குறளதிகாரம் - 2.9 - விகடபாரதி
அறத்தின் ஆணிவேர்
அவரவர் எண்ணம்
போல் வாழ்வது அவரவர் விருப்பம்.
மணம் செய்து
கொண்டு வாழ்வது அவரது எண்ணமானால் அவ்வாறே வாழலாம். மணம் செய்யாமல் வாழ்வது அவரது எண்ணமானால்
அவ்வாறும் வாழலாம்.
இருவகை வாழ்விற்கும்
தலையாய கடமைகள் அதாவது அறங்கள் இருக்கின்றன. அந்த அறத்தின் படியே அந்த இருவகை வாழ்வையும்
வரையறுக்கிறார் வள்ளுவர்.
மண வாழ்வை
இல்லறம் என்றும், துறவு வாழ்வை துறவறம் என்றும் அறுதியிடுகிறார்.
மண வாழ்வின்
முக்கிய அறமாக தானத்தைக் குறிப்பிடுகிறார். மணம் செய்து கொண்டு பொருளைச் சேர்த்து
புதல்வர்க்கு உயில் எழுதி வைத்து தன் குடும்பம், தன் சந்ததி என்பதோடு முடிந்து விடுவதோ
இல்லறம். இல்லையே, அதைக் கடந்து தானம் என்பது அதன் முக்கிய அறம்.
இல்லறத்திற்குத்
தேவையான பொருள் சேர்ப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சேர்த்த செல்வம் ஒரே
குடும்பத்தில் தங்கி விடாமல் செல்வப் பகிர்மானம் தானம் என்ற வகையில் அமைய வேண்டும்
என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர். (தமிழ் நாட்டில்) ஒரு சில குடும்பங்கள் சேர்த்து
வைத்தச் சொத்தைச் செல்வ வளத்தை அறிய வரும் போது வள்ளுவரின் இச்சிந்தனை மிகு முக்கியத்துவம்
பெறுகிறது.
இப்படி இல்லறத்துக்கு
ஓர் அறம் இருக்கும். இல்லற வாழ்வை விரும்பாமல் துறவு நோக்கிச் செல்பவர்க்கு என்ன அறம்
இருக்க முடியும்? துறவியர்களின் அறம் தவம் என்பதாகும். அவர்கள் தவ நெறிகளின் படி நிற்றல்
வேண்டும். கடமைக்குப் பயந்து துறவு கொண்டு விட முடியாது. இல்லறத்தின் கெடுபிடிகளுக்குப்
பயந்த துறவு என்பது போலியானது. துறவின் அற நெறிமுறைகள் தங்கத்தைப் புடம் போடுவது
போன்றது.
அவ்வளவுதானே
சங்கதி என்றால்... அங்கிருந்துதான் இரண்டின் ரிஷி மூலமும், நதி மூலமும் ஆராயப்படுகிறது.
அதாகப்பட்டது என்னவென்றால்,
இல்லறத்தின்
தலையாய அறமான தானமாக இருந்தாலும் சரி,
துறவறத்தின்
தலையாய அறமான தவமாக இருந்தாலும் சரி
இரண்டும்
நிலைபெறுவதற்கு வானம் வழங்க வேண்டும். வானம் தவத்தைப் போல் கடல் நீரை முகர்ந்து மேகமாகி
தானமாக மழை நீரை வழங்கினால்தான் இல்லறத்தார் தானம் செய்ய முடியும், துறவறத்தார் தவம்
செய்ய முடியும்.
ஆக,
உலகின் எத்தகைய
அறம் நிலைபெறுவதற்கும் அடிப்படை வான்மழைதான். வான்மழை இல்லையென்றால் அறம் நிலைபெறாது.
அறம் நிலைபெறுவதற்கான காரியங்கள் நிகழ்த்தப்படாது.
சட்டம், ஒழுங்கு,
நீதி, நியாயம், நேர்மை என்று அறம் நிலைபெறுதலுக்கான அனைத்துக்கும் ஆதாரம் வான்மழையே.
வான்மழையற்ற பஞ்ச காலங்களில், பாலை நிலங்களில் அவைகளை நிலைநாட்டுவது சவாலானவைகள்.
வான்மழைப்
பொழிந்து, பயிர்கள் விளைந்து, பசி தீர்ந்தால்தான், தன் பசி தீர்ந்தது போக எஞ்சியிருப்பதை
இல்லறத்தார் தானம் செய்வர். தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும் என்கிற பழமொழி இதை
உறுதி செய்யும்.
பசியோடு
எத்தனை நாள் வேண்டுமாகினும் துறவறத்தார் தவம் இயற்றுவார் என்றால், பசியால் உயிர் போன
பின் எத்தகைய தவத்தை இயற்றுவர்? கடும்பசியை எதிர்கொண்டு மிகு குறைவான உணவையேனும் எடுத்துக்
கொண்டுதான் அவர்கள் தவம் இயற்ற முடியும். அது மிகு குறைவான உணவுதான் என்றாலும், அம்மிகு
குறைவான உணவுக்கு ஆதாரம் வான் மழையே.
வான் மழை
கிராமத்தார்க்கு தெய்வம். அத்தெய்வத்துக்கு அவர்கள் சூட்டிய பெயர் மாரியம்மன். மாரியம்மன்
இல்லாத கிராமங்கள் அரிதினும் அரிது. வான்மழையை நோக்கிய தொன்ம வழிபாடே மாரியம்மன்
எனும் குறியீடாகி கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.
வான்மழை எனும்
இயற்கையை இப்படி ஒரு தொன்மக் குறியீடாக கிராமத்தார்கள் வணங்கி வருகிறார்கள்.
இயற்கையை
நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும்.
இயற்கையை
நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்.
இயற்கையான
வான்மழைக்கு இது முற்றிலும் பொருந்தும்.
சூழலியல்
அறிவோடு வான்மழை காத்தால் வான்மழையும் நம்மைக் காக்கும். சூழலியல் அறிவைப் புறந்தள்ளி
விட்டு வான்மழையை அழிப்பதற்கான சூழல் சீர்கேட்டில் இறங்கினால் ஒரே அடியாகப் பொய்த்தோ
அல்லது ஒரே அடியாக பெய்தோ வான்மழை நம்மை அழிப்பது நிச்சயம். இது ஊழ் வழிச் சத்தியம்.
நம் வாழ்வு
நிலைபெறுவதற்கான அறங்களின் பிடி வான்மழையின் கையில்தான் இருக்கிறது. அது இல்லறத்திற்கான
தானமாக இருந்தாலும் சரி, துறவறத்திற்கான தவமாக இருந்தாலும் சரி அது வான்மழையின் கொடை.
அதுவே அன்றிலிருந்து இன்று வரை என்றும் உலக நடை.
தானம் தவம்
இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்.
வானம் வழங்கட்டும்.
இல்லறத்தின் தானம் கொழிக்கட்டும். துறவறத்தின் தவம் செழிக்கட்டும். அறத்தின் கண்கள்
விழிக்கட்டும்.
அறத்தின்
ஆதாரம் வான்மழையின் பிடியில் இருக்கிறது. வான்மழைப் பொழிவது என்பது நாம் பின்பற்றும்
சூழலியல் சார்ந்த அறத்தின் கையில் இருக்கிறது. அறமும், வான்மழையும் ஒன்றுக்கொன்று
ஆதாரமாய் அமைகின்றன. ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை. நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு
நெய் ஆதாரமா? இரண்டும் ஒன்றையொன்றைப் பற்றிக் கொள்ளும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று
ஆதாரமாக ஆகின்றன.
வான்மழைக்கு
நாம் வேண்டுமோ இல்லையோ, நமக்கு வான்மழை வேண்டும். அது வேண்டும் என்றால் அதற்கு உரிய
(சூழலியல்) அறங்களைப் பின்பற்றாமல் இனி வரும் காலங்களில் அது சாத்தியமில்லை.
இந்த உலகில்
வான்மழைப் பொழிவதும், அறம் நிலைபெறுவதும் இப்படித்தான் மனிதர்களின் கைகளுக்கு வருகின்றன.
இனி, அறத்தின் ஆணிவேரில் அக்கறை எனும் அன்பு நீரைப் பாய்ச்சுவதும், பேராசை எனும் அமில
நீரை ஊற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கின்றன.
*****
No comments:
Post a Comment