5 Jan 2018

எளிமைக்கு முதல் வணக்கம்!

குறளதிகாரம் - 1.9 - விகடபாரதி
எளிமைக்கு முதல் வணக்கம்!
            வாய் எதற்கு? பேசுவதற்கு!
            வாய் இருந்தும் பேச முடியாவிட்டால் அந்த வாய்?!
            மூக்கு எதற்கு? நுகர்வதற்கு!
            மூக்கு இருந்தும் நுகர முடியாவிட்டால் அந்த மூக்கு?!
            கண்கள் எதற்கு? பார்ப்பதற்கு!
            கண்கள் இருந்தும் பார்க்க முடியாவிட்டால் அந்தக் கண்கள்?!
            காதுகள் எதற்கு? கேட்பதற்கு!
            காதுகள் இருந்தும் கேட்க முடியாவிட்டால் அந்தக் காதுகள்?!
            உடல் எதற்கு? தொடு உணர்வை உணர்வதற்கு!
            உடல் இருந்தும் தொடு உணர்வை உணர முடியாவிட்டால் அந்த உடல்?!
இப்படி வாய், மூக்கு, கண்கள், காதுகள், உடல் எனும் புலன் உறுப்புகள் ஒவ்வொன்றும் புலன் உணர்வை உணர்வதற்காக உள்ளன. அந்த உறுப்புகள் இருந்த போதும், அந்த உறுப்புகளால் புலன் உணர்வை உணர முடியாவிட்டால் அந்த உறுப்புகள் இருந்தும் அதனால் பயன் என்ன?
            ஒரு தலைவன் இருந்தும், அவனால் நல்லாட்சி தர முடியாவிட்டால் அந்த தலைவன் இருந்து என்ன? இல்லாமல் இருந்து என்ன?
            ஒரு மாலுமி இருந்தும், அவனால் கப்பலைச் சரியாக செலுத்த முடியாவிட்டால் அந்த மாலுமி இருந்து என்ன? இல்லாமல் இருந்து என்ன?
            கை நிறைய பணம், தங்கம் இருந்தும், அவைகளை வைத்துக் கொண்டு ஒரு வேளை பசி தீர்க்க முடியாவிட்டால் அவைகள் இருந்து என்ன? இல்லாமல் இருந்து என்ன?
            ஆருயிர் நண்பனாக இருந்தும், ஒரு அவசர ஆபத்துக்கு முன் வந்து நிற்கவில்லை என்றால் அவன் நண்பனாக இருந்து என்ன? இல்லாமல் இருந்து என்ன?
            நெஞ்சில் நேர்மையும், தூய்மையும் இருந்து அதைச் செயல்படுத்தும் துணிவு இல்லாவிட்டால் நெஞ்சில் அந்த நேர்மையும், தூய்மையும் இருந்து என்ன? இல்லாமல் இருந்து என்ன?
            ஒன்று இருப்பதன் பயன், அது அதற்கான நற்பயனை நல்க வேண்டும். இல்லாவிட்டால் அது இருந்தும் இல்லாமல் இருப்பதற்கே சமம் என்பது போல் அல்லவா இருக்கிறது!
            வெளிச்சத்தைத் தராத விளக்கு ஒரு விளக்கே அன்று.
            வாய் என்றால் பேச வேண்டும். கண்கள் என்றால் பார்க்க வேண்டும். மூக்கு என்றால் நுகர வேண்டும். காதுகள் என்றால் கேட்க வேண்டும். உடல் என்றால் தொடு உணர்வு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த உறுப்புகள் இருந்தும் இல்லாமல் இருப்பதற்கே சமம்.
            அது போலவே தலை என்றால், அது எத்துணை தலைமைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் எளிமையை வணங்க வேண்டும். எளிமையாக வாழ்பவர்கள் முன் தலை வணங்க வேண்டும்.
            அது தலையாக இருந்தாலும், தலைமையாக இருந்தாலும் எளிமையின் முன் மண்டியிட வேண்டும்.
            எளிமையை ஏற்பதற்கே தலை(மை). எளிமையை வணங்குவதற்கே தலை(மை). எளிமையை வணங்காத தலை(மை) இருந்தென்ன? இல்லாமல் இருந்தென்ன?
            கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான் தாளை வணங்காத்  தலை என்கிறார் வள்ளுவர்.
            அந்த எளிமை எதுவோ அது காலால் இடும் பணியை தலையால் சிரமேற்கொண்டு செய்ய வேண்டும் தலை(மை). அப்படி செய்யும் தலை(மை)கள் வாழும் நாட்டிலே அறம் நிலைக்கும். அப்படி இல்லாவிடில் அந்த நாட்டில் தரம் எப்படி இருக்கும்?
            காமராசர் எனும் எளிமையை வணங்க வேண்டும் தலை.
            சொத்தைக் குவித்து தலைக்கு ஆறாயிரமும், பத்தாயிரமும் ஓட்டுக்காகத் தரும் பாதகத்தை தலை வணங்கக் கூடாது. அப்படி வணங்கும் தலைகள் இருந்தென்ன? இல்லாமல் இருந்தென்ன?
            சனநாயகத்தைச் சாகடிக்கும் அந்தத் தலைகள் இல்லாமல் இருப்பதால் ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடாது அல்லவா!
            எளிமையாக வாழும் குணம் உலகில் வணங்கப் பட வேண்டியது. படாடோபமாக வாழ்ந்து கொண்டு எளிமையை வணங்குவதல்ல எளிமை. எளிமையாக வாழ்ந்து எளிமையை வணங்குவதே உண்மையான எளிமை.
            எளிமையால் வாழ்க்கை ஆகும் இனிமை!
            எளிமையற்ற வாழ்விலிருந்துதான் அறமற்றவைகள் முளை விடுகின்றன என்ற உண்மையை எவ்வளவு சூட்சமமாக வலியுறுத்துகிறார் பாருங்கள் வள்ளுவர்.
            எண் குணம் என்பதை எளிமையான குணமாகப் பொருள் கொண்டு பார்க்கும் போது இக்குறள் திருக்குறளுக்கானச்  சிறப்புப் பெறுகிறது அல்லவா! எண்குணம் என்பதை எட்டு வகைக் குணமாகக் கொண்டு பார்க்கும் போது உண்டாகும் சிறப்பை விட எளிமையான குணம் என்று பொருள் கொள்ளும் சிறப்பே தனிதான் அல்லவா!
            எண்பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் என்று சொல்வார் வள்ளுவர்.
            எளிமையாகக் காட்சி தந்து முறை செய்யா மன்னவன் தானே அழிவான் என்பது அதன் பொருள்.
            மேற்காண் குறளில் 'எண்பதம்' என்பது 'எளிமையான தன்மை' என்று இவ்விடத்துப் பொருள் கொள்வதால் சிறப்புப் பெறுகிறது. மாறாக எட்டு வகையான தன்மைகளோடு காட்சித் தந்து முறை செய்யா மன்னவன் என்று பொருள் கொள்வது எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்குமோ?
            அவ்வழியே 'எண்குணம்' என்பதை 'எளிமையான குணம்' என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்ததாக இருக்கும் அல்லவா! மேலும் இக்காலத்துக்கும் முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் அதுவே மிக மிக ஏற்றதாக இருக்கும் அல்லவா!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...