குறளதிகாரம் - 3.4 - விகடபாரதி
கார்ப்ரேட் - காம்ரேட்
வித்தியாசம்!
ஐந்து என்ற
எண் சிறப்பானது.
பூதங்கள்
ஐந்து நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று.
நிலங்கள்
ஐந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று.
புலன்கள்
ஐந்து மெய், வாய், மூக்கு, கண், காது என்று.
இப்படி நம்மைச்
சூழ்ந்துள்ள இயற்கை ஐந்தாக, நாம் வாழும் நிலம் ஐந்தாக, அந்த நிலத்தில் வாழும் நம் புலன்கள்
ஐந்தாக, ஐந்து என்ற எண்ணின் சிறப்பினில் இயற்கையும், இயற்கை படைத்த நாமும் அமைந்திருக்கிறோம்.
ஐம்புலன்களே
உணர்வின் வாயில்கள், அறிவின் வாயில்கள். மேம்பட்ட அறிவு எனச் சொல்லப்படும் மெய்யறிவின்
வாயில்களும் ஐம்புலன்களே.
கள்ளப் புலன்
ஐந்தும் காளா மணி விளக்கே என்று பேசும் திருமூலரின் வரிகள் புலன்களின் இன்னொரு முகத்தைக்
காட்டுகிறது.
நானா பார்த்தேன்?
கண்தானே பார்த்தது!
நானா கேட்டேன்?
காதுதானே கேட்டது!
நானா நுகர்ந்தேன்?
மூக்குதானே நுகர்ந்தது!
நானா அப்படிப்
பேசினேன்? வாய்தானே பேசியது!
நானா தொட்டேன்?
கைதானே தொட்டது!
இப்படி ஒரு
குற்றத்தைச் செய்து விட்டு சமாதானம் சொல்லவும், தப்பிக்கவும் வாய்ப்பிருந்தால் ஐம்புலன்களால்
எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் அது சாத்தியமில்லை. ஐம்புலன்களால்தான் நிகழ்ந்தது என்றாலும்
அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது அந்த ஐம்புலன்களையும் சுமக்கும் அம்மனிதன்தான்.
பாகனில்லாத
காட்டு யானையின் அட்டகாசங்களுக்கு காட்டு யானையைப் பொறுப்பாக்கலாம். பாகன் செலுத்தும்
யானையின் அட்டகாசங்களுக்கு பாகன்தான் பொறுப்பேற்க வேண்டும். பாகன் கையில் அங்குசம்
வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த அங்குசத்தால் யானையைக் கட்டுபடுத்தி செலுத்த வேண்டிய
பொறுப்பு பாகனுக்கு இருக்கிறது.
இதே விளக்கம்
மனிதனுக்கும் பொருந்தும். மனநலமில்லாத மனிதர்கள் தவிர, மனநலமுள்ள அனைத்து மனிதர்களுக்கும்
அறிவு எனும் அங்குசம் இருக்கிறது. அந்த அங்குசத்தால் அவர்கள் ஐம்புலன்களையும் அட்டகாசம்
செய்து அராஜகம் விளைவிக்காமல் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
ஓகம் எனப்படும்
யோகம் ஐம்புலன்களையும் அடக்கும் அறிவை வைராக்கியம் என்கிறது. வைராக்கியத்தை விவேகத்தோடு
பயில்வதால் ஐம்புலன் அடக்கம் சாத்தியம் என்கிறது.
இந்த ஐம்புலன்
அடக்கம் யாவர்க்கும் அவசியம். ஒட்டுமொத்தமாக ஐம்புலன் அடக்கம் இன்றியமையாதது என்பதை,
உரன் என்னும்
தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து என்று குறிப்பிடும்
வள்ளுவர்,
யாகாவார்
ஆயினும் நா காக்க என்று நா எனும் வாய்க்கு ஒரு குறளிலும்,
எனைத்தானும்
நல்லவைக் கேட்க என்று காதுக்கு ஒரு குறளிலும்,
கண்ணுடையர்
என்போர் கற்றோர் என்று கண்ணுக்கு ஒரு குறளிலும் ஒவ்வொரு புலனுக்கும் தனித்தும் வலியுறுத்திச்
சொல்வார்.
இப்படி புலனடக்கதை
ஒவ்வொரு புலனுக்கும் தனித்தும், ஒட்டுமொத்த புலன்களுக்கும் சேர்த்தும் வள்ளுவர் வலியுறுத்தக்
காரணம் மனிதனின் எல்லா குற்றங்களும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன என்பதனால்தான்.
மனிதனின்
அனைத்துக் குற்றங்களும் அவனது நாவிலிருந்துதான் துவங்குகின்றன என்ற நபி பெருமானின்
கூற்றை இவ்விடத்தில் எண்ணிப் பார்க்கலாம்.
கால் போன
போக்கில் பயணங்கள் அமையலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பது போல்தான்
ஐம்புலன்கள் போக்கிலே அறிவு போகலாமா? சென்ற இடத்தால் செலவிடாமல் நன்றின் பால் உய்ப்பதுதானே
அறிவு.
அப்படி ஐம்புலன்களையும்
அறிவு (வைராக்கியம் அல்லது விவேகம்) எனும் அங்குசத்தால் காத்து நிற்கும் துறவியே துறவறம்
கொள்வதற்கு நல்ல வித்தாவான்.
விதைகளிலும்
நல்ல விதைகளுமுண்டு. சொத்தைகளுமுண்டு.
நல்ல விதையே
முளை விடும். சொத்தைகள் மட்டையாகி விடும்.
துறந்து விடுவதால்
மட்டும் வருவது துறவா? வைராக்கியத்தால் ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வருவதே
துறவு.
பார்ப்பதற்கும்,
கேள்விபடுவதற்கும் துறவு என்பது எளிமை போன்று தோன்றும் கடினம். அதாகப்பட்டது அதற்கான
நுழைவுத்தேர்வில் தகுதி பெறுவது என்பது நீட், கேட் தேர்வை விடக் கடினம்.
அதனால்தான்
நாம் உண்மைத் துறவிகளை அரிதாகக் காண்கிறோம். போலித் துறவிகளை தினம் தினம் எளிதாகக்
காண்கிறோம்.
எப்போதும்
ஆனந்தாக்கள் தோன்றுவார்கள். எப்போதாவதுதான் பரமஹம்சர்கள் தோன்றுவார்கள்.
துறவறத்திற்கு
வித்தாகும் தன்மையாகும் உள்ளவர்கள் துறவி ஆகுவதுதான் கெத்து. மற்றவர்கள் துறவி ஆக ஆசைப்படுவது
வெத்து வேட்டுதான். அதுசரி, ஆசைப்படுபவர்கள் எப்படி துறவி ஆக முடியும்! அத்தனைக்கும்
ஆசைப்படு என்று சத்தமிடும் குருக்கள் சாமர்த்தியமாகச் சமாளித்தாலும், இந்த ஒன்றில்
மட்டும் துறவியாக ஆசைப்படுவர்கள் துறவியாக முடியாது. துறவு ஆவதற்கு முதல் தகுதியாக
துறவியாக ஆக வேண்டும் என்ற ஆசையையும் கைவிட வேண்டும். அப்படி கைவிட்டு இருந்தால் துறவிகள் ஏன் கார்ப்பரேட் ஆகுகிறார்கள்?
காம்ரேட் ஆகியிருப்பார்கள்.
ஐம்புலன்களின்
வழி எழும் ஆசைகளை ஒழுங்குபடுத்தாதவன் கார்ப்ரேட்.
ஐம்புலன்களின்
வழி எழும் ஆசைகளை ஒழுங்குபடுத்தியவன் காம்ரேட்.
*****
நன்றி ஐயா!
ReplyDelete