1 Jan 2018

தெய்வம் ஆவதற்கான சூத்திரம்

குறளதிகாரம் - 1.5 - விகடபாரதி
தெய்வம் ஆவதற்கான சூத்திரம்
            நல்லதும் தீயதாகலாம்.
            தீயதும் நல்லதாகலாம்.
            எப்போது?
            செல்வம் செய்யும் முயற்சியில் இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்படும். கொள்ளை அடித்தப் பணத்தில் ஓர் அறுவை சிகிச்சைக்கு உதவி ஓர் உயிரைக் காப்பாற்றுவது - தீயது நல்லதாகும் இடம். நல்ல வழியில் சம்பாதித்தப் பணத்தை மது, மாது, சூதில் தொலைத்தல் - நல்லது தீயதாகும் இடம்.
            நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு என்கிறார் திருவள்ளுவர்.
            நல்ல வழியில் சம்பாதித்து அது நல்லதாகவே அமையக் கூடாதா? அதற்கு மனம், சொல், செயல் எல்லாம் நல்லதாகவே அமைய வேண்டும். நல்லதை எதிர்கொள்வதன் மூலம் உண்டாகும் சுமைகளைத் தாங்கும் மன தைரியம் வேண்டும்.
            நல்லது நன்மையையே தர வேண்டுமா? நன்மையிலும் ஒரு தீமை இருக்கலாம். தீமை தீமையையே தர வேண்டுமா? தீமையிலும் ஒரு நன்மை இருக்கலாம்.
            நிலைமை அப்படியானால் நல்லதைச் செய்வதா? கெட்டதைச் செய்வதா? எதைச் செய்தாலும் அதன் பின்வினை என்ற ஒன்று இருக்கிறது.
            ஒவ்வொரு வினைக்கும் சமமான ஓர் எதிர்வினை இருக்கிறது என்பது அறிவியல். வாழ்வியலில் ஒவ்வொரு வினைக்கும் சமமற்ற எதிர்வினையும் இருக்கிறது. நல்லது தீயது ஆவதும், தீயது நல்லது ஆவதும் ஆகிய சமமற்ற எதிர்வினைதான் அது.
            நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை என்று ஒருவருக்கு நல்லது செய்யும் போது, யாருக்கு அந்த நல்லதைச் செய்கிறோமோ அவரது பண்பறிந்து செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் குறள் ஒன்று உண்டு.
            கொள்ளையனிடம் சட்டம் பேசினால் கொன்று விடுவான். உண்மையா என்கிறீர்களா? மணல் மாபியாக்கள் அதைத்தானே செய்கிறார்கள்.
            ஆக, நல்வினையோ, தீவினையோ அது இருள்சேர் வினையாகும் வாய்ப்பு இருக்கிறது. எவ்வினையைத்தான் செய்வது?
            இறைவன் ஆவதற்கான புகழ் சேர்க்கும் வினைகளைச் செய்வதன் மூலம் இருள்சேர் வினையாகும் அபாயத்திலிருந்து நீங்கலாம்.
            நாம் எப்படி இறைவன் ஆவது என்பதற்கான வள்ளுவச் சூத்திரம் இருக்கவே இருக்கிறது.
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற சூத்திரம் இறைவன் ஆவதற்கான படிப்படியான செயல்முறையைச் சொல்கிறது.
            புத்தர், ஏசு, காந்தி, நபிகள் எல்லாம் அப்படி பூமியில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்ததன் விளைவாகவே தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறார்கள். வானத்திலிருந்து குதித்து பூமியில் தெய்வம் ஆனவர்கள் அல்ல அவர்கள். வேண்டுமானால் பூமியில் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாகி வானிற்கு சென்றவர்கள் என்று சொல்லலாம்.
            நல்வினையோ, தீவினையோ அதன் எதிர்வினை இருள் சேரும் களங்கத்திலிருந்து நீங்க இறைவனாகுவதற்கான பொருட்படுத்த தக்க புகழ் தரும் செயல்களாக அமைய வேண்டும்.
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதன் மூலம் இறைத்தன்மையை அடைய வழிகாட்டும் குறளில் கீழ்காணும் குறளும் ஒன்று.
            இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
            இறைவன் ஆவதற்கான பொருண்மை சேரும் புகழைப் புரிந்தவர் மாட்டு இருள் சேரும் இருவினையும் சேராது. இருவினை என்று கணக்கா என்ன? பல வினை இருந்தாலும் அவைகளும் சேராது.
            இறைவனை வழிபடுவதன் மூலம் இறைத்தன்மையை அடையலாம் என்று சொல்லாமல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதன் மூலம் அடையக் கிடைப்பதே இறைத்தன்மை என்பதை வலியுறுத்துவன் மூலம் வள்ளுவர் வேறுபடுகிறார்.
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வினைகளை ஆற்றுமின். இருள்சேர் இருவினையும் சேராது இருமின். இறைவனுக்கான பொருள்தரும் புகழைச் சேருமின்.
            மனிதன்தான் தெய்வம் ஆகிறான் என்பதைச் சொல்லியிருக்கிறீர், வணக்கம் வள்ளுவ!
            மனிதனிலிருந்து மனிதன் பிறக்கிறான். தெய்வத்திலிருந்து தெய்வம் பிறப்பதில்லை. மனிதனிலிருந்துதான் தெய்வம் பிறக்கிறான். மனிதனாய்ப் பிறந்துதான் தெய்வமாக முடியும். தெய்வமாக எல்லாம் யாரும் பிறப்பதுமில்லை. பிறப்பில் அப்படி ஒரு வேறுபாடு இல்லை.
            பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அல்லவா!
            கொன்னுட்டீங்க வள்ளுவரே!
            கொல்லாமை பேசிய வள்ளுவரை இப்படிச் சொல்லலாமா என்கிறீர்களா? சரிதான்!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...