப் பெயர் கொண்டு இயங்கும் நிறுவனத்தைப் பொருத்த வரையில் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பவன்தான் புத்திசாலி. இங்கு வேலை பார்ப்பதை விட வேலை பார்க்காமல் இருப்பதுதான் அதிகமாக கெளரவிக்கப்படுகிறது. எஸ்.கே. இங்கும் பல விதங்களில் அல்லாடுகிறான். வேலையைச் செய்யாமல் நல்ல பெயரை வாங்கிக் கொள்வதற்கெல்லாம் ஒரு நிறுவனமா என்று கேட்டு விடாதீர்கள். அதற்குப் பதிலில்லை.
            எஸ்.கே. இப்போதெல்லாம் பெரும்பாலும் எதுவும் பேசுவதில்லை. பேசவும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறான். எல்லாவற்றிற்குமான வினாக்கள் மற்றும் பதில்களுக்கு உட்பட்ட இரண்டு பதில்களை வேண்டுதல்கள் எனும் வடிவில்  இருபத்து மணி நேரமும் தயார் நிலையில் அவனிடம் இருக்கின்றன. பார்த்துப் பண்ணிக் கொடுங்க என்பது ஒரு பதில். முடியாது என்றால் பரவாயில்ல பார்த்துக்குங்க என்பது மற்றொரு பதில். இதைத் தவிர இங்கு வேறு பதில்களைச் சொல்லி விட முடியாது என்பதில் அவன் தெளிவடைந்து விட்டான்.
            இப்போது மீண்டும் எஸ்.கே.வின. சிநேகித கூமுட்டை விசயத்திற்கு வருவோம். அக்கூமுட்டையைப் பொருத்த வரையில் தெரிந்து கொண்டே தெரியாதது போல கேட்கக் கூடியவன் என்பது முன்னரே சொல்லப்பட்டதுதான். அவனுக்கு எல்லாம் விளக்கம் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவனுக்கு விளக்கம் சொல்ல சொல்ல... அவன் தன் மனத் திருப்தியை அடைய வேண்டும் என்பதற்கு ஏற்ப கூடுதல் வினாவைத் தொடுத்துக் கொண்டே இருப்பான். அவனை ஏன் எஸ்.கே. திருப்தி செய்ய வேண்டும்? அவனுடைய திருப்தியை அவன் தனக்குள்தான் தேடிக் கொள்ள வேண்டும். எஸ்.கே. எவ்வளவுதான் முயன்றாலும் அவனுக்குத் திருப்தியையும் தர இயலாது. அது கடினமானதும் கூட. எஸ்.கே. உதவ நினைப்பதாக நினைக்கிறான். யாரைக் கேட்டாலும் இது ஒரு உதவியே கிடையாது. அவனாகச் சென்று சிக்கிக் கொள்ளும் சிக்கலுக்கு எஸ்.கே. என்ன உதவி செய்து விட முடியும்? சில மண்டை கிறுக்குகள் அப்படிச் செய்து கொள்ளும். புகை உயிரைக் குடிக்கும் என்று எழுதி வைத்திருக்கும் வாசகத்தைப் பார்த்த பிறகும் புகைப் பிடிப்பவர்களைப் போல இந்த மண்டைக் கிறுக்குகளும் ஒரு வகை ரகம். எஸ்.கே. எதுவும் செய்வதற்கில்லை.
            இப்போது மீண்டும் நிறுவனத்துக்கு வருவோம். எஸ்.கே. பாட்டுக்குப் பேசாமல் இருந்தாலும், அதையையும் மீறி எப்போதாவது பேசுவதில் தேவையில்லாத பல இக்கட்டுகளில் மாட்டிக் கொண்டு விடுவதுண்டு. அவனாகப் போய் மூக்கை நுழைத்து வேண்டாத வினைகளை வாங்கி வைத்துக் கொண்டு விடுகிறான்.
            அவன் பேசாமல் இருப்பதற்கு கீழ்காணும் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டான். ஏற்கனவே பிராஸ்தாபிக்கப்பட்டதுதான் இது என்றாலும், அப்பிராஸ்தாபத்தை வாசிக்காதவர்கள் இருக்கலாம் என்ற நோக்கில் இங்கு மறுபடியும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.
            எப்படிப் பார்த்தாலும் எல்லாம் அதனதன் இயல்பில் நன்றாகவே இருக்கின்றன. எஸ்.கே. எந்தத் திருத்தத்தையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதற்குத் திருத்தம் தேவையென்றால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு அதுவே திருத்தத்திற்கு உள்ளாகும். எஸ்.கே. திருத்த வேண்டிய அவசியமே இல்லை. எஸ்.கே.வின் அண்மைக்காலப் பதிவுகள் பலவும் இதைச் சுற்றியே சுழன்றடிப்பதால், இந்த இடத்தில் ஒரு கூடுதல் விளக்கத்தைக் கொடுக்க வேண்டியதாகிறது. ஒரு மனநோயாளிக்கு ஒரு மனநல மருத்துவரை விட எஸ்.கே.வால் அப்படியென்ன பிரமாதமான சிகிச்சையைக் கொடுத்து விட முடியும்? ஏன், ஒரு மனநோயாளியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதில் எஸ்.கே.வின் பங்கு ஏதேனும் இருக்க முடியாதா என்கிறீர்களா? அதைப் போன்ற கொடுமையான விசயம் இந்த உலகில் ஏதேனும் இருக்கிறதா என்ன? எந்த மனநோயாளி தன்னை மனநோயாளி என்று ஒத்துக் கொள்வான்?
            எஸ்.கே.வின் சிநேகித, நிறுவன பிரஸ்தாபங்களைக் கேட்ட பின் உங்களுக்கு சற்று மனசு லேசாகியிருக்கும். உங்கள் நிலைமை இதை விட கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் (பெட்டராகத்தான்) இருக்கும். எஸ்.கே. இதையெல்லாம் சொல்வதன் நோக்கமே அதுதான். எப்படியோ! எஸ்.கே.வோடு ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்குத் திருப்பி வந்தால் சரிதான். இதை ஒரு தேசிய வியாதியைப் போல் பரப்பும் கலாச்சாரத்தில் இறங்கி விட்டான் எஸ்.கே. என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். எஸ்.கே. உங்களுக்கு உதவவே நினைக்கிறான். மண்டையில் குட்டுப்படுவது அவன் தலையெழுத்து.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...