குறளதிகாரம் - 2.7 - விகடபாரதி
ஆதி பகவன் ஏன் மழையாகவும் கடலாகவும்
இருக்கக் கூடாது?!
உலகின் முதல்
உயிர் கடலில் தோன்றியிருக்கக் கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். பனிக்குடத்துக்குள்
பனிக்குடநீருள் வளரும் கரு அந்த மரபின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
(பனிக்குட)நீருக்குள்
வளர்ந்துதான் நாம் நிலத்திற்கு வருகிறோம். ஒருவகையில் நாமும் இருவாழ்விதான். நீரில்
வாழ்ந்து நிலத்தில் வாழ்பவர்கள். என்ன ஒன்று, பிறந்த பின் நீருக்குள் வாழ முடிவதில்லை.
பூமியில்
அதிசயங்கள் என்று மனிதன் கட்டிய பிரமாண்டங்களைக் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் பூமியின்
அதிசயம் கடல்களும் மரங்களும்தான். இவைகள் இரண்டும் இல்லாவிட்டால் எல்லா கோள்களைப்
போல பூமியும் ஒரு கோள்தான். உயிர்க்கோளம் என்ற சிறப்பு பூமிக்குக் கிடையாது.
பூமியின்
இரட்டை அதிசயங்களான கடல்களையும், மரங்களையும் பூமியின் இரு கண்கள்.
கடல் வற்றி
கருவாடு சாப்பிடலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு என்று ஒரு கிராமத்து மொழி
உண்டு. கடல் வற்றாது என்பது ஒரு நம்பிக்கை. ஏன் கடல் வற்றக் கூடாதா?
எப்படிக்
கடல் வற்றும்? எவ்வளவு பெரிய கடல்? எவ்வளவு தண்ணீர்? கடல் வற்றுவதற்கு வாய்ப்பில்லை
என்பது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் வள்ளுவர் கடல் வற்றும் என்கிறார்.
வள்ளுவரா
சொன்னா? இருக்காது. அவர் வாழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் கடல் வற்றாமல்தானே
இருக்கிறது என்கிறீர்களா?
2000 இல்
உலகம் அழியும் என்பது போல வள்ளுவர் சொன்னது குத்து மதிப்பான சோசியக் கணக்கு இல்லை.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல அறுதியிட்டக் கணக்கு.
மேகம் மழையாகப்
பொழியா விட்டால் கடலுக்கான நீர் எங்கிருந்து கிடைக்கும்?
ஆறுகளிலிருந்து
கிடைக்குமா? மழைப் பொழிந்தால்தானே ஆறுகளில் நீரோடும். இல்லை, மெட்ரோ வாட்டர் மூலம்
சப்ளை செய்ய முடியுமா? நாம் குடிப்பதற்கான நீரையே கடல் நீரைச் சுத்தகரித்து எடுக்கத்
தொடங்கி விட்ட நாம் எப்படி கடலுக்கு நீர் கொடுக்க முடியும்?
வான் மேகம்
நினைத்தால்தான் கடல். இல்லையென்றால் கடல் வெறும் திடல்.
மேகம்தான்
கடல்நீரை எடுக்கிறது. பிறகு அதுவேதான் கொடுக்கிறது. இது ஒரு சுழற்சிதான் என்றாலும்,
ஒருவேளை மேகம் வாங்கிய நீரைக் கொடுக்காமல் போய் விட்டால்... வாங்கிய கடனை கொடுக்காமல்
போனால் வங்கிகள் என்னவாகுமா அந்த நிலைதான் கடலுக்கு. கடல் திவாலாகி விடும்.
நல்லவேளை
மேகம் மனிதர்களைப் போலில்லை. வாங்கியக் கடனை அவ்வபோது சரியாகக் கொடுத்து விடுகிறது.
அதனால் கடலும் திவாலாகாமல் தப்பித்து விடுகிறது.
கைம்மாறு
வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்று பின்னொரு இடத்தில் வள்ளுவர் இதை மிகத் துல்லியமாகச்
சுட்டுவார்.
கடலின் இருப்பு
மேகத்தின் உயிர்ப்பில் இருக்கிறது. இந்த பூமியை அலைக்கரங்களால் தாலாட்டும் கடலுக்கும்
தாய் மழைதான். அதே பூமியை அவ்வபோது அழித்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து வாலாட்டும்
மனிதனுக்கும் ஆதித் தாய் மழைதான்.
மழையின் ஒரு
துளி போல் விழும் விந்துதானே உயிரை உருவாக்குகிறது. உயிரின் ஆதி வடிவமும் மழைத்துளிதான்.
பிறந்த உயிருக்குச்
சொட்டாய் சொட்டாய் இறங்கி உயிரூட்டும் முலைப்பாலும் மழைத்துளியின் வடிவம்தான். உணவின்
ஆதி வடிவமும் மழைத்துளிதான்.
மழைதான் கடலுக்கும்
ஆதாரம். மனிதர்க்கும் ஆதாரம். மரங்களுக்கும் ஆதாரம். மழையின்றேல் யாவைக்கும், யாவர்க்கும்
சேதாரம்.
மழையின்றேல்
நெடுங்கடலும் இல்லை எனும் போது குறுஉயிர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?
நெடுங்கடலும்
தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்கா தாகி விடின் என்றல்லவா சொல்கிறார் வள்ளுவர்.
முதல் சங்கத்தையும்,
இடைச் சங்கத்தையும் கடல் கொண்டது. இல்லையில்லை, கடல் கொன்றது. மழை நினைத்தால் அந்தக்
கடலையும் கொண்டு விடும். கொன்று விடும்.
ஆகவே சங்கங்களைக்
கொண்ட கடலைக் கொண்டு விடும் மழை பெரிது. மழை இன்றேல் கடலும் உயிர் வாழ்தல் அரிது.
இனியாவது
மழைநீர் கடலில் வீணாகச் சென்று கலந்தது என்று சொல்லாமல் இருப்போம். கடல் வற்றாமல்
இருக்கவே மழை கடலில் சென்று கலக்கிறது.
கடல் தேங்கி
நிற்கிறது. மழை அதை தாங்கி நிற்கிறது.
மாமழைப் போற்றுதும்
என்று சும்மாவா சொல்லியிருப்பான் நம் புலவன்? அந்த மழைப் பொழிந்து தேங்கிய கடல் சூழ்ந்த
நகரில் அன்றோ அவனுடைய காவியமே தொடங்குகிறது. உயிர்களின் தோற்றமும் அங்குதானே தொடங்கியது.
அனைத்துக்கும் தொடக்கம் கடல். அந்தக் கடலுக்குத் தொடக்கம் மழை. ஆதி பகவன் ஏன் மழையாகவும் கடலாகவும் இருக்கக் கூடாது?!
*****
No comments:
Post a Comment