23 Jan 2018

உலகம் உய்ய வழி!

குறளதிகாரம் - 3.7 - விகடபாரதி
உலகம் உய்ய வழி!
            உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது தமிழ் மரபு.
            எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது,
            எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது,
            எதைப் பேச வேண்டும், எதைக் பேசக் கூடாது,
            எதை நுகர வேண்டும், எதை நுகரக் கூடாது (நுகர என்பதற்கு நுகர்வு கலாச்சாரத்தையும் இருபொருள்பட கொள்ளலாம்),
            எதை உயிர்த்தறிய வேண்டும், எதை உயிர்த்தறியக் கூடாது என்பதையெல்லாம் அதன் வகையறிந்தவர்கள் வரையறுத்து இருக்கிறார்கள். அவ்வரையறையின் படியே உலகம் நிற்கும்.
            சுருக்கமாக எதைக் கொள்ள வேண்டும், எதைத் தள்ள வேண்டும் என்று மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன் ஒழுக்கத்தில் சிறந்து உயர்ந்த அறிவில் நிற்பவர்கள் கருதுகிறார்களோ அவர்களின் கருத்தின்படியே உலகம் நிற்கும், அவ்வழியே உலகம் இயங்கும், அதையே தனது கருத்தாக உலகம் ஏற்றுக் கொள்ளும்.
            ஆபாசமாக ஒருவரைப் படம்பிடிப்பதோ, அப்படிப் படம் பிடித்ததைத் தகவல் தொடர்பு சாதனங்களில் சேமித்து வைப்பதோ, அதைப் பகிர்வதோ குற்றம் என்கிறது இந்தியச் சட்டம். எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதற்கான ஒரு வரையறை இதில் இருக்கிறது அல்லவா!
            சில திரைப்படங்களைப் பார்க்கும் போது பாத்திரங்களின் உதடு அசையும், ஆனால் என்னப் பேசினார்கள் என்று தெரியாத வகையில் பீப் ஒலி வரும். எதைக் கேட்கக் கூடாது என்பதற்கு சென்சார் போர்டு ஒரு வரையறை செய்து இருக்கிறது என்பதற்கானச் சான்று இது. அதற்காக பீப் பாடல் வெளியிட்டு நற்பெயரைச் சம்பாதித்து விட முடியாது என்பது அண்மைக்கால லிட்டில் சூப்பர் ஸ்டார்கள் சிலரின் வாழ்விலிருந்து அறிய வரும் உண்மையாகும்.
            ஒருவரின் மனம் நோகும் படி பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தண்டனைக்குள்ளாகும் செயல்களாகும். எதைப் பேசக் கூடாது என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது அல்லவா!
            புகை பிடித்தல் உடலுக்குக் கேடு என்ற சிகரெட் பெட்டிகளின் வாசகத்தைப் பார்க்கும் போது எதை நுகரக் கூடாது என்ற எச்சரிக்கை வரையறையைக் காண்கிறோம்தானே!
            மது அருந்துதல் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று புட்டிகளில் எழுதப்பட்ட வாசகமும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க வாசகமும் எதை உய்த்தறிய வேண்டும், எதை உய்த்தறியக் கூடாது என்பதைத் தெளிவாக்குகின்றனவே!
            உலகம் மேற்சொன்ன உயர்ந்தோர் வழிமுறையில்தான் நடைபோட முடியும். பள்ளிப் பிள்ளைகள், கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இருக்க வேண்டிய வேகக் கட்டுபாடு கருவியை விஞ்ஞானிகள் வடிவமைத்து இருப்பதைப்  போன்று, உலகிற்கு இருக்க வேண்டிய விவேகக் கட்டுபாடு கருவியை ஐம்புலன் அறிவை அறிந்த மெய்ஞானிகள் வடிவமைத்து இருக்கிறார்கள்.
            ஐம்புலன் அறிவால் எதைக் கொள்ள வேண்டும், எதைத் தள்ள வேண்டும் என்று அவர்கள் வகை அறிந்து வரையறை செய்திருக்கிறார்களோ அந்த வரையறையின் பக்கம்தான் உலகம் நிற்கும். அப்படி நின்றால்தான் உலகம் நிலைபெறும்.
            எவையெவை கொள்ளத் தக்கன, எவையெவைத் தள்ளத் தக்கன என்று மெய்ஞானியரின் நீதிமொழிகள் கூறுகின்றனவோ அவையவை சட்டத்தால் வரையறை செய்யப்பட்டு, அதை மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஏனென்றால் உலகம் இப்படித்தான் நடைபோட வேண்டும், தள்ளாடி விழுந்து விடக் கூடாது என்ற அக்கறை  ஆட்சி செலுத்தும் அரசமைப்பிற்கு இருக்கிறது.
            சட்டம் என்பது ஐம்புல ஒழுக்கத்தின் சாரம். அப்படி ஐம்புல ஒழுக்கத்தின் வித்தாக அமைவதே சரியானச் சட்டம். நீதிமன்றங்களில் நீதிபதிகளின் இருக்கைக்கு மேலே நாம் காணும் திருவள்ளுவரின் படமும், காந்தியாரின் படமும் ஐம்புல ஒழுக்கத்தின் காவலாகவே நீதி அமைகிறது என்பதற்கு கட்டியம் கூறுவனவே.
            இதன் மூலம் அறிய வருவது என்னவென்றால்,
            ஐம்புலன் ஒழுக்கத்துக்கு எது சரியானதோ அந்த அறிவில்தான் உலகம் நிற்கும். ஐம்புலன் ஒழுக்கத்துக்கு எது தவறானதோ அதை உலகம் விலக்கும்.
            மீண்டும் சொல்வதென்றால்,
            உலகின் சட்டம், நீதி என்பதெல்லாம் சொல்ல வருவது, உலகம் நிலைபெறுவதற்கு ஐம்புலனின் வகையறிந்த மெய்ஞானியரின் அறிவில் நிற்பது அவசியம், அதைக் காத்தல் செய்யாவிட்டால் உலகிற்கு அழிவு நிச்சயம் என்பதுதான்.   அதாகப்பட்டது இதை உலக வழக்கில் சொன்னால் சட்டம் ஒழுங்கு, மெய்ஞானியர் வழக்கில் சொன்னால் ஐம்புலன் ஒழுங்கு.
            வள்ளுவர் இதை இப்படிச் சாறாகப் பிழிந்து சாரமாக வடித்துத் தருகிறார்,
            சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.
            ஆக இக்குறள் மூலம் அறிய வருவது என்னவென்றால், 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு' என்பது தமிழ் மரபு மட்டுமன்று, உலகுக்கே அதுதான் மரபாக இருக்க முடியும். ஏனென்றால் திருக்குறள் உலகப் பொதுமறை அல்லவா!

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...