வீடு, நிலம் வாங்குபவர்கள் கவனத்துக்கு...
அந்த இடம் வாங்குவது குறித்து இனி எஸ்.கே.
செல்லப் போவதில்லை. அவர்களாக வரட்டும். ஏற்கனவே ஒரு சாதிக்காரனிடம் மாட்டி இடம் வாங்குவதில்
சின்னா பின்னமாகி விட்டான். மீண்டும் இன்னொரு சாதிக்காரனிடம் மாட்டி கன்னா பின்னாவாக
விரும்பவில்லை. இடம் வாங்கும் விசயத்தில் சாதிக்காரனைத் தவிர்ப்பது நல்லது. சாதிக்காரனிடம்
இடம் வாங்குவதைத் தவிர்ப்பது இன்னும் நல்லது.
இதை இவ்வளவு விலா வாரியாகச் சொல்வதற்குக்
காரணம், சாதிக்காரனிடம் வாங்க நினைத்த நிலத்தால் எஸ்.கே.வுக்கு ஏகப்பட்ட இழப்புகள்.
ஆனால் அவைகள் எதுவும் இழப்புகளாகத் தெரியாத அளவுக்கு அவனது பொருளாதார நிலை இருந்ததால்,
அதைப் பற்றிப் பெரிதாக அவன் கவலைப்பட வில்லை. எல்லாரும் அப்படி முடியாது. கடன் வாங்கி
இடம் வாங்குபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை கடன் ஒரு பக்கம் அழுத்தும்.
வாங்கிய இடம் இன்னும் முடியவில்லையே என்ற மனச்சுமை இன்னொரு பக்கம் அழுத்தும்.
ஆக இந்த விசயத்தில் எஸ்.கே. சொல்வதற்கு
ஒன்று இருக்கிறது - அது என்னவென்றால், உங்களால் முடியுமா என்று தெரியவில்லையா? உங்களால்
முடியும் என்று தோன்றும் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு
வழியிருப்பதாகத் தெரியவில்லை. அவசரப்பட்டீர்கள் என்றால், கடனுக்கு வாங்கியதை சொற்பத்துக்கு
விற்று விட்டு, கடனுக்கான வட்டியைக் கூட கட்ட முடியாது.
வாங்கிய நிலம் பதிவு ஆகாமல்,
வாங்கி முடிய வேண்டிய பரிமாற்றங்கள் முற்றும்
முடியாமல்,
இதை மாற்றி வேறொன்று வாங்குவதும் முடியாமல்,
உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.
இனி வீடுகள், நிலங்கள் வாங்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. ஏகப்பட்ட
வில்லங்கங்கள் அதில் நிலவ இருக்கின்றன. அதன் செயல்முறையே மிகுந்த சிரமமாக இருக்கப்
போகிறது. நிறைய தில்லுமுல்லுகளையும், தகிடுதித்தங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
வீடு, ப்ளாட் போன்ற செயல்முறைகளில் தெளிவு
பெற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நிலவுகின்றன. குழப்பங்களில் புகுந்து நீங்களும் குழம்ப
வேண்டியதில்லை. அது அப்படியே இருக்கட்டும். பணம் மிகுதியாக விளைந்தால் அதெல்லாம் தானாக
வரும். தேவை எல்லாவற்றிற்கும் பணந்தான். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கடன் வாங்கி
வாங்குகின்ற ஒன்றை வாங்காமல் இருப்பது எவ்வளவு நல்லது என்பது கடன் வாங்கிப் பார்த்தால்தான்
தெரியும். அதற்காகவாது கடன் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று வாங்கி விடாதீர்கள். எல்லாவற்றையும்
நாமே பட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. மற்றவர்களைப் பார்த்தும் புரிந்து
கொள்ளலாம். உங்களைச் சுற்றி சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிய வரும்.
*****
No comments:
Post a Comment