குறளதிகாரம் - 3.3 - விகடபாரதி
இதுவா? அதுவா?
எது என முடிவெடுப்பது எப்படி?
'இரு மனசு'
என்பார்களே! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
இப்படியா?
அப்படியா?
இதுவா? அதுவா?
என்று எப்போதும் குழப்பத்தில் இருப்பவர்கள் அவர்கள்.
கூழுக்கும்
ஆசை, மீசைக்கும் ஆசை என்பது அப்படி ஒரு வகையான இரு மனசு.
உளவியல் இதை
மனப்போராட்டம் என்கிறது. அது ஒன்று சாத்தியமாகி இன்னொன்று சாத்தியமாக நிலையில் இரண்டும்
சாத்தியமாக வேண்டும் என்று இரண்டையும் விரும்புகின்ற மனப்போராட்டமாக இருக்கலாம். சுகரும்
குறைய வேண்டும், அல்வாவும் சாப்பிட வேண்டும் என்று சிலர் ஒரே நேரத்தில் ஆசைப்படுவது
போன்றது அது.
ஒன்றை விரும்பி,
இன்னொன்றை விரும்பாத மனப்போராட்டமாகவும் இருக்கலாம். பை நிறைய கையூட்டும் வாங்க
வேண்டும், அதனால் கெட்டப் பெயரும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைப் போன்றது அது.
இரண்டில்
ஒன்றுதான் நடக்கப் போகிறது எனும் பட்சத்தில், நடக்கப் போகின்ற இரண்டையுமே வெறுக்கின்ற
மனப்போராட்டமாகவும் இருக்கலாம். இடைத்தேர்தலில்
பணப்புழக்கம் இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் பணத்தைப் புழங்கியவர்கள் வெற்றி
பெறக் கூடாது என்று எதிர்பார்ப்பதைப் போன்றது இது. இடைத்தேர்தலில் பணப்புழக்கம் இருக்காமல்
இருக்குமா? அப்படிப் பணம் புழங்கியப் பிறகு பணத்தைப் புழங்கியவர்கள் வெற்றி பெறாமல்
இருப்பார்களா? இரண்டு ஆசைகளும் நிராசைகள்தான்.
இருமைத் தன்மை
என்பது தனிமனிதன் தொடங்கி, குடும்பம், சமூகம், நாடு என்று எல்லாவற்றிலும் விரிந்து
கிடக்கிறது. இந்த இருமைத் தன்மைகளுக்கு இடையேயானப் போராட்டமே வாழ்க்கை.
தத்துவம்
இதை முரண் என்கிறது. முரண்கள் ஒன்றொடொன்று மோதியே புதிய சிந்தாந்தங்கள் உண்டாகின்றன.
தனிமனிதனை
எடுத்துக் கொண்டால் சுய நலமா? பொது நலமா? என்ற இருமை நிறைந்த கேள்வி செய்யும் ஒவ்வொரு
செயலிலும் எழுந்து நிற்கும்.
குடும்பத்தை
எடுத்துக் கொண்டால் நீயா? நானா? அல்லது ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? என்ற இருமைத் தன்மையானப்
போராட்டம் இருந்து கொண்டிருக்கும்.
சமூகத்தை
எடுத்துக் கொண்டால் ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்பன போன்ற இருமைத்
தன்மைகள் இருந்து கொண்டே இருக்கும்.
நாடு என்று
எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற இருமைத் தன்மையோ அல்லது ஜனநாயக ஆட்சியா,
சர்வாதிகார ஆட்சியா என்பது போன்ற இருமைத் தன்மைகளோ நிலவிக் கொண்டே இருக்கும்.
எதிரெதிர்த்
தன்மைகள் வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் வந்து நிற்கும். 'தங்கப்பதக்கம்' என்ற சிவாஜி
நடித்த திரைப்படத்தின் கிளைமேக்ஸில் பிள்ளையா? நாடா? என்ற கேள்வி வந்து நிற்பதைப் போல
என்று சொல்லலாம். அல்லது ஆர்.கே. நகர் மக்களுக்கு பணநாயகமா, ஜனநாயகமா என்ற கேள்வி
வந்து நின்றதைப் போல என்று புதிய உவமையாகவும் அதைச் சொல்லலாம்.
அறமே இல்லறம்,
துறவறம் என்று இரண்டாகப் பிரிந்து எதிரெதிராக இரு வகைகளில் இருக்கும் போது, உலகில்
இருப்பவைகள் எல்லாம் இருமைத் தன்மைகளின் கலப்பு என்று சொல்வதில் உண்மை இருக்கிறது.
இரவு - பகல்,
தண்ணீர்
- நெருப்பு,
இனிப்பு
- கசப்பு,
நன்மை - தீமை,
அன்பு - வெறுப்பு,
சிரிப்பு
- அழுகை,
வெற்றி -
தோல்வி,
கம்யூனிசம்
- கேப்பிடலிசம்,
ஆத்திகம்
- நாத்தகிம்,
இம்மை - மறுமை,
உண்மை - பொய்
பிறப்பு
- இறப்பு
இப்படிச்
சொல்லிக் கொண்டே போகலாம். முடிவுறாத பட்டியல் ஒன்று தயாரிக்கச் சொன்னால் இப்படி
ஒன்றை தயாரிக்கலாம். எந்தக் காலத்திலும் அதற்கு முடிவு இருக்காது. காலமே கி.மு., கி.பி.,
என்று இரண்டாகப் பிரிந்து நிற்பதுதானே. அல்லது நடந்தது நடந்து விட்டது என்று நடந்த
காலமாகவும், இனி நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்று நடக்கப் போகின்ற காலமாக
நம் வாய் வாக்கில் இரண்டாக பிரிந்து நிற்பதுதானே.
இருமைத் தன்மைகளை
ஒழிப்பது சாத்தியமில்லை. இந்த இருமைத் தன்மைகளுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்தி நன்மையைக்
கைக்கொள்வதுதான் வாழ்க்கை.
இந்த மேம்பட்ட
புரிதல் இல்லறத்தாரை விட துறவறத்தாருக்கு அதிகம் வேண்டப்படுவதாகும். அவர்கள் இல்லறம்
- துறவறம் எனும் இருமைகளின் வகை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லறத்தார்க்கு ஓர்
ஐயம் எனும் போது இல்லறத்தை அறிந்து துறவறத்தில் சிறந்து நிற்பவர்களான துறவிகளுக்கு
அதை நீக்கித் தர வேண்டிய கடமை இருக்கிறது.
இல்லறத்தின்
நெறிகளும், துறவறத்தின் நெறிகளும் ஐயம் திரிபறத் தெரிந்து துறவு பூண்டவர்களே துறவறத்தின்
பெருமையாகப் பேசத் தகுதியானவர்கள். அல்லாதவர்கள் 'கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?'
என்று ஒரு கதைச் சொல்வார்களே, அத்தகைய சிறுமைக்கு ஆளாகி விடுவார்கள்.
இல்லறத்தார்க்கு
இல்லறத்தின் நெறிகள் மட்டுமே தெரிந்தால் கூட போதுமானது. துறவறத்தின் நெறிகள் தெரிய
வேண்டும் என்பது அவசியமன்று. துறவறத்தார்க்கு துறவறத்தின் நெறிகள் மட்டும் தெரிந்தால்
போதுமானதன்று. அவர்களுக்கு இல்லறத்தின் நெறிகளும் தெரிய வேண்டும்.
அப்படி இல்லறம்
- துறவறம் இரண்டின் நெறி, வகை அறிந்து துறவறம் பூண்டாரின் பெருமையே உலகம் பேசத் தகுதியானதாக
அமையும். வெற்றுத் துறவிகளின் வேஷங்களை கலைத்துப் போட்டு சிரிப்பதை உலகம் ஒரு வேடிக்கையாகவே
அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறது.
போலித் துறவிகளை
காமெடி பீஸ்களாக்கிக் களுக்கென்று சிரித்து விட்டுப் போவது உலகத்திற்கான ஆகச் சிறந்த
காமெடிச் சேனல்.
இரண்டு பக்கமும்
அறிந்தவர்கள் சமநிலையோடு நடக்கிறார்கள். ஒன்றில் நிலைபெறுகிறார்கள். சலனமுள்ளவர்கள்
இல்லறமா? துறவறமா? என்று தவிக்கிறார்கள். நன்மை, தீமை எல்லாவற்றிலும் இருக்கிறது. இரண்டையும்
அறிந்து நிதானமாக முடிவெடுப்பவர்கள் நிலைத்து நிற்கிறார்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவெடுப்பவர்கள்
இல்லறத்திற்கும், துறவறத்திற்கும், பின் துறவறத்திற்கும் இல்லறத்திற்கும் என்று குரங்கு
போல் தாவிக் கொண்டு இருக்கிறார்கள்.
முடிவெடுக்கும்
முன் இரண்டையும் அறிந்து கொள். இரண்டில் ஒன்றை முடிவாக எடு. அது இல்லறமோ? துறவறமோ?
உன் முடிவில் உறுதியாக நில். இல்லறம் - துறவறம் என்ற இருமை நிலைகளுக்கு மட்டுமல்லாது
வாழ்வின் எந்த நிலைக்கும் பொருந்தும் இந்த விளக்கம் வள்ளுவர் வாய் மொழியாக இப்படி
வடிவம் பெறுகிறது,
இருமை வகை
தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
இருமைகளின்
பக்கம் நின்று முடிவெடுக்கும் போது, எடுக்கும் முடிவு அறம் பூண்டதாக இருக்க வேண்டும்
என்பதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அறம் பூண்ட முடிவே பெருமைக்கு
உரியது. ஏனென்றால் நன்மை - தீமை என்ற இருமைகளின் வகை அறிந்து முடிவு கொள்ளும் போது
தீமையின் பக்கம் நிற்பதை முடிவாகக் கொண்டால் அந்த முடிவு சிறுமைக்கு உரியது அல்லவா!
இருமை என்பது
இல்லறம் - துறவறம் என்றோ, நன்மை - தீமை என்றோ குறுக்கிப் பார்ப்பதோடு முடிவுக்கு
வரக் கூடியதா என்ன? அது உலகில் இருக்கும் அனைத்து இருமைகளோடும் பொருந்தி வரக் கூடியது.
குறளுக்கு அப்படி உலகளாவிய பொதுத்தன்மையோடு பொருந்தி வரும் பிரபஞ்ச பொதுத் தன்மை
உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் குறளின் வீச்சு மிக மிகப் பெரியது.
*****
No comments:
Post a Comment