15 Jan 2018

ஒழுங்காக இருப்பதில் நேரும் தவறு அல்லது வழுக்கையைத் தேடி வந்த சீப்புகள்

ஒழுங்காக இருப்பதில் நேரும் தவறு
அல்லது
வழுக்கையைத் தேடி வந்த சீப்புகள்
            எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துதான் எஸ்.கே. பிரச்சனையில் சிக்கி விடுகிறான். பேசாமல் அப்படியே இருந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் ஒரு வித நல்லதில் சென்றுதான் முடிய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் அதுதான் வழி. வேறு வழியில்லை.
            கொஞ்சம் அவசரப்படுவதால், நல்லது நடக்காது போலும், இறங்கி அடிக்க வேண்டும் என்று நினைக்கிறான் எஸ்.கே. விதி! அவனை அடித்து விடுகிறது. பிறகு குத்துதே, குடையுதே எனப் புலம்புகிறான். நிச்சயம் அனைத்தும் நல்லதிலேதான் சென்று முடியும். அதில் மாற்றமில்லை. ஆகவே அவசரப்பட்டு எதையும் மாற்றம் செய்ய முயல வேண்டியதில்லை என்பது அவனது நாட்பட்ட ஞானம். ஆனால், இப்போது அந்த அனுபவச் சீப்பு அவனுக்குப் பயன்படவில்லை. அவன் முடியெல்லாம் கொட்டி விட்டது. மேலும் எழுந்து நடக்கவும் திராணியற்றுக் கிடக்கிறான். அவன் நடப்பதே சிரமமாக இருப்பதால், அவனால் நடக்கப் போவது இனி எதுவுமில்லை.
            தன் கடந்த காலங்களில் எஸ்.கே. தன் விருப்பத்திற்கு ஏற்ப இருந்த போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் எழுந்தது இல்லை. ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற நினைத்த போதும், அவ்வாறு இருக்க வேண்டும் என முயன்ற போதும்தான் எல்லா பிரச்சனைகளும் ஆரம்பித்தன.
            அப்படியானால் ஒழுங்காக இருப்பது தவறா? என்றால், ஒழுங்கு என்றால் என்னவென்றே புரியாமல், ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற கற்பிதத்தோடு இருப்பது தவறே. அது மற்றவர்களிடம் ஒழுங்கை எதிர்பார்க்கும், தன்னை ஒழுங்காக இருக்க விடாது.
            ஒரு சிலருக்கு உதவ வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியமும் இல்லை. யார் மனதையும் நாம் திருப்தி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மனம் என்பது திருப்தி செய்ய முடியாத மாயப் பிசாசு. அதற்கு தன்னையே ஒருவன் பலியாகக் கொடுத்தாலும் அதன் பேராசைகள் தீர்வதில்லை. மனம் போன போக்கில் உதவுவதை விடுவதைப் போன்ற உத்தமமான விசயம் உலகில் ஏதோன்றும் இருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது அவனுக்கு.
            எல்லாம் நல்லதற்கே. இல்லையென்றால் தீயவைகளால் மாற்றம் நேரப் போவதில்லை. கெடுதலான விசயங்களுக்கு அதிக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். தன்னால் மாற்ற முடியாத பல விசயங்களை அதுதான் மாற்றிப் போடுகிறது.
            ஒருவருடன் அதிகமாகக் கொஞ்சிக் குலாவுவதே வெறுப்பை விதைக்கிறது. பகைமையைத் தூண்டுகிறது. அளவாக விலகி இருப்பதன் மூலமே நட்பைப் பெற முடியும். பாசத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எஸ்.கே. இப்போது காலம் கடந்த முதுமையின் இஷ்டமித்திர பந்துவான கட்டிலின் பிரஜையாகி விட்டான். அவனோடு நட்புப் பாராட்ட யாரும் விரும்புவதில்லை. சில கரப்பான்களும், மூட்டைப்பூச்சிகளும் அவ்வபோது அவனோடு நட்புப் பாராட்ட விரும்புவதுண்டு. அந்த நட்பையும் ஓட்டுவதன் மூலம், அடிப்பதன் மூலம் நசுக்கிக் கொண்டு விடுகிறான்.
            தனிமை நிறைய கிடைக்கிறது. நிறைய யோசிக்கிறான். நிறைய சொல்ல வேண்டும் என நினைக்கிறான். கேட்பதற்குதான் ஆளில்லை. பரவாயில்லை, நல்லன பல சிந்தித்து நல்லவனாக இறப்பதற்கு ஒரு வாய்ப்பு என்றே அதையும் கருதிக் கொள்கிறான்.
            இவைகள் எல்லாம் இப்படியாக கெடுதிகள் மற்றும் கெடுதல்கள் மூலமாகவே பெற்ற ஞானோபதசங்கள்தான் எஸ்.கே.வுக்கு.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...