11 Jan 2018

கெடுப்பதா அல்லது கொடுப்பதா மழை?!

குறளதிகாரம் - 2.5 - விகடபாரதி
கெடுப்பதா அல்லது கொடுப்பதா மழை?!
            'காய்ஞ்சு கெடுக்குது மழை. இல்லேன்னா பேய்ஞ்சு கெடுக்குது மழை' என்பார்கள் கிராமத்தில்.
            தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழைப் பொழியாமல் கெடுத்து விடுவதுண்டு. நன்றாக நீர் கிடைக்கும் பருவத்தில் மேலும் மேலும் பொழிந்து வெள்ளக் காடாக்கி பயிர்களை மூழ்கச் செய்து அழிக்கும் ஊழிப் பெருவெள்ளம் போல் மாறி மழை கெடுத்து விடுவதுமுண்டு.
            பட்ட புண்ணிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்களே கிராமத்தில். அப்படி கிராமத்தில் விவசாயம் செய்பவர்களை மழை இப்படி இரண்டு விதத்தில் பழி வாங்கி விடுவதுண்டு.
            காவிரி பழி வாங்கியது போக,
            நமது நீர் பகிர்மான அமைப்புகள், நிர்வாகங்கள் பழி வாங்கியது போக,
            ரியல் எஸ்டேட்காரர்கள் பழி வாங்கியது போக,
            மழையும் கடனே என்று கடனுக்கு வாங்கி செய்த விவசாயத்தைக் கவிழ்த்து விடும்.
            வள்ளலுக்கு உவமையாகக் கார்மேகத்தைச் சுட்டும் இலக்கியம். அப்படிப்பட்ட கார்மேகம்தான் போர்மேகம் போல் விவசாயிகள் மேல் போர் தொடுத்து இப்படி சில சமயம் செய்து விடும்.
            அவ்வளவு மோசமானதா மழை என்றால், உரிய நேரத்தில் நிவாரணத்தை அளிக்காத நம் அமைப்புகளைப் போல் அவ்வளவு மோசமில்லை மழை. ஆம்! அப்படிக் கெடுத்த மழைதான் பருவத்துக்குச் சரியாகப் பொழிந்து விவசாயிகளை வாழவும் வைத்து இருக்கிறது.
            அப்படியானால் மழை வீழ வைத்திருக்கிறதா? வாழ வைத்திருக்கிறதா? என்றால் இரண்டையும் செய்து வைத்திருக்கிறது.
            கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை என்கிறார் வள்ளுவர்.
            மழை நினைத்தால் ஆக்கும்.
            மழை நினைத்தால் காக்கும்.
            மழை நினைத்தால் அழிக்கும்.
            ஆக்கல், காத்தல், அழித்தல் இந்த மூன்றும் மழைக்குரியப் பண்புகள்.
            மழை நினைத்தால் மனிதனை எதுவும் செய்து விடும். மனிதன் நினைத்தால் அந்த மழையை எதுவும் செய்ய முடியாதா?
            ஏன் செய்ய முடியாது?
            நம் முன்னோர்கள் அப்படிச் செய்து இருந்தார்கள்.
            மழை பெய்யாமல் எவ்வளவு வறட்சி நேர்ந்தாலும், அதைச் சமாளிக்கும் அளவுக்கு தெருவுக்கு தெரு குட்டைகளை அமைத்து இருந்தார்கள். ஊருக்கு ஊர் பெரிய குளங்களை அமைத்து இருந்தார்கள். ஏரியாவுக்கு ஏரியா ஏரிகளை வெட்டியிருந்தார்கள்.
            எவ்வளவு மழை பொழிந்தாலும் மழை நீர் வடியும் அளவுக்கு வடிகால் வாய்க்கால்களையும், அமைப்புகளையும் முறையாக மராமத்து செய்து பராமரித்தார்கள்.
            குழாயில் நீர் பிடிக்கும் வசதிகள் வந்த பிறகு நாம் குட்டைகளை, குளங்களை, ஏரிகளை மறந்தோம்.
            காங்கிரீட் வீடுகள் வந்த பிறகு வடிகால் வாய்க்கால்களைப் போட்டுத் தள்ளினோம்.
            விளைவு, சின்ன மழைக்கே 'ரெயின் ரெயின் கோ அவே' பாடிக் கொண்டிருக்கிறோம். பெரும் மழைக்கு படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
            மழை பொய்த்தால், 'மழையே மழையே வா வா வா' என தவித்துக் கொண்டிருக்கிறோம்.
            மழை கெடுக்கும், அதுவே கொடுக்கும்.
            அது கெடுத்தாலும் சரி, கெடுக்க விடாமல்,
            கொடுத்தாலும் சரி, அதை இழக்க விடாமல்
            ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாளாது உஞற்றுபவர் எனும்படியான நம் முன்னோர்கள் அரண் செய்து இருந்தார்கள்.
            மழையைக் கட்டுபடுத்தி அப்படி மண்டியிட வைத்த பெருமை நம் முன்னோர்க்கு உண்டு. ஆனால் நமக்கு? மழையிடம் கட்டுபட்டு மண்டியிட்ட சிறுமையைத் தவிர வேறு என்ன உண்டு!
            மழையாகப் பார்த்து பொழியாத காலத்துப் பொழிந்தால் தேவலாம். அதிகம் பொழிந்த விடத்து பெரிய மனது பண்ணி நிறுத்தினால் தேவலாம். என்ன செய்வது? நாம் செய்ததெல்லாம் பிழை. ஆகவே ஏதாவது பார்த்து செய்யட்டும் மழை!
            கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...