அட கிரகமே! - புலம்பும் மனிதனின் குரல்
ஓசை
சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எஸ்.கே.வின்
தலையாய பிரச்சனையாக இருக்கிறது. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால்தான் என்ன? அதுதான்
மனிதகுலம்.
மனிதனுக்கு ஏற்படும் எண்ணங்கள் விசித்திரமாக
இருக்கின்றன. தான்தான் இந்த யாவற்றையும் தாங்கிப் பிடிப்பது போலவும், மற்றவர்கள் எதையும்
செய்யாதது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி நல்ல மனிதர்களும் அரசியல்வாதிகளாகத்தான்
முயற்சிக்கின்றனர்.
சில நிர்வாக அமைப்புகளைப் பொருத்த வரையில்
எதைச் செய்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை. செய்யாமல் இருந்தும் எந்தப் பிரயோசனமும்
இல்லை. அந்த நிறுவன மக்கள் அப்படி இருக்கிறார்கள். நிர்வாக அமைப்பினர்களும் அப்படியே
இருக்கிறார்கள்.
ஏதோ செய்யப்படுகிறது. அதையும் தாண்டி
நிர்வாகங்களும், நிறுவனங்களும் உருப்பட்டு வருவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதில்
சிலர் அவர்களாக புரிந்து கொண்டு முன்னே வந்தால் உண்டு. மற்றபடி எதுவும் சொல்வதற்கில்லை.
மிகச் சிறப்பாகக் செயல்படும் நிர்வாக நிறுவனங்களிலும்தான்
மக்குகள், மண்டுகள் என்போர் இருக்கிறார்கள். மிகக் குறைவாக செயல்திறன்கள் வாங்கும்
மக்கள் இருக்கிறார்கள் எனும் போது எஸ்.கே. பணியாற்றும் நிறுவனத்தை மட்டும் எப்படி
விதிவிலக்காக்கி விட முடியும்!
நிறுவனச் செயல்முறைகளை அதிகபடுத்த வேண்டும்
என்றால் அதற்கான முயற்சிகளைக் கவர்ச்சிகரமாக எடுக்க வேண்டும். அதற்குச் சற்றுப் பொருளாதாரச்
செலவினங்கள் ஆகக் கூடும். அதற்கு அச்சப்படும் ஒரு தலைமை உள்ள நிறுவனத்தில் எதைச் செய்ய
இயலும்?
இரண்டாவதாக எஸ்.கே. எதைச் செய்தாலும் அதை
தடுக்க என்ற ஒருவன் அங்கு இருக்கிறான். அப்புறம் அவன் எப்படிச் செயல்படுவது? நிறுவன
நலனுக்காகத்தான் எஸ்.கே. செயல்படுகிறான் என்ற போதும் அதில் பொறாமைபடும் ஒருவன் இருக்கும்
போது கொஞ்சம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டி இருக்கிறது எஸ்.கே.வுக்கு.
ஆகவே எஸ்.கே. இப்போது தனக்கு எது வருகிறதோ,
தன்னால் எது முடிகிறதோ அதை மட்டும் செய்து விட்டு அமைதியாக இருந்து விடுகிறான்.
ஒரு சிலர் உயர்வான குணம் இல்லாதவர்களாக
இருக்கின்றனர். ஆகவே அவர்களை எல்லாவற்றிற்கும் பாராட்டி விட்டு ஏதோ பொழைப்பை ஓட்டிக்
கொண்டு வந்து விட வேண்டும் என்று குறியாகி விட்டான் எஸ்.கே.
தான் அங்கு வேலை பார்ப்பது ஏதோ ஒரு ஊதியத்திற்குத்தான்.
அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதற்கு மேல் வேலை பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை. அப்படி வேலை
பார்த்தாலும் அதற்கு ஒரு மதிப்பு அங்கு கிடைக்கப் போவதில்லை என்று எஸ்.கே. அடைந்த
விரக்தி நிலைக்கு நிர்வாக அமைப்பு ஒரு காரணம், நிறுவன மக்களின் உளவியல் மற்றொரு காரணம்.
பொதுப்பணிகள் என்பவனவற்றை அப்படியே நிறுத்தி
விட்டால், மனதுக்குள் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று கூட எஸ்.கே. நினைத்துப் பார்க்கிறான்.
அடப் பாவமே என் அருமை எஸ்.கே.வே?
பொது விசயங்களில் அதுவாக என்ன நடக்குமோ
அதுவே நடக்கட்டும். தானாக முண்டிக் கொண்டோ, முந்திக் கொண்டோ எந்த விசயங்களையும்
ஆற்ற வேண்டியதில்லை என்றே நினைக்கின்றான் எஸ்.கே. இப்படி ஒரு நிலையா எஸ்.கே.வுக்கு
வர வேண்டும். எல்லாம் கிரகம்!
வளைந்த மரங்கள் வளரும் காட்டில் நேராக
ஒரு மரம் மட்டும் நேராக வளர முடியாது. அப்படி வளர்ந்தால் வளைந்த மற்ற மரங்கள் அதைச்
சுற்றிப் பிணைத்து விடுமோடா எஸ்.கே!
எல்லாவற்றுக்கும் காரணம் மனதில் ஓர் எண்ணமே.
எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளில் கொண்டு போய் சிக்க
வைத்து விடுகிறது எஸ்.கே.வை.
அந்த எண்ணம் நல்லதுதான். ஆனால் அதற்கான
சூழ்நிலைகள் இல்லாத இடத்தில் அந்த எண்ணத்தை ஒளித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படுத்திக்
கொண்டு அவதிப்படக் கூடாது எஸ்.கே.வைப் போன்றவர்கள்.
*****
No comments:
Post a Comment