16 Jan 2018

கடவுள் உருவான வரலாறு

குறளதிகாரம் - 2.10 - விகடபாரதி
கடவுள் உருவான வரலாறு
            வான் சிறப்பு என்ற திருக்குறளின் இரண்டாவது அதிகாரம் வான் என்பதில் தொடங்கி வானில் நிறைவுறும்.
            வானின்று உலகம் வழங்கி வருதலான்... என்பது அவ்வதிகாரத் தொடக்கம்.
            வான் இன்று அமையாது ஒழுக்கு என்பது அவ்வதிகார நிறைவு.
            வானே தொடக்கம், வானே நிறைவு.
            வான் என்பது இன்னும் ஒரு அமானுஷ்யமே. வானில் பறந்த பிறகும், செயற்கைக் கோள்கள் சென்று ஆராய்ந்த பிறகும் அதன் அமானுஷ்யம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்குக் காரணம் வான் என்பது மேகம் கொண்ட நம் கண்களில் அகப்படும் வானைத் தாண்டியும் பிரபஞ்சமாக விரிகிறது.
            புரிந்து கொள்ள முடியாத அமானுஷ்யத் தன்மையை இறைமை என்றோ, தெய்வீகம் என்றோ, கடவுள் என்றோ புரிந்து கொள்ள முயல்வது உலகெங்கும் ஒரு வழக்கமாக இருக்கிறது.
            அவ்வகையிலே வானில் இறைவன் இருப்பதாக, அவர்கள் வானவர்கள் என்பதாக, அவர்கள் வான் உலகத் தேவர்கள் என்பதாக கற்பிதம் பிறக்கிறது.       வானிலிருந்து இப்படித்தான் கடவுள் குதித்து வருகிறார்.
            இதன் அடிப்படையில்தான் நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்று ஆகாயத்தை கை நீட்டிக் காண்பிக்கும் அனிச்சையை இன்றும் பலரிடம் காணலாம்.
            இப்படித்தான் கடவுள் உருவாகிறார். மனித உளவியல் அப்படித்தான் கடவுளை உருவாக்குகிறது.
            வள்ளுவர் அதையும் அறிவியல் பூர்வமாக அணுகுகிறார். வாழ்க்கையின் ஆதாரத்தையே இறைமைத் தன்மை என்கிறார். உயிர்களின் உருவாக்கத்திற்கான அடிப்படைத் தன்மையே அவரைப் பொருத்த மட்டில் கடவுள் தன்மை. உலக வழக்கம் செம்மையாக நிலைபெறுவதற்கான வழிமுறைகளே அவர் சுட்டும் தெய்வீகத் தன்மை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரையே அவர் தெய்வம் எனச் சுட்டுகிறார்.
            நீர் இன்று அமையாது உலகு. ஆம்! நீர் இன்றி எவ்வாறு அமையும் உலகத்தின் உயிர்கள்? நீர் இருந்திருந்தால் எட்டுக் கோள்களிலும் உயிர்கள் இருந்திருக்கும். இக்கூற்று எந்த அளவுக்கு விஞ்ஞான ரீதியாக உண்மையோ, அதே அளவுக்கு வான் இன்று அமையாது ஒழுக்கு.
            ஒழுக்கம் நிலைபெறுவதற்கு வானின்று பொழியும் மழையே முழுமுதற் காரணம். வான்மழை பொய்க்கும் பாலை நிலம் களவுக்குரியதாகிறது. வறட்சிக் காலங்களிலும், பஞ்ச காலங்களிலும் உருவாகும் களவுகளும், ஒழுங்கீனங்களும் அதற்கான மேலதிகச் சான்றுகள்.
            தனி மனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் இணைந்தே மேலும் செழுமைபட்டு உயர்ந்த அறங்கள் உலகில் உருவாகின்றன.
            வான் பொய்த்து பசி தலைவிரித்தாடும் பூமியில் தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதும், சமூக ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதும் சவாலானவைகள்.
            அறத்தை நிலைநிறுத்துவதற்கான வழிமுறையாகவும் செயல்முறையாகவும் திகழும் ஒழுக்கத்தை வானின்று பொழியும் மழையின்றி நிலைநிறுத்த முடியாது. உலகில் பொதுவாக நினைக்கப்படுவது போல உலகம் நிலைபெறுவதற்கோ, உலகில் ஒழுக்கம் கடைபிடிக்கப்படுவதற்கோ காரணம் கடவுளோ, கடவுள் சக்திகளோ, கடவுள் சங்கதிகளோ அல்ல.
            வான் மழையே உலகம் நிலைபெறக் காரணம். வான் மழையே உலகில் ஒழுக்கம் கடைபிடிக்கப்படக் காரணம்.
            நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.
            நீர் இன்று அமையாது உலகு. அந்த நீர் உலகில் அமைவதற்குக் காரணமும் வான் மழையே. வான் இன்று அமையாது ஒழுக்கு. நீர் நிறைந்த உலகில் ஒழுக்கம் அமைவதற்குக் காரணமும் வான் மழைதான்.
            உலகுக்கு உயிர் கொடுத்து, உயிர்‍ கொண்ட உடல்களுக்கு உணவு கொடுத்து, உணவு கொண்ட இனங்களுக்கு உயிரினும் மேலான ஒழுக்கம் கொடுத்து, ஒழுக்கம் கொண்ட மனிதம் உயர்ந்த அறத்தில் நிலைப்பதற்குக் காரணமான மழையே எல்லாம். மழையே இறை. நீராவிப் போக்கால் பூமியைக் கடந்து மேகத்தின் உள் இருக்கும் மழையே கடவுள். மழையெனும் இறை, மழையெனும் கடவுள் உருவாக்கிய மனிதமே தெய்வம்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...