கறார் தேர்வுகளுக்கு விடு கல்தா!
யாரையும் போட்டு படுத்த வேண்டியதில்லை.
அவர்களை அவர்கள் போக்கிற்கு விட்டு விட்டு தேவையானால் பார்த்து எழுதிக் கொடுக்கச்
சொல்லி விட்டு அல்லது காப்பி அடித்துச் செய்யச் சொல்லி விட்டு அத்தோடு விட்டு விட
வேண்டும். கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தத் துவங்கினால் தேர்வு நடத்துபவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
எஸ்.கே. தான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி
இருக்கிறது என்பதால்தான் கறாராக தேர்வு நடத்தித் திருத்தும் வேலையை விட்டு விட்டது.
பெயருக்குத் தேர்வு என்ற ஒன்று இருக்க வேண்டும். அதையும் பெயருக்கு நடத்தி விட்டுப்
போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதை நன்றாக நடத்திக் கொடுக்கிறேன் என்ற பெயரில்
மண்டைக் காய்ச்சலுக்கு ஆளாக வேண்டியதில்லை.
எழுதிப் போட்டு விட்டு படித்து வரச் சொன்னால்
எப்படியோ அவர்கள் படித்து வருவார்கள். முடியவில்லை என்றால் அதை அப்படியே போர்டில்
எழுதிப் போட்டு விட்டு பார்த்து படிக்கச் சொல்ல வேண்டியதுதான். அதற்காக அவர்களைச்
சிரமப்படுத்தி அவர்களின் மனநலனையும் சிரமப்படுத்தக் கூடாது.
இப்போதெல்லாம் மேற்பார்வையாளர்கள் அவர்களது
மதிப்பீட்டைச் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆரம்பிக்கிறது இது சார்ந்த எஸ்.கே.வின் மண்டைக்
காய்ச்சல். என்ன இந்த பயிற்சியாளர்கள் இப்படி குறைந்த மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறார்களே
என்று நினைத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்து முயற்சியெடுக்க ஆரம்பித்து
இது போன்ற ஒரு காய்ச்சலான நிலைக்கு ஆளாகி விட்டான்.
முதலில் எஸ்.கே. பணியில் காய்ச்சல் இன்றி
பணியாற்ற வேண்டும் என்றுதான் நினைத்தான். அதுதான் பணியாற்றுவதில் முக்கியமானத் தேவை.
பயிற்றுநனே டென்சன் ஆனால் அப்புறம் பயிற்சியளார்களுக்குக் கோபம்தான் அதிகரிக்கும்.
அது பணியில் மேல் வெறுப்பு, எரிச்சலை அதிகபடுத்திப் பயிற்சியைக் கொடுக்க விடாமல் செய்து
விடும். பயிற்சி கொடுப்பது முக்கியம். இல்லையென்றால் அப்படி கொடுப்பதாகச் சொல்லி
வாங்கிக் கொண்டிருக்கும் ப்பூவாவுக்கு வழியில்லாமல் போய் விடும்.
பயிற்சியாளர்களிடம் எதையும் வலுகட்டாயமாக
திணிக்க ஆரம்பித்தால் போராட்டம்தான் ஆரம்பிக்கிறது. அது பயிற்சியாளருக்கும், பயிற்றுநருக்குமான
உறவில் விரிசல்களை உண்டாக்கி விடுகிறது. பயிற்சியாளர்கள் என்றில்லை யாராக இருந்தாலும்
வலுகட்டாயமாக ஒன்றை நிறைவேற்ற நினைத்தால் தேவையற்ற பிணக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அப்படி இந்த உலகில் வலுகட்டாயமாக எதையும் நிறைவேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்று
கேட்பீர்கள்? வதந்தியைக் கட்டி வைத்து நாக்கைத் தானாகப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு
வெச்சு செய்கிறார்கள்.
எஸ்.கே. போல வாழ்வில் நிரம்ப கட்டுபாடுகளையும்,
கொள்கைகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அது சாலை முழுவதும் வேகத் தடைகளை நிறுவிக்
கொள்வதைப் போன்றது. சில இடங்களில் கட்டுபாடுகளோ, கொள்கைகளோ எதுவும் தேவையில்லை.
எப்படியோ காரியத்தை முடித்தால் போதும். பொது எனப் பெயர் கொண்ட நிறுவனங்கள் அப்படிப்பட்டவைகள்தான்.
அங்கே போய் பிராணனையை விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அது போல அங்கே பரிசுகள், பாராட்டுகள்,
வெகுமதிகளுக்கு ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அது மன நிம்மதியை அழித்து விடுவதுடன்,
மகிழ்ச்சியற்ற மனிதனாகவும் மாற்றி விடும்.
எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் எந்தப்
பிரச்சனையும் ஏற்படுவதில்லை. எதையாவது கண்டு கொண்டால் எல்லா பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
அது தேவையேயில்லை. அதுவும் ஒரு பொது என்ற பெயர் கொண்ட நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவனுக்கு
அது முற்றிலும் தேவையில்லாதது.
உடனே என்றால் நிறைய விசயங்கள் தெரியாமலும்
போய் விடும். அமைதியாக நிகழட்டும் என்று விட்டால்தான் நிறைய விசயங்கள் தெளிவுக்கு
வரும்.
இனியும் போய் யாரிடமும் நின்று கொண்டு
இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிராத எஸ்.கே.வை நீங்கள்
பார்க்கப் போகிறீர்கள். அவர்கள் ஆர்வமே இல்லாதவர்கள். அவர்களிடம் போய் ஆதரவு கேட்டு
இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் குழைத்துக் கொள்ளக் கூடாது என்பது எஸ்.கே.வின் துணிபு.
அவர்கள் பாட்டுக்குப் போகட்டும். இருக்கட்டும்.
அவர்களிடம் போய் என்ன தேவையில்லாமல் ஒன்றைக் கேட்டுக் கொண்டு. அது வேலியில் போகும்
ஓணானை எடுத்து வேட்டியில் இட்டுக் கொள்வதைப் போல ஆகி விடுகிறது. அவர்கள் பாட்டுக்கு
அவர்கள் இருக்கட்டும்.
நோ கண்டிஷன்ஸ். பிறகு பார், வாழ்க்கை
எவ்வளவு இலகுவாக இருக்கிறதென்று.
இவைகளெல்லாம் ஒரு பள்ளி அல்லது கல்லூரியில்
ஆசிரியர் - மாணவர் மத்தியில் எழுவது போன்ற சிக்கல்கள் என்று நினைத்தால் நீங்கள் தவறு
செய்கிறீர்கள். பொது என்ற பெயரில் துவங்கும் நிறுவன அளவிலான ஆசிரியர் - மாணவர் சார்ந்த
அல்லல்கள். எஸ்.கே. நடத்தும் தனியார் பயிற்சி நிறுவனப் பிரச்சனைகள் என்று நினைத்தாலும்
பழுதில்லை. அப்படியாகவும் இருக்கலாம்.
*****
No comments:
Post a Comment