14 Jan 2018

மழையினின்று முளை விடும் தெய்வங்கள்!

குறளதிகாரம் - 2.8 - விகடபாரதி
மழையினின்று முளை விடும் தெய்வங்கள்!
            பூசைகள் செய்கிறோம், தெய்வங்கள் மகிழ்கின்றன என்கிறோம்.
            ஒருவேளை பூசைகளை மறந்தால் தெய்வக் குற்றம் ஆகி விடும் என அஞ்சுகிறோம். தெய்வங்கள் தண்டித்து விடுமோ என நடுங்குகிறோம்.
            நாம் பூசைகள் செய்வதாலேயே தெய்வங்கள் நம் வாழ்வுக்கு வேண்டியதைத் தருகின்றன என்ற கருத்து இதனால் பெறப்படுகிறது. பூசைகள் செய்யாவிட்டால் வாழ்வுக்குத் தேவையானதைப் பெற முடியாமல் அல்லல் படுவோம் அல்லது அழிவு படுவோம் என்ற அந்த கருத்தின் இன்னொரு முகமும் இதனால் அம்பலமாகிறது.
            இது உண்மையா? இதுதான் உண்மையா?
            உண்மையில் தெய்வங்கள் தண்டித்து விடுமா?
            அனைத்து தெய்வ வழிபாட்டுக்குப் பின்னும், அத்தெய்வங்களுக்காக செய்யப்படும் பூசைகளுக்குப் பின்னும், அத்தெய்வங்களுக்காகச் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்குப் பின்னும் இப்படி ஒரு நம்பிக்கையும், அச்சமும் இருக்கிறது.
            இப்படி ஒரு அச்சம் கலந்த ஆழ்மனதில் பதிந்து விட்ட நம்பிக்கையின் காரணமாகவே தெய்வங்களுக்கு படையல் செய்கிறோம், பலியிடுகிறோம், பூசை புனஸ்காரங்களை நிகழ்த்துகிறோம்.
            சரியாக ஆய்ந்துப் பார்த்தால் இதனால் எல்லாம் தெய்வங்களுக்குப் பூசையும், வழிபாடுகளும் நிகழவில்லை. வான்மழைப் பொழிகிறது. அந்த வளம்தான் இத்தகைய பூசைகளையும், படையல்களையும் நிகழ்த்துகிறது. வான்மழை மட்டும் பொழியாமல் போகட்டும், எப்படி இந்தப் பூசைகளும், படையல்களும் நிகழ்கின்றன என்று பார்ப்போம்?
            வான்மழைப் பொழியாத பாலை நிலக் கள்வர்கள் கொற்றவை வழிபாட்டை நிகழ்த்தவில்லையா? அவர்கள் நிகழ்த்தும் வழிபாட்டில் அவ்வளவு பூசைகளா? அவ்வளவு வழிபாட்டுச் சம்பிரதாயங்களா? என்றால் இருக்காதுதான் என்றாலும், அதையும் கருத்தில் கொண்டு பார்த்தாலும், மழையால் வளம்பெற்ற பகுதியிலிருந்து கொள்ளை கொண்ட பொருள்களைக் கொண்டே அவர்களும் பூசை வழிபாடுகளை நிகழ்த்துகிறார்கள். பாலைக் கள்வர்களின் நிலத்தில் மழை இல்லையென்றாலும், மழை பொழிந்த ஒரு நிலத்தில் களவாடப்பட்ட பொருள்களே அவர்களின் வழிபாட்டுக்கும் ஆதாரம் ஆகின்றனது. ஆகவே மழையே அவர்களின் வழிபாட்டுக்குப் பின்புலமாக இருக்கும் மறைமுக ஆதாரம்.
            ஆக, மழையற்ற நிலப் பகுதியில் நிகழும் பூசை புனஸ்காரங்களும் மழையுள்ளப் பகுதியிலிருந்து ஏதோ ஒரு வழியில் - அது பண்டமாற்றோ, களவோ அல்லது வணிக முறையோ - அவ்வழியில் பெறப்பட்ட வளத்தைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது.
            ஆக தெய்வங்களுக்காக நாம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் விழாக்கள், பூசைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்துக்கும் காரணம் தெய்வங்கள் இல்லை, வான்மழைதான்.
            செய்ய வேண்டிய பூசைகளைச் செய்யாமல் போனால் தெய்வங்கள் நம்மை அழித்து விடுமோ என அஞ்சுவதோ! வான்மழை இருக்கிறதே, அது பொழியாது போனால் தெய்வங்களை நம் நினைவிலிருந்தே அழித்து விடும். வான்மழை மனிதர்களை மட்டுமா, தெய்வங்களையும் அதுவே வாழ வைக்கிறது.
            என்னடா திடீரென்று வான்மழையை வைத்து இப்படி ஒரு நாத்திகப் பேச்சு என்கிறீர்களா? திடீரென்று எழுந்த நாத்திகச் பேச்சு அன்று இது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவர் தொடங்கி வைத்த நாத்திகத்தின் தொடர்ச்சி இது.      பொதுவுடைமைத் தத்துவத்தை உரத்துப் பேசிய மார்க்ஸின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் போலல்லவா இருக்கிறது இது என்கிறீர்களா? ஆம்! மார்க்ஸூக்கு முன்னரே வள்ளுவர் தொடங்கி வைத்த பொருள்முத வாதக் கண்ணோட்டம் இது.
            வள்ளுவர் இப்படியெல்லாமா சொல்லியிருக்கிறார்? ஆம்! நீங்களே பாருங்களேன்!
            சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கு மேல் வானோர்க்கும் ஈண்டு.
            வறட்சிக் காலங்களில் எத்தனை தெய்வ வழிபாட்டுத் திருவிழாக்கள் தள்ளிப் போயிருக்கின்றன என்பதை நீங்களே ஒரு கணக்கெடுத்துப் பாருங்களேன்! வான்மழைப் பொழிந்து அதனால் தெய்வ வழிபாட்டுக் கூடங்களாய்க் கொழித்தப் பகுதிகள் போல் பிற பகுதிகளில் ஏன் தெய்வ வழிபாட்டுக் கூடங்கள் மலிந்து கிடக்கவில்லை எனச் சிந்தித்துப் பாருங்களேன்.
            வளம் பெற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். வளம் இல்லாதவர்கள் கைவிடுகிறார்கள். வளமே தீர்மானிக்கிறது வழிபாட்டையும். வளம் இல்லையென்றால் வழிபாடும் இருக்காது, தெய்வமும் மக்கள் மனதில் உளவியல் ரீதியாக உயிர் வாழ முடியாது.
            மழையே அமிழ்தம். மழையே தெய்வம்.
            மழையே வையத்துள் வாழ்வாங்கு மனிதனை வாழ வைக்கிறது. மழையற்ற பூமியில் மனிதர் கள்வராய்த்தான் வாழ்வர். மழையே தெய்வமாக நின்று மனிதரை வையத்துள் வாழ்வாங்கு வாழ வைத்து தெய்வமாக அறுவடை செய்விக்கிறது.
            உலகத்து உயிர்கள் எல்லாம் மழையின் வித்தே.
            மனிதனும் மழையின் வித்தே.
            தெய்வமும் மழையின் வித்தே.
            அவனன்றி ஓரணுவும் அசையாது என்பார்களே! அந்த அவன் மழைதான். மழையின்றி இந்தப் பூமியில் ஓரணுவும் அசைய முடியாது தெய்வம் உட்பட.
            சேர வேண்டிய புகழெல்லாம் மழைக்கே. தட்டிக் கொண்டு போய் விட்டன தெய்வங்கள். பெருந்தன்மையாக விட்டு விட்டது மழையும்.
            அஸ்திவாரங்கள் அமைதியாக இருப்பதால் கலசங்கள் கைதட்டிக் கொள்கின்றன.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...