8 Jan 2018

நெஞ்சு வலி பஞ்சாய்ப் பறந்த கதை - புதிய பழைய கதை வரிசை

நெஞ்சு வலி பஞ்சாய்ப் பறந்த கதை - புதிய பழைய கதை வரிசை
            மனதை அமைதிபடுத்திக் கொள் சில பயிற்சிகளை எடுத்துக் கொண்டான் எஸ்.கே. அந்த வாரம் மேற்பார்வையாளர்கள் வரக் கூடும் என்பதற்காக நிறைய முன்னேற்பாடுகளை செய்து கொண்டான். நாற்காலியைத் தேய்க்கும் இந்த வேலைப் பளுக்கள் எல்லாம் இணைந்து கொண்டன. லேசான நெஞ்சு வலி ஏற்படுவது போல இருந்தது எஸ்.கே.வுக்கு.
            எஸ்.கே.வுக்கு ‍அலறத் தோன்றவில்லை. மெளனம் பிடித்திருந்தது. எஸ்.கே.வுக்கு 108 என்றால் பயம். அந்தப் பயத்தை விட இந்த வலி பிடித்திருந்தது.
            அன்று மாலை அளவுக்கு அதிகமாக டாஸ்மாக் எனப்படும் மதுபானக் கடைக்குச் சென்று எதை ஏற்றிக் கொள்ள வேண்டுமோ, அதை ஏற்றிக் கொண்டான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு என்ற கவலை இல்லாமல் இறைந்து கிடந்த இறைச்சி வகையறாக்களை ஒரு வெட்டு வெட்டினான். நெஞ்சு வலி மட்டுபடுவது போலிருந்தது.
            சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் மனதால் அதை அணுகுவதைப் போருத்தே அது தோற்றம் கொள்கிறது. தான் சற்று எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று அணுகுவதாக நினைத்துக் கொண்டான். அது இறுக்கத்தையே தரும். எல்லா சரியானவற்றிலும் சிறு சிறு கோளாறுகள் இருக்கத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது.
            தான் தன் மனதை அவ்வபோது தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் தன்னைத் தெளிவாக வைக்கும். தனக்கு உறக்கமும் குறைவு. தெளிவில்லாத மனம் எப்போதும் தன்னை அவ்வளவு எளிதில் உறங்க விடாது. நசநசவெனப் பெய்யும் மழையைப் போல பெய்து வாட்டி விடும்.
            இந்த நெஞ்சு வலியிலிருந்து விடுபட கொஞ்சம் அப்படி கை நீட்டுவதுதான் நல்லது என்று நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு வலி பறந்தது போலிருந்தது.
            சிலரால் ஏற்படும் பிரச்சனைகள் சொல்லி மாளாது. தேவையில்லாமல் ஈகோவை வளர்த்துக் கொண்டு சிலது செய்யும் பிரச்சனைகள். தேவையில்லாத பயங்களையும், கஞ்சத்தனங்களையும் வளர்த்துக் கொண்டு சிலது ஏற்படுத்தும் பிரச்சனைகள். எதுவும் சொல்லிக் கொள்கிற மாதிரி  இல்லை. இம்சைகள்தான். இந்த இம்சைகளைக் கடந்துதான் அதுகளுடன் பழகித் தொலைய வேண்டியதாக இருக்கிறது.
            இதை நினைத்த போது சற்று லேசாக நெஞ்சு படபடப்பது போலிருந்தது எஸ்.கே.வுக்கு.
            எல்லாருக்கும் புத்தி சொல்லி விடலாமென நினைக்கிறான் எஸ்.கே. மிகப் பெரிய தவறுகளில் அதுவும் ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் இருக்கிறது. அந்த மனம் வெளியிலிருந்து வரும் புத்தியை அதற்கு இசைவாக இருந்தாலொழிய அனுமதிக்காது. இதனால்தான் புத்தி சொல்லப்படும் போது தாக்குதல்கள் நிகழ்கின்றன. இசைவற்ற இரண்டு மனங்கள் அதைத்தான் செய்யும்.
            எஸ்.கே. தான் அடிக்கடி தாக்கப்படுவதை நினைத்துக் கொண்டான். இனி தனக்கு உட்பட யாருக்கும் புத்திமதி சொல்லக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டான்.
            நெஞ்சு வலி பஞ்சாய்ப் பறந்து விட்டது போலிருந்து. இருந்தாலும் நெஞ்சை ஒரு முறை வாஞ்சையாய் தடவி விட்டுக் கொண்டான் எஸ்.கே. ஒரு 108 சத்தம் எழுப்பியபடியே அவனைக் கடந்து கொண்டிருந்தது. அதை அப்படியே உரித்து விடுவது போல உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் எஸ்.கே.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...