பணியிட வன்முறை தவிர்க்க...
அதிகம் பேசாமல் இருந்தேன் எஸ்.கே. எந்தப்
பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. கொஞ்சம் பேச ஆரம்பித்தான். பிரச்சனை மேல் பிரச்சனையாக
ஏற்பட்டது. மன இறுக்கமோ தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டு போனது. பேச ஆரம்பிக்க
ஆரம்பிக்க... எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்கலாம் என அவன் மனம் சதா சிந்தித்துக்
கொண்டே இருந்தது. தன்னுடைய இருப்பை விளக்கம் கொடுப்பதன் மூலம் புரிய வைக்க வேண்டும்
என்று அவசியமில்லை என்றால், செயல்படுவதன் மூலமும் புரிய வைக்கலாம் என நினைத்தான்.
ஒருவருடைய ஈகோ இன்னொருவரை வளர விடாது.
அது பேச்சாக இருந்தாலும், செயலாக இருந்தாலும், வீழ்த்தவே செய்யும். அதுதான் அவனுக்கு
நடந்தது.
எஸ்.கே. தன்னுடைய தேவைகளை எம்.கே.விடம்
நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டியதில்லை. அவன் குறிப்பிட்டத் தேவைகளை காதில்
வாங்கி வைத்துக் கொண்டு எம்.கே. கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவும் தேவையில்லை.
எம்.கே.வைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள அது ஒரு அருமையான சந்தர்ப்பம் என்று இதை
நேர்மறையாகப் பார்க்க வேண்டுமே தவிர, எதிர்மறையாகப் பார்க்கக் கூடாது என்பது புரிந்தது
எஸ்.கே.வுக்கு. ஆனால் நடப்பது எதுவும் உவப்பாகத் தெரியவில்லை.
எது அவர்களுக்குத் தேவைப்படாதோ, அதை அவர்களுக்கு
வழங்கக் கூடாது. அது தேவையென அவர்களிடம் நிறுவவும் முயற்சிக்கக் கூடாது.
எஸ்.கே. நினைத்ததில் சிறந்த சில விசயங்களும்
இருக்கவே செய்தன. ஒவ்வொருவரின் மனமும் அவரவர் அனுபவம், எதிர்கொண்ட கஷ்டம், அவர்களுக்கே
உரிய சிறுமைத் தன்மையோடு ஆக்கப்பட்டது. இதில் எஸ்.கே. தன் தேவைகளைச் சொல்லி அநாவசியமாக
தலையிட்டு அவர்களின் மனதை மாற்ற வேண்டும் என்று முயலக் கூடாது. அவர்கள் மனதுக்கு அவர்கள்
பாட்டுக்கு இருக்கட்டும். எஸ்.கே. மனதுக்கு எஸ்.கே. பாட்டுக்கு இருந்திருக்கலாம்.
யாரையும் எதையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்
கூடாது என்பது அறியாதது அன்று. எம்.கே.வின் அசைன்மெண்டிலிருந்து எஸ்.கே.யின் மன இறுக்கம்
துவங்குகிறது எனக் குத்து மதிப்பாகக் கொள்ளலாம். அதை ஒரு இலக்காக வைத்துக் கொண்டு
அந்த திசை நோக்கி பலரையும் எம்.கே. கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினான். எஸ்.கே.
தனக்குக் கீழே இருந்தவர்களைச் சோதனைக்கு உள்ளாக்கினான். உண்மையில் அது கடைசியில் எஸ்.கே.வை
நோக்கியேப் பாய்ந்து விட்டது.
எஸ்.கே. அந்த வாரம் முழுவதும் கண்ணில்
படுபவர்களைப் போட்டு நன்றாக அடித்தான். அது தேவையில்லாதது. அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக
மாற்றுகிறோம் என்ற போக்கில் அடித்தது அவனை ஒழுக்கம் கெட்ட மனிதனாக மாற்றியது. அதாவது
அவன் கோபப்படுபவனாக மாறினான். குறிப்பிட்ட விளைவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவன்
எதையும் செய்யத் தயாராக இருக்கும் கல் நெஞ்சக் காரனாக மாறினான்.
எதோ ஒப்பேத்துவது போல தன் வேலை முறைகளை
அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தன் வன்முறைச் செயலை நினைத்து அவன் அழுதான். அதுதான்
மன இறுக்கம் இல்லாமல் இருக்க உதவும். அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறேன் பேர்வழி
என்று ஆரம்பித்தால்... மன இறுக்கமே மிஞ்சும்.
ஏதோ எஸ்.கே.வுக்குக் கொஞ்சம் தெரியும்.
அதை வைத்து ஏதோ கொஞ்சம் அவன் ஒப்பேத்தினால் போதும். தீவிரமாக முயல்கிறேன் என்று
எதிர்படுபவர்களை அடிப்பது நல்லதல்ல. அது நிறுத்தப்பட வேண்டியது. அவர்கள் எவ்வழிப் போக
நினைக்கிறார்களோ, அவ்வழி விட்டு விட வேண்டும். தம் வழிக்குக் கொண்டு வருகிறேன் என்று
மனதைக் கடுமையாக்கிக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகித் துன்பப்படக் கூடாது.
ஒவ்வொருவனும் தன் மனஉளைச்சலை எதிரில்
இருப்பவர்கள் மேல் காட்டும் வன்முறையில் மூலம்தான் தணித்துக் கொள்கிறான். அந்த வன்முறை
கலவரமாக மாறி விடாத வண்ணம் ஓர் அதிகார அமைப்பை உருவாக்கி, அதிகார அரிதாரத்தைப் பூசிக்
கொள்கிறான்.
இதை உணர்ந்து கொண்ட பின் எஸ்.கே. இயல்பாக
பணியாற்றுவதையே விரும்புகிறான். இப்போது அவன் பணிகளில் எந்த வித சிறப்பான அம்சங்களும்
வெளிப்படுவதில்லை. அதே போல மோசமான அம்சங்களும் வெளிப்படுவதில்லை.
*****
No comments:
Post a Comment