19 Jan 2018

பேச்சுப் பாதுகாப்புக்கான கவச அங்கிகள்

பேச்சுப் பாதுகாப்புக்கான கவச அங்கிகள்
            தற்போது பேச்சுதான் பெரிய பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது என்பதால் எஸ்.கே.வுக்கு அது சம்பந்தமாக சிந்திக்கும் சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது. எப்படிப்பட்ட மேற்கோள்களை, உவமைகளைக் கையாள வேண்டும் என்பதில் நிறைய ஆய்வு சார்ந்த முடிபுகள் தேவைப்படுகின்றன.
            அதற்கு முன்பாக,
            நிறைய விசயங்கள் பேசாமல் இருந்தாலே சரியாகி விடும். பேசிப் பேசிச் சிக்கல்கள் பெரிதாகும் அதிசயத்தைப் போல் இந்த உலகில் வேறு அதிசயம் இல்லை. பிரச்சனைகளைப் பெரிதாக்கிக் கொள்ள மேலும் மேலும் பேசலாம்.
            பேசுவது மந்திரம் போல சுருக்கமாக இருக்க வேண்டும். விளக்கங்கள், வியாக்கியானங்கள் எப்போதும் ஆபத்திலேயே சிக்க வைக்கும். குறிப்பாக மேற்கோள்களை கவனமாகக் கையாள வேண்டும். மேற்கோள்கள் இன்னொருவரது கருத்தாக இருக்கலாம். அதைக் கையாளும் போது அதற்குச் சொந்தக்காரர் பேசுபவர்தான் என்பது போல கைகலப்பில் இறங்கி விடுவார்கள்.
            பேச்சு என்றால் அவர்களைப் பற்றி அவர்களே பெருமிதமாக உணரும் வகையில் பேசி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். அதுவும் சுருக்கமாகத்தான். விரிவாக என்றால் நிச்சயம் எழுதி வைத்துக் கொண்டுதான் வாசிக்க வேண்டும். அதுதான் நல்லது மற்றும் பாதுகாப்பானது.
            ஒருவரைச் சற்றே அதிகமாகப் புகழும் போது இன்னொருவர் மனதுக்குள் புழுங்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக பேசுபவரை மட்டம் தட்டுவது போல் அந்த இன்னொருவர் எதிர்கருத்துகளை அள்ளி வீச ஆரம்பிப்பார். மிக கவனமாக பாதுகாப்புக் கவசங்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் என்றால் அது இந்த இடம்தான்.
            நிறைய விசயங்களில் புதைந்திருக்கும் எளிமையான உண்மை விளக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்காகவேனும் பேசத்தான் வேண்டியிருக்கிறது. பேச்சின் அவசியம் இங்குதான் உணரப்படுகிறது. அதற்காக ஒரு நேரத்தில் பல உண்மைகள் என்ற கணக்கில் இறங்கி விடக் கூடாது. ஒரு நேரத்தில் ஓர் உண்மை என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நிறுத்தத்துக்கு சற்று முன்னே நிறுத்திக் கொண்டு நிறுத்தத்தை நோக்கி நீங்கள் நடந்தால் எந்த வாகனத்தில் வந்து இறங்கி வருகிறீர்கள் என்ற ஆராய்ச்சியில் யாரும் இறங்க மாட்டார்கள்.
            போன் செய்து பேசி விளக்கங்களை அள்ளி வீசி புரிய வைப்பது உசிதமாகக் கொள்ளத்தக்கது அன்று. மேலும் தப்பு அபிப்ராயங்களை விதைத்து விட்டுப் போக அதுவே போதுமானது. நீங்கள் அவரை அலட்சியப்படுத்துகிறீர்களோ என்ற எண்ணத்தை அது விதைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மேலும் அப்படி ஒருவரிடம் போனில் பேசியெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. மேலும் நீங்கள் பேசும் போது யாரிடம் பேசுகிறீரோ அவரே பேசி, உங்களைப் பேச விடாமல் செய்து நிலைமை அதி தீவிர சிக்கலாகவும் வாய்ப்பு உண்டு.
            அவ்வளவுதான் செய்ய முடியும். அதற்கு மேல் பேச்சின் மூலம் மிகையாக செய்ய முயன்று இயலாமையால் ஏற்படும் மனச்சோர்வை அறுவடை செய்து விடாதீர்கள். பேராசைப்படும் எல்லாவற்றிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது அதிகம் உழைப்பதாக இருந்தாலும் சரி, பேச்சின் மூலம் சாதிக்க நினைத்தாலும் சரி. எல்லாவற்றிலும் மிதம் அவசியம். நிதானம் முக்கியம். மிகப் பெரிய ஏரியாவில் கவனம் செலுத்தி எதையோ சாதிக்க நினைக்கிறேன் என நினைத்துப் பேசி கேலிக்கு உரியவர்களாக மாறி விடாதீர்கள். பேசுவதில் உங்களால் எவ்வளவு இயலுகிறதோ அது போதும். ‍அதை விட குறைவாக என்றாலும் மிக நல்லது. அதற்கு மேல் கேட்கும் அவர்கள் கற்பனை செய்து கொள்வார்கள், அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
            இவைகளே பேச்சின் மூலம் பாதுகாப்பாக இருக்க நினைப்பவர்களுக்கு எஸ்.கே. கண்டறிந்த சூட்சமங்கள். மேலும் சூட்சமங்கள் தெரிய வரும் போது அவ்வபோது தெரிவிக்க உறுதி கொள்கிறான் எஸ்.கே.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...