13 Jan 2018

வடுக்கள் வரும், போகாது! - வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' ஐ முன்வைத்தும், அதற்கான எதிர்வினைகளை முன்வைத்தும்...

வடுக்கள் வரும், போகாது! - வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' ஐ முன்வைத்தும், அதற்கான எதிர்வினைகளை முன்வைத்தும்...
            இறை நேயத்தைக் காதல் பாவத்தோடு சொன்ன தனித்துவம் மிக்க மரபார்ந்த உடல்மொழியை மீறிய துடுக்குத் தனம் மிக்க பெண்மொழி என்று ஆண்டாளின் இலக்கியத்தை வகைபடுத்தலாம். அதற்காக ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கொடுக்கப்படும் புகழ்மொழி என்பது 'ஆண்டாள்' என்ற சொல்லின் இரு பொருள்படும் தன்மைக்காக சொல்லப்பட்டதாகவே கொள்ளலாம்.
            திராவிடம் 'தீ பரவட்டும்' என்று எவ்வகை இலக்கியங்களை எதிர்த்து தன் பிரச்சார இலக்கியத்தை முன் வைத்ததோ, அவ்வகை இலக்கியங்களை ஆதரிக்கும் வகையில் திராவிட இலக்கிய வழித்தோன்றல்களில் ஒருவரான வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கட்டுரையாற்றியிருப்பது வியப்புக்குரியதே. இலக்கியத்தின் வழி எழுச்சியுற்ற திராவிடத்தை இலக்கியத்தின் வழியே இதன் மூலம் வைரமுத்து வீழ்த்த முயல்கிறாரா? என்ற கேள்வி இதனால் எழாமல் இருக்காது.
            தனது ஞானபீடக் கனவுக்கான முன்னெடுப்பில் யார் யாரை திருப்திபடுத்த வேண்டும் என்று நினைத்து அவர் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தாரோ, அவரவர்களே அதிருப்தி அடையும் வகையில் எதிரான சூழலை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
            இந்நேரத்தில் அவரது மெளனமான பின்வாங்கலும், கேவலமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான அவரது மிகைபட்டச் சிரிப்பும், உரிய காரணமில்லாமல் வருத்தம் தெரிவித்துக் கொண்டதும் இதை உறுதிபடுத்துவது போன்றத் தோற்றத்தை தருவதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற தடுமாற்றம் ஏற்படுவது இயல்பானதே.
            தமிழ் முன்னோடிகளை அறிமுகப்படுத்துகிறேன் என்ற அவரது முயற்சியில் பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளைத் தேர்ந்து கொண்டது அவரது பெருந்தன்மையான மனதைக் காட்டுகிறது. ஒரு திராவிட எழுத்தாளராக அடையாளப்படுத்தப்படும் அவர், காதல் வாழ்வாக இருந்திருந்த திராவிட பாரம்பர்யம் சமய இயக்கங்களால் பாவை நோன்பு நோற்று அகமண முறையாக மாறும் மண வரலாற்றை ஆண்டாளின் வழி நின்று நிறுவியிருக்கலாம். ஆனால் அவர் பாவை நோன்புக்கும், கார்த்தியாயினி நோன்புக்கும் அதிமுக்கியமான வேறுபாட்டை நிறுவுவதில் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டுள்ளார். தகவலைப் பெறுவது மற்றும் அறிந்து கொள்வதின் அடிப்படையில் அது முக்கியத் தகவல் என்ற போதிலும், இறைநேயம் எனும் இடத்தில் அது சாதி எனும் மம்மர் அறுக்கும் மருந்து என்று குறிப்பிடும் இடத்தைக் கொண்டு அவர் தான் வலியுறுத்த வேண்டிய கோட்பாட்டிலிருந்து, யாரையோ திருப்திபடுத்தும் ஒரு கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு நெருங்கி வருகிறார் என்பதை அறிய முடிவதாகவே தோன்றுகிறது.
            இறைநேயம் எந்தச் சாதி எனும் மம்மரை அறுத்தது? நந்தனின் சாதி எனும் மம்மரை அறுத்தது போலவா?
            சமய இலக்கியங்கள் தமிழுக்குச் செழுமை சேர்த்திருக்கின்றன. சமய இலக்கியங்களால்தான் தமிழ் செழுமை பெற்றது போல ஒரு தோற்றத்தைத் தரவும் இக்கட்டுரையாற்றியதில் வைரமுத்து தயங்காமல் முன்வருகிறார். தான் எண்ணுவதாக வைரமுத்து கூறும் ஆண்டாள் தரும் சமயக் கோட்பாடுகளால் அப்படி ஒரு முடிவை நோக்கி அவர் கேட்போரை வர வைக்கிறாரோ எனக் கருதத் தோன்றுகிறது. சமய இலக்கியங்களைக் கழித்து விட்டுப் பார்த்தாலும் தமிழின் செழுமை மிஞ்சவே செய்யும்.
            இலக்கிய நோக்கின் அடிப்படையில் பார்த்தால், ஆண்டாளின் காதல் குறியீடு கண்ணன். அவள் வளரும் சூழலில் கண்ணனைப் பற்றிய ஒரு நாயக பிம்பம் வளர்த்தெடுக்கப்படுகிறது. தன்னையும் அறியாமல் அந்த பிம்பக் கவர்ச்சியில் சிக்கிய பித்து மனநிலையில் வெளிப்படும் வாளிப்பான கவிதை வரிகள் ஆண்டாளுடையவை. இன்றைய சூழலில் இரஜினிகாந்தின் மேல் ரசிகர்கள் வைத்துள்ள பித்தேறிய கவர்ச்சியைப் போன்றதுதான் அது. இரஜினிகாந்தின் ரசிகர்கள் கமலஹாசனை ஏற்க மறுப்பதைப் போலத்தான், கண்ணனின் நாயக பிம்பத்தில் சிக்குண்ட ஆண்டாள் வேறொரு மணாளனை ஏற்க மறுத்திருக்க முடியும்.
            இப்படி இந்தக் கோட்பாட்டை விளக்க முற்படாமல் கவனமாகக் கடக்கும் வைரமுத்து, எட்ட முடியாத கடவுளை எட்ட ஆண்டாளின் முயற்சியாகவே அவரது இலக்கியத்தைப் பார்க்கிறார். அந்த முயற்சியில் ஆண்டாள் கடவுள் முன் மாயமாகிறார். வைரமுத்துவின் பகுத்தறிவும் மாயமாகிறது. கவிதையை உணர்ச்சி ரீதியாக அணுக வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், அக்கவிதை பற்றிக் கட்டுரையாற்றும் போது அந்த உணர்ச்சிக்குக் காரணமான கோட்பாட்டை அறிவு ரீதியாக அணுக வேண்டிய அவசியம் இருக்கிறது.
            ஆண்டாள் தமிழைக் காதலோடு ஆண்ட கருத்துருக்களோடு அவர் கட்டுரையை அவர் தொடர்ந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆண்டாளின் வரலாற்றோடு அவர் இடைவினையாற்றி அவர் முன் வைக்கும் கருத்துகள் அவர் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
            நந்தன் சிவனை அடைய நிகழ்த்தப்பட்டது ஒரு கொலை என்று கொண்டால், ஆண்டாள் கண்ணனை அடைய நிகழ்த்திக் கொண்டது ஒரு தற்கொலை. அதீத பித்து பிடித்த மனம் அப்படித் தன்னைக் கரைத்துக் கொள்ளும். குர்தீப் சிங் ரஹீமிற்காக பெண்கள் அப்படி கம்புக் கழிகளோடும், விளக்குமாற்றோடும் நீதிமன்றத்தின் முன் திரளவில்லையா? மற்றபடி ஆண்டாளின் மாய மறைவுக்குக் காரணமாகச் சொல்லப்படும் கண்ணனின் கனவுக் காட்சித் தோற்றங்கள் எல்லாம் வெளியுலகுக்குச் சொல்லப்பட்ட சமாதானங்களே.
            ஆண்டாளுக்கு இறுதியில் என்ன நடந்தது? என்ன நேர்ந்தது? என்பதை ஆதாரப் பூர்வமாக நிறுவ முடியாத நிலையில், எண்ணியது எய்தல் என்ற கருத்தைக் கொண்டு கட்டுரையாற்றி முடிக்கிறார் வைரமுத்து.
            அவரின் கட்டுரை முடிவுப்படியே, ஆண்டாள் போன்று அதே நம்பிக்கைக் கொண்டு இன்றைய பெண் பிள்ளைகள் செய்தால் என்ன செய்வது? நித்திய எனும் பெயர்களைக் கொண்ட சாமிகளிடம் கொண்டு போய் விடுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரம் குறித்த அவரது விமர்சனக் கவிதை ஒன்றில் கண்ணகி போல் இருப்பதையே கேலி பேசியவர் வைரமுத்து என்பதோடு அவரது இம்முடிபை இணைத்துப் பார்க்கும் போது அவரது முரண்பட்ட நிலையை உணர முடியும்.
            கண்ணன் குறித்தும் இந்து மதக் கடவுளர்கள் குறித்தும் பெரியார், அண்ணா கூறிய கருத்துருக்களைப் புடம் போட்டு அறிந்த வைரமுத்து, ஓஷோவின் கருத்துருவை முன்வைத்து விளக்குவதை அவ்வளவு சாதாரணமாகக் கருதி விட முடியாது. ஓஷோவின் விளக்கங்கள் முன்னுக்குப் பின் முரணானவை. ஒன்றுக்கு ஒன்று வேறுபாடானவை. ஞானமடைதல் முன் எதுவும் ஒரு பொருட்டல்ல என்ற நோக்கும் உடையவை. அவரும் ஏறக்குறைய அப்படி ஒரு நிலையை நோக்கி வருகிறார். ஆண்டாளை அவர் புரிய வைப்பதினும், யாரை அவர் திருப்திபடுத்த நினைக்கிறாரோ அவர்களின் நோக்கத்தை நோக்கி வரத் துடிக்கிறார். மற்றபடி ஓஷோ ஒரு கலகக்காரர் என்ற அடிப்படையில் அவரது கருத்தை எடுத்தாண்டதற்காக வேண்டுமானால் அவரைப் பாராட்டலாம். அப்படி எடுத்தாண்ட கருத்தும் கருத்து முதல்வாதத்திற்கே முழு வலு சேர்ப்பதாய் இருக்கிறது. ஆண்டாள் பற்றிய வாதத்தில் கருத்துமுதல்வாதத்திற்கன்றி வேறு எதற்கு முக்கியத்துவம் தர முடியும் என்ற வாதத்தையும் புறந்தள்ளி விட முடியாது என்றாலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விளக்க முடியாத சிக்கல் வாய்ந்ததல்ல ஆண்டாளின் வரலாறும் கவிதைகளும்.
            ஆண் ஆழ்வார்கள் யாரும் ஆண்டாள் போல் அமானுஷ்யமான மாயமாதலுக்கு உட்படா போழுதில், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அமானுஷ்யமான முறையில் மாயமாதல் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய இடம். வெறும் ரசனைக்காக அதைக் கடத்திச் செல்லும் போக்கோடு வைரமுத்து தன் கட்டுரையாற்றியதை முடித்துக் கொள்கிறார். அதற்கு மேல் ஆராய்ந்தால் யாரை திருப்திபடுத்த இந்த உரையைச் செய்தோமோ, அந்த இறை அன்பர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்வோமோ என்ற அச்சமும் மிகுந்த கவனப்பெருக்காய் அவருக்கு இருக்கிறது.
            ஆனால் நிலைமை அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறொரு பூடகம் கொண்டு விட்டது. அவருடைய ஆண்டாள் பற்றி கடவுட் கோட்பாட்டின் நிறுவுதலின்படி இதை கண்ணனின் லீலையென்று கொள்வதா?
            ஆண்டாள் குறித்த அமெரிக்கப் பல்கலைக் கழகத்து ஏட்டின் 'Andal was herself as a devadasi' என்ற தவறானப் புரிதலை பக்தர்கள் ஏற்க மாட்டார்கள், ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள், சமய மறுப்பாளர்கள் எண்ணிப் பார்ப்பார்கள் என்ற நிலைபாட்டைக் கூறி தனது ஆதரவான நிலையை நிலைநாட்ட முயன்ற வைரமுத்துவுக்கு அந்த இடத்தில் கிடைத்தது மாபெரும் ஏமாற்றமாகிப் போனதே அந்த எதிர்பார்க்க முடியாத ஒன்று.
            இதற்கு ஏன் தேசிய அளவிலான கட்சியைச் சார்ந்த மற்றும் ஒர் அமைப்பைச் சார்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்? மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்? அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதானால் குறிப்பிட்ட அமெரிக்கப் பல்கலைகக்கழக்கதிற்கும், அதன் வெளியீட்டுப் பொறுப்பாளருக்கும் அல்லவா எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அவர்களை அல்லவா மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்.
            இப்படி ஓர் ஏட்டில் இருக்கிறது என்பதற்காக எடுத்துச் சொன்னதற்காக வைரமுத்துவைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மன்னிப்புக் கேட்கச் சொல்லி நெருக்கடிக் கொடுப்பதும் எழுத்தாளர்களுக்கான எதிரானப் பாசிசப் போக்குகள் ஆகும். வைரமுத்து எடுத்துச் சொல்லாவிட்டாலும் அந்த ஏட்டில் உள்ளது உள்ளதுதானே! இல்லாமல் ஆகி போகி விடாதே! அடிப்படைவாதிகள், அமைப்புவாதிகள் என்போர் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
            வைரமுத்துவும் தேவையில்லாமல் வருத்தம் தெரிவிக்க வேண்டுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உரிய நேரத்தில் காட்ட வேண்டிய எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் இருப்பது பெருந்தன்மையாகாது, கருத்துச் சுதந்திரத்திற்கான ஒரு மோசமானப் பின்னடைவு என்பதையும் கூடுதலாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
            விருதுகள் வரலாம். போகலாம். வடுக்கள் வரும். போகாது.

*****

2 comments:

  1. மதிப்பிற்குரிய ஐயா!
    இந்த கட்டுரைக்கான உங்கள் உழைப்பு அபாரமானது. கவிஞர் வைரமுத்துவை தொடர்ந்து பலகாலம் மிகக் கவனமாக உற்றுநோக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற கட்டுரை எழுத முடியும். இந்த கட்டுரை வைரமுத்துவை எதிரியாக நினைத்து நீங்கள் எழுதிய கட்டுரை அல்ல. அவர் மீது கொண்ட மதிப்பால், அவர் இடரும் இடங்களை இக்கட்டுரையில் அழகுற சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.

    மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. வெகு கவனமாய் எடையிட்டு வழங்கிய கருத்துருவுக்கு அன்பும் நெகிழ்வும்!

      Delete

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...