கடைசியில் இப்படி இருக்கிறது!
அதிகமான பேச்சுதான் எஸ்.கே.வின் எல்லா
பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தது. இது குறித்து எஸ்.கே. முன்பே போதிய அளவு பேசி
விட்டாலும் இப்போது பேசுவது அவசியமாக இருக்கிறது. அதனால்தான் எஸ்.கே. அதிகமாகப் பேசுபவன்
என்பதை முன்கூட்டியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதிகமானப் பேச்சைக் குறைத்து விட்டால்
எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பேச்சு என்பது சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்க
வேண்டும். வத வத என்ற பேச்சால் கேட்பவர்க்கும் துன்பம். சொல்பவர்க்கும் குழப்பம்.
இதன் மற்றொரு பின் விளைவாக எஸ்.கே.வுக்கு,
சிந்தனைகள் மாறி மாறி சுழன்று அடித்தன.
எதிலும் மனம் நிலையாக இல்லை. அதனால் இருக்க முடியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தத்தால்
பாதிக்கப்பட்டது அவனது மனம்.
இதன் துவக்கம் ஒரு தொழில் பயிற்சிக்கான
தயாரிப்புகளில் ஈடுபடத் துவங்கிய போதே எஸ்.கே.வுக்குத் தெரிந்தது. மிகுந்த மனச்சோர்வால்
அவன் பாதிக்கப்பட்டு இருந்தான். வேலை செய்ய செய்ய அது பறந்தோடி விடும் என்று அவன்
தவறாக கணித்து விட்டான். உண்மையில் ஓய்வுதான் அதற்கான மருந்து என்பதை மறந்து விட்டான்.
படிப்பது, வாட்ஸ் அப்பில் விலாசுவது மற்றும்
பேஸ்புக்கில் பிராண்டுவது, ப்ளாக்கில் புலம்புவது, எப்போதாவது நினைத்தால் பணியில்
தீவிரமாக இயங்குவது, தன் அடைவுத் திறனை எப்படியும் முன்னேற்றுவது போல ஒரு பந்தா பண்ணிக்
கொள்வது, புதுப்புது பயிற்சியில் ஈடுபடுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவது
- அது இது என்று மிகவும் பணிச் சுமைகளை அவனே ஏற்படுத்திக் கொண்டான். பணிச் சுமைகளால்
பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டதாக பின்னொரு நாளில் ஒரு அறிக்கையும் விட்டான்.
ஒவ்வொரு நேரத்திலும் சரியாக முடிக்க வேண்டும்,
குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் அவனை வெகுவாகப் பாதித்தது. அவன்
அப்போதெல்லாம் மன இறுக்கம் கொள்பவனாக ஆனான்.
அவனக்கு அந்த நேரங்களில் கொட்டாவி வரும்.
தூக்கம் சுழன்றடிப்பது போல வரும். அவன் அவைகளைப் புறம் தள்ளினான். ஆனால் அவைகளைப்
புறம் தள்ளக் கூடாது. அப்போது அவன் உறங்கியிருக்க வேண்டும். மனம் சோர்வில் இருக்கிறது
என்பதற்கு உடல் காட்டும் அறிகுறியே கொட்டாவி மற்றும் தூக்க உணர்வுகள். உடலின் மொழிக்கு
அவன் செவி சாய்த்திருக்க வேண்டும். எல்லாம் சேர்ந்து அவனை கடைசியில் கோபத்துக்குள்
தள்ளி விட்டன. அதன் அறிகுறிகளில் ஒன்றாக அவனுக்கு அப்போது லேசாக நெஞ்சு வலியும் ஏற்பட்டது.
அதன் பிறகுதான் 'ஏனிந்த மிகு வேலைகள்?'
என்று யோசிக்க ஆரம்பித்தான். அங்கீகாரம், புகழ் என்பதன் பின்னாக ஓடும் ஓட்டத்தின்
ஒரு பகுதியாக அது இருந்தது. அதற்காக ஓடித் தன்னையே அழித்துக் கொள்வதா என்ன?
உடலோடும், மனதோடும் இயைந்து செல்ல வேண்டும்.
எதிர்நீச்சல் போடுகிறேன் பேர்வழி என்று அவைகளின் மறுப்பை நாம் புறக்கணிக்கக் கூடாது.
டைம் லிமிட் என்பது ஒரு வகையில் தன்னைத்
தானே அழித்துக் கொள்ள வைத்துக் கொள்ளும் டைம் பாம் போன்றதாகத்தான் இருந்தது எஸ்.கே.வுக்கு.
இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் பல்
துலக்குவதைக் கூட நிறுத்தி விட்டான். நேரத்துக்குக் குளிப்பது, டாய்லெட் போவது என்று
எல்லாமும் நின்று விட்டன. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுதான் செய்கிறான். தூங்குவதை
மட்டும் நேரம் கிடைக்காவிட்டாலும் செய்கிறான்.
விளைவு,
டூத்பேஸ்ட், சோப்பு, பினாயில் எல்லாம்
இன்னும் காலியாகாமல் இருக்கின்றன. நிறைய மிச்சம் ஆகியிருக்கிறது எஸ்.கே.வுக்கு இந்த
மாத பட்ஜெட்.
*****
No comments:
Post a Comment