எழுத்துப் பயணி எஸ்.கே.
எஸ்.கே.யின் மனம் விரைவு அடையும் போது
பேச்சு குழறுகிறது. விரைவு மனம் எதையும் ஆராயமல் டக் டக் என்று ஒரு முடிவுக்கு வந்து
விடுகிறது. விரைவில் இது பரபரப்பாகி, பின்பு பதற்றமாக உருவெடுத்து விடுகிறது. மெல்ல
மெல்ல இந்நிலை மன உளைச்சலுக்கு வித்தூன்றி விடுகிறது.
இதைப் போக்குவது அவ்வளவு எளிதில்லை என்று
எஸ்.கே. நினைத்திருந்தான். அதற்கு மருந்து போல அமைந்தன பாடல்கள். அவனுக்கு எப்படி
வருகிறதோ அப்படி சற்று இழுத்து பாட ஆரம்பித்து, இப்போது அவனது மன விரைவு சமன்படுத்தப்பட்டு
விட்டது. படிப்படியாக பரபரப்பு, பதற்றம் எல்லாம் குறைந்து விட்டது. மனதுக்கும் ஒரு
நிறைவு கிடைத்து விட்டது. பாவம், அவன் பாடல்களைக் கேட்டவர்களுக்குதான் அவைகளெல்லாம்
இல்லாமல் போய் விட்டது.
எஸ்.கே.யின் பாடல்களால் அவன் கண்டனங்களையும்,
அக்கம் பக்கத்தாரின் கண்டிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது,
எஸ்.கே.வுக்கு மாற்று நிலை வடிகால் தேவைப்பட்டது.
எஸ்.கே. எழுதுவதில் இறங்கினான்.
எழுதாமல் இருக்க முடியாது என்பதால் எழுதுகிறேன்
என்று அவன் அதற்குக் காரணம் சொன்னான். அவனுக்கு வேறு வழியில்லை. ஒரு காலத்தில் பத்திரிகைகளின்
பிரசுரங்களுக்காகத்தான் எழுதினான். எப்படி அதைக் கடந்து எழுதாமல் இருக்க முடியாது என்பதற்காக
எழுத ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை. இப்போது அவனால் எழுதாமல் இருப்பது கடினம்தான்.
மனதைக் காட்டும் கண்ணாடி அதுவே அவனுக்கு. நாளுக்கு ஒரு முறை கண்ணாடி பார்க்காவிட்டால்
சும்மா இருக்க முடியாது அவன் மனத்தால்.
எழுதிய காலக் கட்டத்தில் அவன் எழுத முடியாது
என ஒருநாளும் சொன்னதில்லை. அந்த இடைப்பட்டக் காலங்களில் எழுத்தைத் தவிர அவன் வேறு
எதையும் செய்யவில்லை. அதை அவன் இவ்வாறு சமாளித்தான்,
எதை முடியாது என்று நினைக்கிறீர்களோ,
அதைச் செய்ய முடியாது என்று தைரியமாகச் சொல்வதில் பிழையேதுமில்லை. முடியாது என்று
சொல்வதைக் கெளரவக் குறைச்சலாக நினைப்பார்களோ என்ற மனப்பான்மை பலரை அவ்வாறு சொல்ல
விடுவதில்லை. இப்படி அவன் சொல்லிச் சொல்லியே வாழைப்பழத்தைத் தோல் வரை உரித்து ஊட்டி
விடச் செய்து உண்டது தனிக்கதை.
இது சோஷியல் மீடியா காலம். எஸ்.கே. அதனுடைய
தனிப்பிரஜை.
அவனும் பேஸ்புக் அடிமையாகி விட்டானா என்று
தெரியவில்லை. வருகின்ற தகவல்கள் அதை உறுதிபடுத்துகின்றன. அதில் அதிக லைக்குகள் விழ
வேண்டும் என்று விரும்புகிறான். இதற்காக தலைகீழாக நிற்க முயற்சித்து ஓர் ஒளிப்படம்
எடுத்துப் பதிவிட்டு இருக்கிறான். பார்த்தவர்கள் புகைப்படத்தைத் 180 டிகிரி ரொடேட்
செய்து போட்டு இருக்கிறான் என்று நினைத்து அலட்சியமாகக் கடந்து விட்டார்கள்.
ஆமாம்! அதிக லைக்குகள் வாங்கி என்னவாகப்
போகிறது? என்று அவனும் அலட்சியமாகக் கடந்து விட்டான். எடுத்த ஒளிப்படத்தை அப்படியே
தானே வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துதான் அவன் பதிவிட்டது. யாராவது ரெண்டு
பேர் படித்தாலும் போதும் என்று நினைத்துப் போட ஆரம்பித்தது. இப்போது மூன்றுக்கும்
மேல் லைக் வேண்டும் என்று எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. ஆனால் அதனால் எல்லாம்
பயன் எதுவும் எஸ்.கே.வுக்கு இல்லை. மனம் அப்படி ஒரு பித்தாகி விட்டது, அப்படியே பழகிப்
பழகி மனதுக்கு அது ஒரு வசியம் போலாகி விட்டது, என்றாலும் அவனுக்குப் பயன் ஏதுமில்லை,
ஏனென்றால் எஸ்.கே. வைத்திருப்பது ஒரு பேக் ஐ.டி.
*****
No comments:
Post a Comment