11 Jan 2018

தேநீர்க் கணக்கு - பழைய புதிய கதை வரிசை

தேநீர்க் கணக்கு - பழைய புதிய கதை வரிசை
            எஸ்.கே. செய்வது மிகுந்த மன வேதனையைத் தந்தது. எடுத்துக் கொடுப்பதில் மிகுந்த கணக்குப் பார்த்தான். அதுவும் தோண்டித் துருவி, நுணுகி, கஞ்சனுக்கும் கஞ்சனுமாய்க் கணக்குப் பார்த்தான்.
            ஒருவரின் இயல்பை மாற்றுவது என்பது சாதாரணப்பட்ட காரியமில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்லப்பட்ட வரிகள் அர்த்த வீரியம் மிக்கவை.
            என்ன பெரிய தேநீர்? வாங்கிக் கொள்ள முடியாதா என்ன? தேநீருக்காக மாதம் கொஞ்சம் செலவு பண்ண முடியாதா என்ன? மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுக்கும் தேநீரில் கணக்குப் பார்த்தான் எஸ்.கே.
            நேற்றிலிருந்து பலவாறாக யோசித்துக் குமைந்துப் போனேன். ஒரு நேரம் யோசிப்பது மறுநேரம் மறந்து போகிறது. அந்த அளவுக்கு மாறி மாறி யோசித்தேன்.
            எஸ்.கே. நீ உன் யோசனைப்படியே போ. அப்படியாவது சந்தோசமாக இரு.
            எஸ்.கே.வின் மனம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்ததிலிருந்து என் சந்தோசம் போய் விட்டது. அந்த அளவுக்கு ஒரு மனம் நன்றாக இருக்கக் கூடாது என்பதற்கு எதிரான சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
            எஸ்.கே.வின் பராமரிப்புக் கணக்குகள் தவறாகச் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கு கேட்டிருக்கவும் வேண்டியதில்லை. அதை நிர்வகிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கவும் வேண்டியதில்லை. எஸ்.கே. நான் செய்யும் தேநீர்க் கணக்கிற்கு வந்து நின்றதற்குக் காரணம் அதுதான்.
            அவனவன் செய்கின்ற பாவத்தை அவனவன் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டுப் போயிருக்கலாம். எனக்கு தேவையில்லாத மனஇறுக்கமாகவது இல்லாமல் இருந்திருக்கும்.
            எஸ்.கே.வை மாற்றுகிறேன் என்று போய் நான் மனஇறுக்கத்துக்குள் சிக்கிக் கொண்டதுதான் மிச்சம்.
            எஸ்.கே. போன்ற சிலரிடம் இப்படியெல்லாம் மாற்ற வேண்டும், மாற வேண்டும் என்று சொல்லி, அவர்கள் அதை செய்கிறேன் பார் என்ற என்னையும் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் நிகழ்வுகள் எனக்கு நிறையவே நேர்ந்து விட்டன. ஆனால் நான் எப்போதும் திருந்தியபாடில்லை என்பதைத்தான் இந்த அனுபவமும் காட்டியது.
            இனி யார் காரியத்திலும் கருத்துக் கூறவும் வேண்டாம். ஆலோசனைகள் சொல்லவும் வேண்டாம். முன்பு இருந்தேனே பட்டும் படாமலும், அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டேன்.
            எதாவது நடந்து விட்டுப் போகிறது? எனக்கென்ன? எல்லாருக்கும் உள்ளதுதானே எனக்கும். எதையும் மாற்ற வேண்டாம் என்று நினைத்தேன். ஏனென்றால் எந்த நாயும் மாறுவதற்கு தயாராக இல்லை. ஆனால் காலம் அந்த நாய்களை அடித்துத் துவைத்து மாற்றும். நான் அன்பாகச் சொல்லி மாற்றுவதை விட, காலம் அடித்துத் துவைத்து தண்டம் செய்து மாற்றுவதற்குத்தான் அவர்கள் அடிபணிவார்கள்.
            பொறுமையாக இரு. எல்லா விசயங்களும் தானாகவே சரியாகி விடும். எதையும் கண்டு கொள்ளாதே. எல்லா விசயங்களும் கட்டுக்குள் வந்து விடும். நீயாகத் தேடிச் செல்லாதே. அவைகளாக தேடி வரட்டும். அது வரைக்கும் அவசரம் காட்டாதே. பேசாமல் இரு. அவர்களே வந்துப் பேசுவார்கள்.
            எஸ்.கே. அப்படி கடைசியில் வந்து பேசினான், ஒரு தேநீர் வாங்கிக் கொடுப்பேன் என்ற எதிர்பார்ப்போடு. நான் எஸ்.கே.வோடு வாங்கியத் தேநீரைப் பருகவில்லை. ஒரு நல்ல உரையாடலுக்கான நான் வாய்ப்பை நான் இழந்து கொண்டிருந்தேன்.
            இந்தத் தேநீர்ச் சந்திப்பின் மூலம் என்னை திருப்திபடுத்திப்படுத்து விட்டதாக எஸ்.கே. சென்று விட்டான். நான் குடிக்காமல் வைத்திருந்த தேநீரைக் கீழே ஊற்றினேன்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...