குறளதிகாரம் - 2.3 - விகடபாரதி
பசி புசிக்கவா மனித
இனம்?!
வையை எனும்
பொய்யா குலக்கொடி எனும் வாசகம் சொல்லும் உண்மை, மாதம் மும்மாரி பொழிந்தது என்ற
வரலாற்று பதிவு ஆகும். அதனால் வையை ஆறு பொய்க்காமல் ஓடிக் கொண்டிருந்தது.
எப்போது
மாதம் மும்மாரிப் பொய்க்கத் தொடங்கியதோ, அப்போதே ஆறுகள் பொய்க்கத் தொடங்கின.
பொய்த்தல்
குற்றங்களின் வேர். மனிதனின் முதல் குற்றம் அவன் நாவிலிருந்துதான் துவங்கியது. அந்தக்
குற்றம் மனிதன் தன் நாவைப் பயன்படுத்திச் சொன்ன பொய்.
பொய்யின்
இயல்பு என்னவென்றால் அது அடுக்கடுக்காக குற்றங்களைச் சேர்த்துக் கொள்ளும். ஒரு பொய்
நூறு பொய்களை துணைக்கு அழைத்துக் கொள்ளும்.
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று வள்ளுவர் ஓர் இடத்தில் சொல்வது
அழகோ அழகு.
பொய்யாமை
அன்ன புகழ் இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும் என்பார் இன்னோர் இடத்தில்.
பொய்யாமையைத்
தலையாய அறமாக வள்ளுவர் குறிப்பிடுவார்.
மனிதனின்
பொய்த்தல் எல்லா குற்றங்களுக்கும் ஆணி வேர் என்றால், வானின் பொய்த்தால் உலகின் முதன்மையான
துன்பங்கள் அனைத்துக்கும் ஆணி வேர்.
வான் என்றும்,
விண் என்றும், ஆகாயம் என்றும், விசும்பு என்றும், மேகம் என்று சொல்லப்படும் விண் பொய்த்து
விடக் கூடாது.
விண் பொய்த்தல்
என்பது மழைப் பொழியாமல் போய் விடுவது ஆகும்.
ஒரு மனிதனின்
பொய்த்தல் சக மனிதர்களுக்குக் கேடு என்றால், விண் பொய்த்தால் உலகத்து உயிர்களுக்கு
எல்லாம் கேடு.
விண் பொய்த்தால்
விளைவது எப்படி? விளையாத பூமியில் பசியாறுவது எப்படி? உலகின் உள் நின்று பசி அல்லவா
உடற்றும்.
ஒரு சாண்
வயிறு இல்லட்டா, உலகில் இல்லை கலாட்டா என்று ஒரு திரைப்பாடல் வரும்.
இந்தியாவில்
இரவு உணவு உண்ண வாய்ப்பில்லாமல் பசியோடு உறங்குபவர்கள் கோடிக் கணக்கில் இருப்பதாக
புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதே இந்தியாவில் கோடிக் கணக்கில் வைத்துக் கொண்டு
உறக்கம் வராமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
பஞ்சம் நேரிடும்
காலங்களில் பருவ மழை குறைவு என்ற புள்ளி விவரத்தை அறிவியல் பூர்வமாக ஆய்ந்து வானிலை
ஆய்வு மையம் வெளியிடுகிறது.
இந்த உண்மையை
அன்றே அனுபவப் பூர்வமாக ஆய்ந்து வள்ளுவர் சொல்லி விட்டார்,
விண் இன்று
பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி.
இந்தக் குறளின்
அற்புதமே, பசியால் உலகம் வாடும் போது நீர் இல்லாமல் போய் விடாது. நீர் இருக்கும்.
அதாவது மழைநீர் இல்லாமல் இருக்கும், ஆனால் கடல் நீர் இருக்கும் என்பதுதான்.
கடல் நீரால்
சூழப்பட்ட இந்தப் பெரிய உலகம் மழை நீரால் சூழப்படாமல் போனால் பசியால் வாடும் என்கிறார்
வள்ளுவர்.
நள்ளிரவில்
ஒரு பெண் சகல வித நகைகளும் அணிந்து கொண்டு எந்த வித ஆபத்தும் இல்லாமல் சுதந்திரமாகச்
சென்று சுதந்திரமாக வீடு திரும்பும் நாளே இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் என்பார் காந்தி.
அவரே இன்றிருந்தால்,
இந்தியாவில் இந்தியர் யாவரும் இரவில் பசியின்றி புசித்து உறங்கப் போகும் நாளே இந்தியா
சுதந்திரம் பெற்ற நாள் என்று சொல்லியிருப்பார்.
விண் பொய்க்காமல்
சுற்றுச் சூழல் காப்பதும், விண் பொய்யாத காலத்து விளைந்த விளைபொருள்களை முறையாக அனைவருக்கும்
கிடைக்கும் வகையில் முறையாகப் பகிர்மானம் செய்வதும் ஆட்சி செலுத்தும் அரசு கவனிக்க
வேண்டிய முதன்மையான அறம் ஆகும்.
மணலை அள்ளுவதும்,
மலையைக் கிள்ளுவதும், மீத்தேனுக்காக கார்ப்ரேட்டுகள் துள்ளுவதும், காட்டில் உள்ள மரங்களை
கொல்லுவதும் இயற்கைப் பிழைகளின் வேகத்தைக் கூட்டும். மழை மேகத்தை தூர ஓட்டும்.
மழையற்ற பூமியில்
பசி மட்டுமே எஞ்சி நிற்கும். அப்போது மணலை விற்று, மலையை விற்று, மீத்தேனை விற்று,
மரங்களை விற்று சேர்த்த பணத்தைப் பசிக்குத் தின்ன முடியாது. பசி மனிதர்களைத் தின்று
முடித்திருக்கும்.
மண்ணைக் காப்பது
மட்டுமல்ல, விண்ணைக் காப்பதும் மனித இனத்தின் கடமை, மனித குணத்தின் பெருமை. மண்ணையும்
விண்ணையும் காக்காத மனித இனம் மண்ணாய்ப் போவது உறுதி.
*****
No comments:
Post a Comment