7 Jan 2018

பூமியின் அமிழ்தம்

குறளதிகாரம் - 2.1 - விகடபாரதி
பூமியின் அமிழ்தம்
            சூரியனைச் சுற்றி முன்பு ஒன்பது கோள்கள் இருந்தன. இப்போது எட்டு கோள்கள். கோள்களில் ஒன்றும் குறைந்து விடவில்லை. மறைந்து விடவும் இல்லை. அப்புறம் எப்படி எட்டு என்றால், இடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்களோ இல்லையோ, ஒன்பதாவதாக இருந்த கோளான ப்ளூட்டோ தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
             இப்போது இருக்கின்ற எட்டுக் கோள்களில் வெறெந்தக் கோளுக்கும் இல்லாத சிறப்பு பூமிக்கு உண்டு.
            அதுவே, வானின்று பொழியும் மழை.
            வானின்று அப்படிப் பொழியும் மழைதான் பூமியில் உயிர்களை வாழ வைக்கிறது.
            உடலையும், உயிரையும் தந்தது தாய் - தந்தை என்றால், உடல் நிலைப்பதற்கு உயிரைத் தருவது மழைதான்.
            மழைப் பொழிகிறது. அதனால் தாவரங்கள் செழிக்கின்றன. அந்தத் தாவரங்களையே நாம் உணவாக உண்ணுகிறோம்.
            மழையால் செழித்த தாவரங்களை உண்ட ஆடு, மாடு, கோழி, பன்றிகளையும் உண்கிறோம்.
            நாம் மட்டுமா? மான்கள், மயில்கள், யானைகள், முயல்கள் எல்லாம் மழையால் செழித்த தாவரங்களை உண்கின்றன.
            சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், நரிகள் எல்லாம் மழையால் செழித்தத் தாவரங்களை உண்ட மான்கள், முயல்களை உண்ணுகின்றன.
            உண்ணும் போது எழும் விக்கலுக்கும், உண்ணாத போதும் எழும் தாகத்துக்கும் மழை நீரே குடிநீர் தருகிறது. அது நிலத்தடி நீராக இருந்தாலும், ஆற்று நீராக இருந்தாலும் மழை அதற்கு ஆதரமாக இருக்கிறது. விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளியாக ஆவது இப்படித்தான்.
            உண்ணாமல் சில பல நாட்கள் இருக்கலாம் என்றால்,
            தாகம் தீர்க்காமல் ஒரு சில நாட்கள் இருக்கலாம் என்றால்,
            விக்கல் போக்காமல் சில பல நிமிடங்கள் அல்லது சில பல நொடிகள் இருக்கலாம்.
            அதற்கு மேல்...?
            விண்ணின்றுப் பொழியும் மழை குடிக்கும் நீர் எனும் வடிவில், தாவரங்களில் புகுந்து உண்ணும் உணவெனும் வடிவில் வந்தால்தானே உடலில் உயிர் தங்கும்.
            உயிரின் ஆயுளைத் தாங்கும் ஆதாரம் மழை.
            இப்படி உணவுச் சங்கிலிக்கான ஆதாரப் புள்ளி மழையிலிருந்து துவங்குகிறது. உணவு வலையின் வித்து மழையிலிருந்து முளை விடுகிறது.
            மழையே உலகத்து உயிரினங்களின் உயிர் காக்கும் தெய்வம்.
            கிராமங்களில் இதைச் சரியாகப் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்களின் மாரியம்மன் வழிபாடு மழைக்கான வழிபாடே. மாரியம்மன் அவர்களுக்கு மழையின் குறியீடு.
            மாரி என்றால் மழைதானே!
            மாதம் மும்மாரிப் பொழிந்ததா? என்று கேட்கும் மன்னராட்சி இன்று இல்லாவிட்டாலும், மக்களாட்சியிலும் மும்மாததத்திற்கு ஒருமுறையாவது ஒரு மாரிப் பொழியுமா என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லையே.
            மழை உயிரினங்களுக்கு மட்டும் உயிரைத் தரவில்லை. உழவுக்கும் அதுவே உயிரைத் தருகிறது. உலகின் அனைத்துத் தொழில்களுக்கும் அதுவே உயிர்.
            அன்று நம் முன்னோர்கள் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியை நம்பி விவசாயம் செய்ததும், இன்று, தான் பொய்யாக் காவிரிப் பொய்த்த பின்னும் எப்போதோ, எப்படியோ பெய்யும் என்ற நம்பிக்கையில் நாம் செய்யும் விவசாயத்துக்கு மழையே, மழை மட்டுமே உயிராக இருக்கிறது.
            ஏதோ இந்த மழையும் பெய்யா விட்டால், காவிரி தொடர்பான குழுக்களையோ, ஆணையங்களையோ நம்பி விவசாயம் செய்ய முடியுமோ?!
            நடந்தாய் வாழி காவிரி நடக்காமல் முடமாகிப் போனப் பின்னும், முடங்காமல் ஏதோ கொஞ்ச நஞ்சம் பெய்யும் மழையன்றோ, உழவர்களுக்குக் கொஞ்சமேனும் உயிர்த்தண்ணீர் ஊற்றுகிறது.
            இந்தப் பூமியில் உயிர்கள் பிறக்கும். பிறந்து கொண்டே இருக்கும். பிறந்த உயிர்கள் பூமியில் நிலைக்க மழைதான் வேண்டும்.
            உயிர்களின் ஆயுளை நீட்டிப்பது அமிழ்தம் என்றால், பூமியில் பிறந்த உயிர்களின் ஆயுளை நீட்டிக்கும் மழையே அமிழ்தம். மழை இல்லையென்றால் பூமியில் பிறந்த உயிர்களுக்கு ஆயுள் நீட்டிப்பு ஏது?
            ஆக, வானில் இருந்து தேவர்கள் பருகுவது அல்ல அமிழ்தம். வானின்று பொழியும் மழையே அமிழ்தம்.
            அமிழ்தம் விண்ணில் இல்லை. விண்ணில் இருந்து மண்ணில் பொழியும் மழையில்தான் இருக்கிறது. மழையே அமிழ்தம். மற்ற அமிழ்தம் என்பதெல்லாம் பிழையான கற்பிதம்.
            மேலும்,
            வள்ளுவர் பொய்யா சொல்வார்?
            வானின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று.
            பொய்யா மொழிப் புலவரின் வாக்கில் பொய் இருக்குமா என்ன!
            இந்த மெய்யை விளங்கிக் கொண்ட பிறகு, அமிழ்தம் எனப் பெய்யும் மழையை அமில மழையாக்காமல் செய்ய வேண்டிய செய்கை, உய்ய வேண்டிய உய்கை நம்முடைய கடமை.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...