குறளதிகாரம் - 3.8 - விகடபாரதி
தீர்க்கதரிசிகள்
தீர்மானிக்கப்படுவார்கள்!
பிரசவங்களில்
முழுப் பிரசவம், குறை பிரசவம் இருப்பது போல,
பொருட்களில்
ஒரிஜினல், டூப்ளிகேட் இருப்பது போல,
விதைகளில்
வீரியமும், சொத்தையும் இருப்பது போல,
துறவிகளில்
உண்மையானவர்கள், போலியானவர்கள் இருக்கிறார்கள். காலம் கடந்தாவது நீதி வழங்கப்படும்
என்பது போல, காலம் கடந்தாலும் போலியானவர்கள் கண்டறியப்படுவார்கள்.
கிறிஸ்து
பிறப்பதற்கு முன்பிருந்த மம்மிக்கள் இன்று நவீன கண்டுபிடிப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்துவது
போல, துறவிகளில் உண்மையானவர்கள், போலியானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மம்மிக்களை
ஆய்வுக்குட்படுத்த அவர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் இருக்கிறது. துறவிகளை ஆய்வுக்கு
உட்படுத்த என்ன இருக்கிறது என்றால், அவர்கள் வழங்கிச் சென்று உலகில் நிலைபெற்ற மறைமொழி
இருக்கிறதல்லவா!
இயேசு பிரானுக்கு
பைபிள்,
நபிகளுக்கு
குர்ரான்,
கிருஷ்ண பகவானுக்கு
கீதை,
புத்தருக்கு
அவரது போதனா மொழிகள்,
இராமகிருஷ்ண
பரமஹம்ஸருக்கு அபருடையே உபதேச மொழிகள்,
விவேகானந்தருக்கு
அவருடைய உரைகள்,
காந்தியடிகளுக்குச்
சத்திய சோதனை,
காரல் மார்க்ஸூக்கு
மூலதனம் என்று அவர்கள் வழங்கிச் சென்ற மறைமொழிகள் இருக்கினறன.
இவைகளெல்லாம்
அவர்களே வழங்கிச் சென்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் போன்றன.
திருவள்ளுவருக்கே
அவர் வழங்கிச் சென்ற ஒப்புதல் வாக்குமூலமாக திருக்குறள் இருக்கிறதே.
ஆகவே அவர்களெல்லாம்
நிறைமொழி மாந்தர்களா இல்லையா என்பதை அவர்களின் மறைமொழிகளைக் கொண்டே கணக்கிட்டு விடலாம்.
தர்மம் என்று
பெயரிட்டு எதையெதையோ எழுதி காலத்துக்கும் நிலைநாட்டி விட முடியாது. காலம் கடந்தாவது
அவைகள் தர்மமா? தர்மமற்றவையா? என்பது தீர்மானிக்கப்பட்டு விலக்கப்படும்.
காலம் கடந்து
நிற்கும் மறைமொழிகள், அதை வழங்கிச் சென்ற மாந்தர்கள் காலம் கடந்து நிற்கத் தகுதியானவர்களா
இல்லையா என்பதைக் காட்டி விடும்.
இதைத்தான்
திருவள்ளுவர்,
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி
விடும் என்கிறார்.
சுருங்கச்
சொன்னால் தீர்க்கதரிசிகள் தீர்மானிக்கப்படுவார்கள். அஃது அல்லாதவர்கள் நிர்மூலமாக்கப்படுவார்கள்.
நூலை வைத்துதானே
கொத்தனார்கள் தாங்கள் எடுத்து வைக்கும் செங்கல்லைச் சரி செய்கிறார்கள். அதே போல்தான்
நிறைமொழி மாந்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வழங்கிய நூலை வைத்தே அவர்கள் சரியானவர்களா
அல்லாதவர்களா என்று தீர்மானிக்கப்படுகிறார்கள்.
அந்த மதிப்பீட்டு
நூலைத்தான் வள்ளுவர் மறைமொழி என்கிறார்.
என்னே ஒரு
தீர்க்க தரிசனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!
*****
No comments:
Post a Comment