குறளதிகாரம் - 1.6 - விகடபாரதி
நூறாண்டுத் தாண்டி
வாழ...
நீண்ட காலம்
வாழ்வதற்கு இன்னொரு வழி, ஐம்புலன்கள் என்று சொல்லப்படும் மெய் (உடல்), வாய், மூக்கு,
கண், காது இவைகளை அடக்கத்தோடு வைத்துக் கொள்வது.
முதல் வழி
மென்மையான உள்ளம் நீண்ட காலம் வாழ்கிறது என்பதாகும். அதாவது மலர் மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். (மேலும் விரிவாக குறளதிகாரம் 1.3 இல் காண்க)
இப்போது
இன்னொரு வழி,
அடங்காத மெய்
(உடல்) உடல் இச்சையால் சீர்கெட்டுப் போகலாம்.
அடங்காத வாய்
கண்டதையும் உண்டு உடலைக் கெடுத்துக் கொள்ளலாம். கண்டதையும் பேசி வில்லங்கத்தை விலைக்கு
வாங்கிக் கொள்ளலாம்.
அடங்காத மூக்கு
மோப்பம் பிடித்துக் கொண்டு போய் பிற புலன் உறுப்புகளைத் தீண்டிக் கட்டுபாட்டை உடைத்து
விடலாம்.
அடங்காத கண்
கண்டதையும் கண்டு மனதைக் கெடுத்து விடலாம்.
அடங்காத காது
கேட்கக் கூடாதவைகளைக் கேட்டு புத்திப் பேதலிக்கலாம்.
காந்தியார்
சுட்டும் மூன்று குரங்கு பொம்மைகளில் ஒன்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கும்.
இரண்டாவது
கண்ணை மூடிக் கொள்ளும்.
மூன்றாவது
காதைப் பொத்திக் கொண்டிருக்கும்.
வாயைப் பொத்திக்
கொண்டிருக்கும் குரங்கு பொம்மை தீயவைகளைப் பேசக் கூடாது என்பதன் குறியீடு.
கண்ணைப் பொத்திக்
கொண்டிருக்கும் குரங்கு பொம்மை தீயவைகளைக் காணக் கூடாது என்பதன் குறியீடு.
காதுகளைப்
பொத்திக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மை தீயவைகளைக் கேட்கக் கூடாது என்பதன் குறியீடு.
புலனடக்கத்துக்காக
காந்தியார் சுட்டும் குறியீடே அக்குரங்கு பொம்மைகள்.
ஐம்புலன்களின்
வழியே வாழ்வில் எல்லாவற்றையும் உணர்கின்றோம். மனம் எனும் ஆறாவது அறிவுக்கு அடிப்படை
அமைப்பவைகள் இந்த ஐம்புலன்களே. அத்தகைய ஐம்புலன்களில் நிலவும் கட்டுக்கோப்பே நீடு
வாழ்வதற்கு வழியாகிறது.
அது மட்டுமோ
போதுமா என்றால் இன்னொன்றும் இருக்கிறது.
இப்படி ஐந்தறிவின்
விளைநிலங்களான ஐம்புலன்களில் நிலவும் கட்டுக்கோப்போடு, ஆறாவது அறிவான மனதில் பொய்மையற்ற
ஒழுக்கம் நிலவுமானால் மனித இனம் இந்த நிலவுலகில் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டு நீடு
வாழ்வது நிச்சயம். இது சத்தியம்.
ஐம்புலனால்
பெறும் அறிவை மாற்றும் வல்லமை ஆறாம் அறிவான மனதுக்கு உண்டு. பொய் சொல்வதை ஐம்புலன்களில்
ஒன்றான கண் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் அதை ஆறாம் அறிவான மனம் கொண்டு திசை திருப்பி
சாமர்த்தியமாக கண்களில் வெளிப்படாதவாறு நடித்து விடலாம். ஆகவேதான் ஐம்புலன்களின் கட்டுக்கோப்போடு,
ஆறாம் அறிவான மனத்தில் பொய்மையற்ற ஒழுக்கமும் வேண்டப்படுகிறது.
வள்ளுவர்
மிக நுட்பமானவர். ஐம்புலன்களைக் கட்டுபடுத்தியது போல எத்தனை எத்தனை சாமியார் பெருமக்கள்
நடிக்கிறார்கள். நடிப்பை உண்மை போல ஆறாம் அறிவான மனத்தைக் கொண்டு சமர்த்து சாமர்த்தியம் செய்கிறார்கள். ஆறாம்
அறிவான மனதில் பொய்யான ஒழுக்கமே நிலவும் போலிச் சாமியார்கள் பூமியெங்கும் நல்ல காற்றில்
கலக்கும் துர்நாற்றத்தைப் போல இருக்கவே செய்கிறார்கள்.
ஐந்தறிவோடு
ஆறாம் அறிவுக்கும் சேர்த்து, ஆக, ஆறு அறிவுக்குமான நெறிமுறை சொல்லும் வள்ளுவர் அந்நெறிமுறைகளில்
நிற்பவரே நீடு வாழ்வார் என்கிறார்.
பொறி வாயில்
ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்.
முதல் அறிவான
மெய் (உடல்) இச்சைக் கட்டுக்கோப்பு இன்மையால் எய்ட்ஸ் கண்டு மாண்டவர் எத்தனை பேர்?
இரண்டாம்
அறிவான வாயைக் கட்டாமல் கண்டதையும் உண்டு சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் என இன்னபிற
நோய்கள் கண்டு மாண்டவர் எத்தனை பேர்?
ஒரு சொல்
கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்பார்களே. கொல்லும் சொல்லைச் சொன்னவர்கள், தனக்குத்
தானே தீம்பு தேடிக் கொள்ளக் கூடிய சொற்களைச் சொல்லிச் சிக்கி மாண்டவர்கள் எத்தனை
பேர்?
மூன்றாம்
அறிவான மூக்கின் அதாவது சுவாசத்தோடு தொடர்புடைய புகை பிடித்து அதனால் புற்றுநோய்
கண்டு மாண்டவர்கள் எத்தனை பேர்?
நான்காம்
அறிவான கண்களால் காண வேண்டாதவைகளைக் கண்டு நெறி தவறிச் சென்றவர்கள் எத்தனை பேர்?
ஐந்தாம் அறிவான
காதால் கேட்க வேண்டாதவைகளைக் கேட்டு பாதை மாறிப் போனவர்கள் எத்தனை பேர்?
ஆறாம் அறிவான
மனம் போன போக்கில் போய், பொய்மையில் ஒழுகி, ஒழுக்கம் கெட்டு அழிந்தவர்கள் எத்தனை
பேர்?
யோசித்துப்
பார்த்தால் நீடு வாழ்வதற்கு, நீண்ட காலம் வாழ்வதற்கு ஆறு அறிவுகள் குறித்து வள்ளுவர்
சொல்லும் நெறிமுறைகள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது அல்லவா!
ஆழ்ந்து நோக்கினால்,
நீடு வாழ்வதற்கான வழியாக மட்டும் அல்லாமல்,
கடவுள் வாழ்த்தில்
கடவுளைத் தாண்டியும் மேம்பட்ட கடவுள் தன்மையோடு வாழ வழி சொல்கிறார் வள்ளுவர்.
கடவுள் வாழ்த்தில்
மனிதத் தன்மையைச் சிந்தித்த மகான் அன்றோ வள்ளுவர்.
*****
No comments:
Post a Comment