8 Jan 2018

சோறூட்டும் தாயே சோறாகுவாள், அவள் யார்?

குறளதிகாரம் - 2.2 - விகடபாரதி
சோறூட்டும் தாயே சோறாகுவாள், அவள் யார்?
            பூமி மழையின் வடிவம்.
            பூமி என்றால் பூமியில் வாழும் உயிர்கள்தான் அல்லவா!
            தாவரங்கள் மழையின் வடிவம்.
            பூப்பவைகள், பூக்காதவைகள், காய்ப்பவைகள், காய்க்காதவைகள் அனைத்தும் மழையின் வடிவம்.
            விலங்குகள் மழையின் வடிவம்.
            ஊர்வன, ஓடுவன, பறப்பன அனைத்தும் மழையின் வடிவம்.
            விலங்குகளினின்று மேம்பட்ட மனிதன் மழையின் வடிவம்.
            ஒவ்வொரு உயிரியின் உடலிலும் மழைநீர் ஓடுகிறது.
            மழைநீரிலிருந்து விளைந்ததையே (தாவரங்கள்) உணவாய் உண்ணுகிறோம். அல்லது மழை நீரிலிருந்து விளைந்ததை உண்டதையே (ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகள்) உணவாய் உண்ணுகிறோம்.
            தாகம் என்றால் பருகும் நீரும் மழை நீரின் வடிவே. அது ஊற்று நீராக இருந்தாலும், ஆற்று நீராக இருந்தாலும், புட்டி நீராக இருந்தாலும் அது மழையின் கொடை.
            பெய்யும் மழையே நிலத்தடி நீராக மாறி ஊற்று நீராக மாறுகிறது. மலையில் பொழியும் மழை நீரே அருவியாகி, சிற்றாறாகி, ஆறாகிப் பொங்கிப் பிரவகித்து ஓடுகிறது. நிலத்தில் புகுந்த மழை நீரை உறிஞ்சிய புட்டி நீரே நம் கைகளில் தவழ்கிறது.
            உண்ணும் உயிரினங்களுக்கான உணவை விளைவித்து, உண்பவருக்கு உணவாகவும் (பருகும் நீராகவும்) ஆவது மழையே.
            மழைநீர் இப்படி நீராய், உணவாய் உடலில் கலக்கிறது.
            மழைநீரே உணவாகி, நீராகிச் செரிக்கிறது. செரித்து இரத்தமாய், சதையாய், நரம்பாய், உறுப்பாய், உடலாய், பின் அந்த உடலுக்கு உயிர் ஊட்டும் அமிழ்தாய் வடிவம் கொள்கிறது.
            மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும் என்று இலக்கியங்கள் மழையை வணங்குவதற்குக் காரணம் அதுவே.
            வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் மழையில்லையே என்று வள்ளலார் வாடியதற்குக் காரணமும் அதுவே.
            மழையற்றப் பாலை நிலம் கள்வர்களை உற்பத்தி செய்கிறது.
            மழையற்றுப் போகும் போது பஞ்சம் பிழைக்க மனிதர்கள் இடம் பெயர்கிறார்கள்.
            மழையே நம் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது. அம்மழையே நம் உயிர்நிலையையும் தீர்மானிக்கிறது.
            இந்தப் புட்டிப் பால் யுகத்தில் தாயின் பால் ரத்தமாய் ஓடாத உடல்கள் கூட இருக்க முடியும். ஆனால் மழை ரத்தமாய் ஓடாத உயிர்கள் இருக்க முடியாது.
            மேகம் முலை என்றால், மழை அம்முலையிலிருந்து பொழியும் தாய்ப்பால். அந்தத் தாய்ப்பாலைப் பருகியே தாவரங்கள் வளர்கின்றன. மேகத்தின் முலைப்பால் உண்ட தாவரங்களை உண்டே நாம் வளர்கிறோம்.
            மழையே அனைத்து உயிர்களின் ஆதித் தாய், தாய்க்கெல்லாம் தாய். மழை முலைப்பால் ஊட்டிய பிறகே உயிர்கள் உரு பெறுகின்றன. ஒரு விதையை விதைத்த பின், ஒரு செடியை நட்ட பின் நாம் ஊற்றும் உயிர்த் தண்ணீரே அதற்குச் சாட்சி. ஊற்றும் உயிர்த் தண்ணீர் மேகம் தந்த முலைப்பால் அல்லவா.
            மழையெனும் தாயே நமக்கு உணவு ஊட்டுகிறாள். பிறகு அவளே உணவாகி அதாவது பருகும் நீராகி உணவாகவும் ஆகிறாள்.
            உணவூட்டும் தாயைத்தான் நாம் பார்த்து இருக்கிறோம். உணவாகும் தாயை யார் பார்த்திருக்க முடியும்? மழைதான் அந்தத் தாய்!
            இப்பேருண்மையைத்தான் வள்ளுவர் இப்படிப் பதிவு செய்கிறார்.
            துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆய தூஉவும் மழை
            உண்மைதானே!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...