12 Jan 2018

மனிதன் அழிவதற்கு முன் புல் அழியும்!

குறளதிகாரம் - 2.6 - விகடபாரதி
மனிதன் அழிவதற்கு முன் புல் அழியும்!
            வானின்று பொழியும் மழையை நம்பித்தான் மனிதன் இருக்கிறான்.
            வானின்று பொழியும் மழையை நம்பித்தான் விலங்குகள் இருக்கின்றன.
            வானின்று பொழியும் மழையை நம்பித்தான் பறவைகள் இருக்கின்றன.
            வானின்று பொழியும் மழையை நம்பித்தான் மிகப் பெரிய மரங்கள் இருக்கின்றன.
            வானின்று பொழியும் மழையை நம்பித்தான் மிகச் சிறிய புல்லும் இருக்கிறது.
            நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பாள் ஒளவை. நம்முடைய நீர்ப்பாசன முறை அப்படி சூழலியல் மண்டலத்தோடு முழுமையாகப் பொருந்தியதாக நெல் - புல் என்ற பேதம் பார்க்காமல் இருந்தது. இன்றைய நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் சொட்டு நீர்ப்பாசன முறைகளை ஒப்பிடும் போது - நாம் வளர்க்கும் பயிர்களுக்கு மட்டும் அல்லாது இயற்கையாக வளரும் புல்லுக்கும் நீர்ப்பாசனத்தைச் செய்ய வேண்டும் என்ற உயிரன்பு அதாவது வள்ளலார் மொழியில் சொல்ல வேண்டுமானால் ஜீவகாருண்யம் என்பது நமது பழமையான மரபார்ந்த நீர்ப்பாசன முறையில் இருந்தது.
            களை என்பதனுள் நாம் வளர்க்கும் பயிர்களுக்கான உரம் இருக்கிறது என்பதை அறிந்து எடுத்தக் களையைச் சேகரித்து மிதித்து விடுவார்கள். களைக்கொல்லி அடித்து களைகளை முற்றிலும் அழித்த மரபு நமது விவசாய முறையில் கிடையாது.
            இன்று அடிக்கும் களைக்கொல்லியில் புல் முதற்கொண்டு அனைத்தும் அழிகின்றன. புல் போன்றவைகள் கூட களையாக வளர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இன்றைய விவசாய முறை செய்யப்படுகிறது.
            இப்படி ஆடு, மாடுகள் தின்பதற்கான புல் விளைந்து விடக் கூடாது. ஆனால் ஆடு, மாடுகள் கொடுக்கும் பால் மட்டும் வேண்டும் என்பது நமது கவனமாக இருக்கிறது.
            'மழையே மழையே ஏன் பேஞ்சே?' என்று குழந்தைகள் பாடி மகிழும் மழலையர் பாடலில் 'மாடு திங்க நான் பேஞ்சேன்!' என்று மழை தரும் பதிலில் வள்ளுவரின் குறள் இருக்கிறது.
            விசும்பின் துளி வீழின் மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது என்பதே அக்குறள்.
            இன்று ஆங்கில மழலையர் பாடல்களை மட்டும் குழந்தைகள் பாட ஊக்குவிக்கப்படும் பள்ளி மற்றும் குடும்பச் சூழலில் 'மழையே மழையே ஏன் பேஞ்சே?' என்று தமிழில் பாட குழந்தைச் செல்வங்களுக்கு வாய்ப்பின்றி, 'ரெயின் ரெயின் கோ அவே' என்று மழையை விரட்டி விடும் சூழல் மெல்ல உருவாக் கொண்டு இருக்கிறது.
            ஆம்! இன்றைய மண் தரைகளற்ற காங்கிரீட் தளங்களில் மழைப் பொழிந்து வெள்ளமாகி நம்மை மிரட்டுவதற்கு முன் 'ரெயின் ரெயின் கோ அவே!' என்று விரட்டி விடுவது எவ்வளவோ மேல் பாருங்கள்!
            ஆனாலும் பாருங்கள்! அந்தக் காங்கிரீட் தளங்களிலும் தூசு, புழுதிகளால் சேர்ந்த சிறு மண்ணில் மழைத்துளிகள் பட்டு புல் முளை விட்டிருப்பதைக் கண்டிருக்கலாம்.
            மனிதன் இந்த பூமியில் வாழ வேண்டிய காலம் வரை புல் முளைப்பதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் புல் முளைக்காத பூமியில் மனிதன் வாழ முடியாது.
            புல் என்பது மனிதன் வாழ்கிறான் என்பதற்கான அடையாளக் குறியீடு. மனித குலம் அழியப் போகிறது என்றால் அதற்கு முன் புல் அழிந்து போயிருக்கும். 2022 இல் உலகம் அழியுமா? அல்லது 2044 இல் உலகம் அழியுமா? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில், புல் அழிந்தால் மனிதகுலம் அழிந்து விடும் என்பதுதான்.
            அணுகுண்டுகள் வெடித்து மனிதன் வாழ முடியாமல் போகும் நிலப்பகுதியில் புல் கூட முளைப்பதில்லை என்றுதானே அறிவியல் சொல்கிறது.
            புல் முளைப்பதற்கும், மனிதன் வாழ்வதற்கும் இயற்கையின் தொடர்பு இருக்கிறது. மற்றொரு வகையில் பார்ப்பின் எந்த வகை மண்ணிலும் முளைக்கும் புல் சிறப்பானது. களர் நிலத்தில் கூட புல் விளையும் என்ற பாவேந்தரின் பாடல் வரி ஒன்று உண்டு.
            மனிதர் இந்தப் பூமியில் விளைவதற்கு புல் விளைய வேண்டும். புல் விளையும் பூமியை அணுகுண்டுகளால் அழித்து விடக் கூடாது. அது மட்டும் அல்லாது சூழலியல் மாறுபாடுகளால் மழை பொழியாமல் போவதற்கு நாம் காரணமாகி விடக் கூடாது.
            ஏனென்றால்,
            விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது. பசும்புல் தலை காண்பது அரிதானால் அந்த நிலத்தில் மனிதர்களின் தலைகளையும் காண்பதும் அரிதாகி விடும்.
            எளிமையானக் கருத்தைச் சொல்வது போன்ற ஓர் அபாயகரமான எச்சரிக்கையைச் சொல்லும் குறள்தான், விசும்பின்... எனத் தொடங்கும் அக்குறள். அது மனிதகுலம் முடிந்து விடக் கூடாது என்ற மாபெரும் அக்கறை கொண்ட குறள்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...