24 Jan 2018

ஓர் உபதேசம் கேளாய்!

ஓர் உபதேசம் கேளாய்!
            ரொம்ப டைட்டாக இழுத்துப் பிடித்து விட்டான் போல எஸ்.கே. அதன் மன இறுக்கம் தாள முடியவில்லை. டைட்டாக இருப்பதன் மூலம் ஒரு சரியான தன்மையைக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறான். அது சரியான தன்மையைக் கொண்டு வருவதாக இருந்தால் மன இறுக்கத்தில் முடியாது. தவறானத் தன்மையாக இருப்பதால்தான் மன இறுக்கத்தில் முடிகிறது. மனம் இலகுவாக இருக்க வேண்டும். சுதந்திரமாக உணரும் வகையில் செயல்பட வேண்டும்.
            திருப்தி, துல்லியம் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் வகையில் செயல்படுவது சரியாகாது. எந்தத் திருப்தியை நோக்கி எஸ்.கே. செல்கிறேனோ அது கடைசி வரையிலும் கிடைக்காது. ஏனெனில் அது எஸ்.கே.வின் மனதின் தோற்றமே தவிர, உண்மையில் அப்படி ஒன்று இல்லை. துல்லியமும் ஏறக்குறைய அப்படித்தான். தன்னைத் தானே ஏய்த்துக் கொள்ள கண்டுபிடித்த கருத்தாக்கங்களில் இந்த இரண்டும் வரும். மனதின் திருப்திக்காக ஒருவன் கொலை செய்வானென்றால் அது என்ன திருப்தி? துல்லியமாக வர வேண்டும் என்பதற்காக எதிரில் இருப்பவனை எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்குவேன் என்றால் அது என்ன துல்லியம்?
            தான் ஏன் உள்குத்து சமாச்சாரங்களில் புகுந்து அதைச் சமரசமாக்க முயன்றான் என்பது எஸ்.கே.வுக்கு இன்று வரை புரியாத புதிர். பொதுவாக அது அதுவாக சமரசம் ஆகக் கூடியது. அதுவாக சமரசம் ஆகித்தானே ஆக வேண்டும். சண்டை போட்டுக் கொண்டே இருந்து விட முடியுமா? ஆனால் எஸ்.கே. என்ன நினைக்கிறான் என்றால், அது தனக்குதானே அசிங்கம் என்று. இங்குதான் எஸ்.கே. தவறு செய்கிறான். எதையும் தனக்குத்தானே என்று பார்க்கும் பார்வையே தவறு. அது எல்லாருக்கும்தான் என்பதுதான் சரி. பொதுவாகவே உள்குத்து விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதுதான் விதி. தன்னையும் அறியாமல் ஈடுபட்டு விட்ட எஸ்.கே. அதன் தலைவிதியை அனுபவித்து வருகிறான்.
            தனது என்ற பற்றோடு ஏற்றுக் கொள்ளும் எல்லாவற்றாலும் துன்பம்தான். அந்தத் துன்பம்தான் அவனைத் தொடர்கிறது. அதை அவன் மனஇறுக்கம் என்கிறான். உண்மையில் மனஇறுக்கம் என்பது கிடையவே கிடையாது. தனது என்ற பற்றைத் தூக்கி எறிய முடியுமானால் மனஇறுக்கம் தானாக கழன்று விழுந்து விடும். பயிற்சி செய், பற்றற்றிரு என்றுதான் பதஞ்சலியும் சொல்கிறார். தான் பற்றோடு இருந்து அதன் விளைவுகளை அனுபவித்தான் எஸ்.கே.
            இப்போது அவன் யாருக்கும் எந்த உதவியையும் செய்ய வேண்டாம் என்ற முடிவோடு நல்ல வார்த்தைகளை மட்டுமே சொல்லி அனுப்புகிறான். பணம் கேட்டு வந்த ஒரு பெண்மணிக்கு அப்படித்தான் அவன் செய்தான். பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற வந்த ஒருவருக்கு அப்படித்தான் செய்தான். நல்ல வார்த்தைகள் போதும். அதற்கு மேல் உதவி செய்கிறேன் என்று தான் சிக்கலில் போய் சிக்கிக் கொள்வதை எஸ்.கே. தேவையில்லாமல் செய்வதில்லை.
            முக்கியப் பிரச்சனை எஸ்.கே.வுக்கு என்னவென்றால்... அதுவாக நடக்கட்டும் என்று விடாமல், நடத்திக் காட்டுகிறேன் பார் என்று அவசரப்பட்டுக் காரியத்தில் இறங்குவதுதான். அவசரமே வேண்டாம். எல்லா கனிகளும் பழுத்து மேலேதான் தொங்குகின்றன. ஆவைகள் கீழே இல்லை, மேலோ தொங்குகின்றன. ஆம் மேலே தொங்குகின்றன. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் கனிந்து அவைகளே மடியில் வந்து விழும்.
            மனம் நோகுமாறு பேசுபவர்களையும், செயல்படுபவர்களையும் இனி எஸ்.கே. திருப்தி படுத்த வேண்டியதில்லை. ஏனென்றால் அது அவர்களே அவர்களுக்குச் செய்து கொள்ள வேண்டியது. எஸ்.‍கே. உட்பட அவனுக்கு அறிவுரை சொல்பவர்கள் வரை செய்ய வேண்டியது எல்லாம் அமைதியாக இருப்பதுதான்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...