இரஜினிகாந்தின் அரசியல் - சில முன்வைப்புகள்
தமிழகத்தின் அரசியலில் இதுவரை ஆன்மிகம்
கலந்ததில்லை. ஆன்மீகத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்த அரசியலாகவே
தமிழக அரசியல் இருந்திருக்கிறது.
மூகாம்பிகை பக்தராக எம்.ஜி.ஆர். அவர்கள்
இருந்த போதும் அரசியலில் ஆன்மிகத்தைக் கலந்து விடவில்லை. கடவுள் பக்தையாக ஜெயலலிதாக
அவர்கள் இருந்த போதும் அவரும் ஆன்மீகம் கலந்த அரசியலாக அரசியல் செய்யவில்லை.
முதன் முறையாக இரஜினிகாந்த் அவர்கள் தான்
செய்யப் போகும் அரசியல் ஆன்மிக அரசியல் என்று வெளிப்படையாகக் கூறியிருப்பதால் அது
குறித்த கேள்விகள் நிறைய எழவே செய்கின்றன.
ஆன்மீக அரசியல் என்று அவர் குறிப்பிடுவதால்,
ஆன்மீகத்தை விரும்பாத நாத்திகர்களுக்கான அரசியலை அவர் எப்படி முன் எடுக்கப் போகிறார்?
என்ற கேள்வி எழுகிறது.
அரசியல் என்பது அனைவருக்குமானது. பன்மைத்துவமானது.
அதில் ஆன்மீகம் என்ற ஒற்றைத் தன்மையோடு அதாவது தட்டையான தன்மையோடு செயல்படுவது எந்த
அளவுக்கு எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்?
ஆன்மீகம் என்பது பொதுவாக அமைதியையும்,
மன சாந்தியையும் நாடிச் செல்வது. அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும்
அமைகிறது. மக்களிடமிருந்து விலகிச் செல்வது என்றும் சொல்லலாம். ஆனால் அரசியல் என்பது
மக்களை நெருங்கிச் செல்வது. அவர்களின் பிரச்சனையை ஒதுக்காமல், ஒளியாமல் நேருக்கு நேர்
எதிர் கொள்வது.
ஆன்மீகம் அப்படி என்றால், அரசியல் இப்படி.
இரண்டையும் ஒரு சேர எப்படி அவர் எதிர் கொள்ளப் போகிறார்?
வரலாற்றில் மிகப் பெரிய சக்ரவர்த்தியாகத்
திகழ்ந்த அக்பர் தீன் இலாஹி என்ற மதத்தை உருவாக்கினார். என்றாலும் தான் உருவாக்கிய
மதத்தை அக்பர் ஒரு போதும் அரசியல்மயப்படுத்தவில்லை. ஒரு பேரரசரே ஆன்மீகத்தை அப்படித்தான்
கையாண்டார்.
அரசியலில் மதத்தைக் கலந்த அத்தனைப் பேரரசர்களும்
அழிவையும், வரலாற்றுக் களங்கத்தையும் சந்தித்திருக்கிறார்கள்.
இரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று சொல்லும்
போது, அவர் அறிந்தது, அனுபவப்பட்டது இந்து மத ஆன்மீகம் மட்டுமே. ஆன்மீகம் என்பது இந்து
- இஸ்லாம் - கிறித்தவம் - சீக்கியம்... என்று பிரிந்து கிடக்கையில் எந்த மத ஆன்மீகத்தை
அரசியலாகக் கொண்டு அவர் முன்எடுக்கப் போகிறார் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி ஆன்மீகத்தை அரசியலாகக் கொண்டு
முன்னெடுத்த பல அரசியல்கள் இரத்தக் களரியில் முடிந்திருக்கின்றன என்பதையும் வரலாறு
காட்டுகிறது.
சிலுவைப் போர்கள், சைவ-சமண வழக்குகள்,
சைவ- வைணவப் பிரச்சனைகள், இலங்கையின் புத்த அரசியல், உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள
மதவாதத் தீவிரவாதம் என்று, மியான்மரின் இன அரசியல் நிலைப்பாடு என்று பலவற்றை இதற்குச்
சான்றாகக் கூறலாம்.
ஆன்மீகம்தான் அரசியல் என்றால் போப் ஐ.நா.
தலைவராக இருக்கலாம்.
மதுரை ஆதீனம் முதலமைச்சராக இருக்கலாம்.
ஆன்மீகத்தின் நோக்கம், இலக்குகள் வேறானவை.
அரசியலின் நோக்கம், இலக்குகள் வேறானவை. இரண்டையும் இணைப்பதன் மூலம் ஆன்மீகம்தான் வெறித்தனமாக
மேலோங்குமே தவிர, சமத்துவ அரசியல் தன்மை உண்டாகாது.
எப்போது கட்சியின் பெயரை அறிவிப்பீர்கள்
என்று இரஜினிகாந்த் அவர்களிடம் கேட்கப்படும் போது, அவர் 'தெரியாது' என்ற பதிலை அளிக்கிறார்.
கட்சியின் பெயரைத் தீர்மானிக்க முடியாதவர் போன்ற தோற்றத்தைப் பெறும் அவரின் இந்தப்
பதில், எப்படி இவர் மக்களின் பிரச்சனைகளைத் தீர்மானிக்கப் போகிறார்? என்ற ஐயப்பாட்டை
எழுப்புகிறது.
அரசியலில் விமர்சனம் முக்கியம். ஆனால்
அவர் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்கிறார்.
தனிமனித குழப்பங்களைத் தீர்க்க இமயமலை
ஓ.கே. அரசியல் குழப்பங்களைத் தீர்க்க தீர்க்கமான சிந்தனைகளே உதவும். தீர்க்கமான பார்வை
இல்லையென்றால் இமயமலையும் சீனக்காரனுக்குச் சொந்தமாகி விடும். ஆகவே அரசியலுக்கு மழுப்பலானப்
பதில்கள் உதவாது. இரஜினிகாந்த் அவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவன் மழுப்பினால் மக்கள் மழுங்கிப் போய்
விடுவார்கள். தலைவன் முடிவெடுக்கத் தடுமாறினால் அரசு ஆட்டம் கண்டு விடும்.
இரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று திட்டவட்டமாகச்
சொல்லி விட்டதால் அதற்காக தமிழகம் பின்வாங்கப் போவதில்லை. எதையும் எதிர்கொள்ள தயாராகவே
இருக்கிறது எத்தனையோ விதமான அரசியலைப் பார்த்து விட்ட தமிழகம்.
*****
No comments:
Post a Comment