18 Jan 2018

கார்ப்பரேட் சாமியார்களின் கவனத்துக்கு...

குறளதிகாரம் - 3.2 - விகடபாரதி
கார்ப்பரேட் சாமியார்களின் கவனத்துக்கு...
            கையில் அள்ளிய மண்ணை எண்ண முடியுமா?
            கையில் அள்ளிய மண்ணா? அது பத்து கோடியே பதினெட்டு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து நானூற்று எண்பத்து ஐந்து என்று சொல்லி, வேண்டுமானால் அந்த எண்ணிக்கையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறுச் சொல்லும் வேடிக்கையான சாமர்த்திய கதையொன்று உண்டு.
            வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முடியுமா? அதற்கும் நாமாக ஒரு எண்ணிக்கையைச் சொல்லி, வேண்டுமானால் எண்ணிப் பார்த்து விட்டு தவறு என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடலாம்.
            அதுபோல இந்த பூமியில் இதுவரை இறந்து போனவர்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியுமா?
            இப்போது இறப்பைப் பதிவு செய்ய ஆதார் எண்ணைக் கேட்கிறார்கள், இறப்பின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வருவதற்கு. 
            ஆதார் எண் வருவதற்கு முன் இறந்து போனவர்களை எந்த எண்ணிக்கையில் கொண்டு வருவது?
            கையில் அள்ளிய மண்,
            வானில் உள்ள நட்சத்திரங்கள்,
            இதுவரை இறந்து போனவர்கள் - இவர்களின் எண்ணிக்கையை எண்ணுவது பயனற்ற முயற்சி என்று சொல்வதா? வருங்கால விஞ்ஞானக் கணிப்பு அதைச் சாத்தியப்படுத்தும் என்று சொல்வதா?
            நிலைமை எப்படியிருப்பினும் இதுவரை பூமியில் பிறந்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை எண்ணற்றது, முடிவிலா எண்ணிக்கைக் கொண்டது. அந்த எண்ணிக்கைக்கான எண் எதுவோ அதை அப்படியே மனதில் கொண்டு வாருங்களேன்!
            அந்த எண்ணை வாயால் சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும், மனதால் எண்ணினால் மனம் வெடித்து விடும் என்கிறீர்களா?
            அப்படியானால் அந்த எண் நிச்சயம் பெரிய எண்தான், ராட்சச எண்தான். எண்ணுதல் சாத்தியம் இல்லாத, வரையறைக்குள் வராத அந்த எண்ணைக் கணிதம் முடிவிலி (இன்பினிட்டி) என்கிறது.
            அப்படி அந்த மிகப்பெரிய எண்ணை எண்ணுவது (எண்ணிப் பார்ப்பதும் அதாவது counting & thinking) போன்றது துறவியரின் பெருமையை எண்ணிச் சொல்ல முயல்வது என்பது.
            துறவியரின் பெருமைக்கு எல்லலையற்ற பிரபஞ்சமே ஒப்புமை. பிரபஞ்சத்துக்கு முடிவே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
            முடிவற்ற, எல்லையற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள்தான் சொந்தம் என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் துறந்த துறவிகள்.
            துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று என்கிறார் வள்ளுவர்.
            உயிருள்ள போதே இறந்தார் போல் வாழும் சிறந்தாராகிய துறந்தாரின் பெருமையைக் கணக்கிட முயல்வது இறந்தார்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாததைப் போல அளவிட முடியாததாகும்.
            ஒழுக்கத்தில் நிற்பதுதன் பெருமை அது. ஒழுக்கத்தில் நின்று அறத்தை நிலைநாட்டுவதன் சிறப்பு அது.
            வந்தவர் கோடி. வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. வந்தவர், வாழ்ந்தவர், மறைந்தவரில் துறவியரின் பெருமையோ கோடி கோடி கோடி என்று எத்தனைக் கோடி போட்டாலும் கொள்ளாது.
            அப்படிப்பட்ட கோடிக்கும் கொள்ளாத பெருமை உடைய துறவியரா கோடிக்கு ஆசைப்பட்டு கார்ப்பரேட் துறவியர் ஆகுவர்?
            கார்ப்பரேட் சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் கவனத்துக்காக திருவள்ளுவர் எழுதிய திருக்குறளாக இது இருக்கும் என்று நினைக்க இடம் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...