21 Jan 2018

வள்ளுவத்துக்கு ஏன் புராணப் புருடாக்கள்?

குறளதிகாரம் - 3.5 - விகடபாரதி
வள்ளுவத்துக்கு ஏன் புராணப் புருடாக்கள்?
            மெய் (உடல்), வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். சிபாரிசுகள் இருந்தால்தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்றால் சிபாரிசுகள் தேவைப்படாத அதை விட உயர்ந்த பதவியை அடைய ஐம்புலன் அடக்கம் வேண்டும்.
            அது என்ன அவ்வளவு உயர்ந்த பதவி?
            இந்திரப் பதவிதான் அந்தப் பதவி.
            அது சுகபோகங்கள் மிகுந்த பதவி.
            சுகபோகங்கள் மிகுந்த பதவியை அனுபவிக்க ஐம்புலன் அடக்கம் வேண்டும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
            ஆம்! ஐம்புலன் அடக்கமில்லாமல் பால்வினை நோய் வந்து விட்டால் சுகபோக பதவியான இந்திரப்பதவியை எப்படி அனுபவிப்பது? குறைந்தபட்சம் சுகர் வந்து விட்டால் கூட அனுபவிப்பது கஷ்டமாகி விடாதா?
            அது மட்டுமா?
            அடக்கமில்லாமல் உடல் மூலம் பெறும் இச்சை இன்பத்துக்கு ஆசைப்பட்டு எல்லை மீறுபவர்கள் உலகால் தவறான முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டு இகழப்படுவார்கள்.
            ஆற்றங்கரையில் அமர்ந்து தவமியற்ற ஆரம்பித்தார் துறவி ஒருவர்.
            அந்நேரம் ஆற்றில் நீராட வந்த மங்கை ஒருத்தியைப் பார்த்ததும் அவரின் சித்தம் கலைந்தது. அற்றை நாள் தவம் அத்தோடு போனது.
            இதனால், அடுத்த நாள், கண்களால் பார்த்தால் பிரச்சனை என்று கண்களைத் துணியால் கட்டிக் கொண்டார்.
            இப்போது அந்த ஆற்றில் நீராட வந்த மங்கையின் கொலுசொலி காதில் கேட்க அவர் சித்தம் கலைந்தது. அடுத்த நாள் தவமும் அத்தோடு போனது.
            அதனால், அதற்கடுத்த நாள் கண்களையும், காதுகளையும் ஒரு சேர கட்டிக் கொண்டார் துறவி.
            அதற்கடுத்த நாள் வழக்கம்‍ போல் நீராட வந்த மங்கையின் கூந்தலில் சூடிய மல்லிகையின் வாடையை துறவியின் மூக்கு நுகர அதற்கடுத்த நாளின் தவமும் அத்தோடு போனது.
            இனி எந்நாளும் இது போன்ற பிரச்சனை நேரக் கூடாது என்று இம்முறை துறவி கண்கள், காதுகள், மூக்கு என்று ஒரு சேர கட்டிக் கொண்டார். 
            கண்கள் பார்க்கவில்லை.
            காது கேட்கவில்லை.
            மூக்கு நுகரவில்லை.
            எல்லாம் கட்டப்பட்டு அல்லவா இருக்கிறது.
            ஆனால், அவரது மனம் நினைத்தது, "நேரம் ஆகி விட்டதே! இது அம்மங்கை வரும் நேரம் அல்லவா! இன்னும் வரவில்லையே!" என்று.
            இப்போது அந்த துறவி மனதைக் கட்ட எந்தத் துணியைத் தேடுவார்?
            இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்பது போல, இது துறவிக்கு வந்த சோதனை. துறவில் இச்சோதனைதான் முதன்மை. இச்சோதனையில் பெறும் ஆற்றலே துறவுக்குத் தேவையான அடிப்படையான தவ ஆற்றல்.
            ஐம்புலன்களால் எழும் ஆசையைக் கட்டுபடுத்தும் மன ஆற்றலே தவ ஆற்றல்.
            ஐம்புலன்களையும் கட்டுபடுத்தும் ஆற்றல் பெற்றவனே இந்திரன் எனும் சிறப்பு பெறுகிறான்.
            இந்திரன் மருத நிலத் தலைவன்.
            ஊடலும் ஊடல் நிமித்தமும் எனும் உரிப்பொருள் கொண்டது மருத நிலம். பரத்தையும் பரத்தையர் ஒழுக்கமும் கொண்ட மருத நிலத்தில் ஐம்புலன்களை அடக்கியவனே இந்திரன் எனும் சிறப்புக்கு உரியவனாகிறான். அதாவது மருத நிலத்தை ஆளும் சிறப்பு.
            இந்திரன் என்பது மருத நிலத்தில் ஆளுமை செலுத்தும் ஒரு தலைமையின் குறியீடு. அவன் அரசனாக இருக்கலாம், குறுநில மன்னனாக இருக்கலாம், அவ்வூர்த் தலைவனாக இருக்கலாம், ஊர்த் தலைவனாக இருக்கலாம், தற்போதைய மிராசுதாரராக இருக்கலாம், நாட்டாமையாக இருக்கலாம்.
            அவன் தன் ஐம்புலன் ஆற்றலால் மழைக் கடவுளாகக் கருதப்படும் வருணன், காற்றுக் கடவுளாக கருதப்படும் வாயு, நெருப்புக் கடவுளாகக் கருதப்படும் அக்கினி ஆகியவைகளை தன் கட்டுபாட்டில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவனாக மக்களின் தொன்மம் சார்ந்த ஒரு நம்பிக்கைக்கு உள்ளாகிறான்.
            காற்று, மழை, நெருப்பால் பேரிடர் நேரும் காலங்களில் மக்களுக்கு நிலத் தலைவனாக விளங்கும் இந்திரனே ஆறுதல் தந்து, நிவாரணம் செய்து காத்தல் செய்ய முடியும் என்ற சிறப்பு காரணமாகவும் அவனுக்கு காற்றையும், மழையும், நெருப்பையும் கட்டுப்படுத்தும் சிறப்பு இருப்பதாக உயர்வாகக் கருதப்பட்டு இருக்கலாம். அது எப்படியென்றால்...
            இந்தக் காலத்திலும் நூறு ரூபாய்ப் பணத்துக்காகவும், ஒரு பிரியாணி பொட்டலத்துக்காகவும் வருங்கால முதல்வரே என்று முழங்கும் முழக்கங்கள் கேட்பதில்லையா என்ன!
            நிலம் எனும் வயல்களின் தலைவனாக அதாவது பூமியின் தலைவனாக இருக்கும் அவன், தன் ஐம்புலன் ஆற்றலால் காற்று, நெருப்பு, அக்கினி என்பனவற்றைக் கட்டுபடுத்தும் ஆற்றல் பெற்றவனாக கருதப்பட்டு அவனது மேன்மை இன்னும் சற்றே மிகைபடுத்தப்பட்டு அவனே ஆகாயத் தலைவனாகவும் கருதப்படுகிறான்.
            இப்படித்தான் ஆகாயத் தலைவனாக இந்திரன் கற்பிதம் செய்யப்படுகிறான். அவன் உண்மையில் பூமியில் இருக்கும் வயல்களின் தலைவனே. இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால் ஆதிப் பண்ணையார்களில் வலிமை படைத்த ஒருவனே அவன்.
            கற்பனையில் மிகைபடுத்திப் போற்றி வணங்கும் பண்பு நம் மக்களுக்கு எப்போதும் உண்டு.
            பிம்ப நாயகர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலிலும், பீரிலும் அபிஷேகம் செய்து அவர்களைத் தங்களைக் காக்க வந்த ரட்சகர்களாய்க் கருதும் பித்தேறிய நம்பிக்கை விஞ்ஞான மனப்பான்மை வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் இருக்கிறதென்றால், அந்தக் காலத்து மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் அப்படி புராதான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது.
            அப்படி இந்திரன் ஆனவன் தன் பதவியை அதாவது நிலத் தலைவன் என்ற சிறப்போடு இருக்க அவன் ஐம்புலன்களைக் அடக்கியாளும் திறன் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அகிலத்தை அடக்க ஐம்புலன்களை அடக்கு என்பது இதன் உட்கருத்து.
            ஒருவேளை ஐம்புலன்களை அடக்கவில்லையென்றால், அதுவே அவனது இந்திரப் பதவிக்கு அதாவது நிலத் தலைவன் என்ற பதவிக்கு வேட்டு வைத்து விடும். மேனாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இதற்குத் தக்கதொரு சான்று.
            ஆக,
            ஐம்புலன் அடக்கத்தாலே இந்திரப் பதவி கிடைக்கிறது.
            ஐம்புலன் அடக்கமின்மையாலே இந்திரப் பதவி போகின்றது.
            அதாகப்பட்டது என்னவென்றால், இப்போதெல்லாம் செத்தால் சிவலோகப் பதவி வழங்குவது போல, அக்காலத்தில் உயிரோடு உயர்ந்த நிலையில் இருந்தவர்களுக்கு இந்திரப் பதவி வழங்கியிருக்கிறார்கள்.
            ஐம்புலன் அடக்கப் பெருமைக்கும், அஃதில்லாத சிறுமைக்கும் வேறெந்தச் சான்றையும் விட இந்திரப் பதவி சான்று வெகு பொருத்தமானது. இந்திரப் பதவிக்கே அதுதான் நிலைமை என்றால் மற்றப் பதவிகளுக்கு சொல்லவா வேண்டும்! தலைவனுக்கே அதுதான் நிலைமை என்றால் குடிபடைகளுக்குச் சொல்லவா வேண்டும்.
            தவறு செய்தால் அவன் தலைவன் என்றாலும் தண்டிக்கப்படுவான், தேவன் என்றாலும் பாவப்பட்டவன் ஆவான் என்றால் அதற்கு மேல் அதை வலியுறுத்திச் சொல்ல வேறு என்ன உச்சபட்ச சான்று வேண்டும்?
            அதனாலேயே வள்ளுவர்,
            ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி என்கிறார்.
            இந்திரப் பதவி என்பதை கையில் எடுத்துக் கொண்டு அந்தக் காலத்திலேயே வள்ளுவர் ஆடிய பகடி ஆட்டமே இக்குறள்.
            பதவியும், செல்வச் செருக்கும், அதிகாரமும், வலிமையும் இருக்கும் இந்திரப் பதவியே ஐம்புலன் அடக்கம் இருந்தால்தான் நிலைக்கும், இல்லையென்றால் அழியும் என்று பதவிக்கு எதிராக, செல்வச் செருக்குக்கு எதிராக, அதிகாரத்துக்கு எதிராக, வலிமைக்கு எதிராக ஒழுக்கச் சாட்டையைச் சுழற்றுகிறார் முற்போக்காளர் வள்ளுவர்.
            இத்தோடு இக்குறள் முடிந்து விடவில்லை என்பதுதான் இக்குறளின் சிறப்பு. இந்திரனுக்கான கதியும், இந்திரனுக்கே இதுதான் கதியும் என்றால் இந்திரன் என்ற பதவியையும் துறந்த துறவிக்கு...?
            ஐந்தவிக்கும் ஆற்றல் இந்திரப் பதவிக்கே தேவையென்றால், அதை விடவும் உயர்ந்த பற்றற்ற, பதவியற்ற, விருப்பற்ற இந்திரப் பதவியினும் மேலான பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று வள்ளலார் சொன்ன துறவற (பதவி)க்கு மிக மிக வேண்டப்படுவதாகும்.
            ஆகவே துறவிகளே! ஒழுக்கமாய் இருங்கள் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் பிறந்திருக்கும்(தற்போது தறிகெட்டுப் போய் துறவிகளாக இருக்கும்), பிறக்கப் போகும் துறவிகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவர் கட்டம் கட்டிச் சொல்லியிருக்கிறார்.
            இக்குறளில் ஐம்புலன்களைக் கட்டுபடுத்தாமல் கெளதம முனிவரின் பிறனில் புகுந்து சாபம் எய்தி நின்ற இந்திரனையே வள்ளுவர் சான்று காட்டுவதாக குறிப்பிடுவர் உளர்.
            ஐம்புலன்களைக் கட்டுபடுத்தாமல் இந்திரன் சாபம் எய்தியது சரி என்றால், அகல்யை எதைக் கட்டுபடுத்தாமல் சாபம் எய்தினாள்? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?
            கணவன் யார் என்றும், மாற்றான் யார் என்றும் தெரியாமல் தவறுக்கு உடன் போன அகல்யைக்கான தண்டனை அது என்றால், சாமக்கோழியின் குரல் எது என்றும், சாமக்கோழியின் குரலாக ஒலித்த இந்திரனின் குரல் எது என்றும் தெரியாமல் சென்ற முனிவருக்கு தண்டனை எது? அதற்கும் மேலதிகமாக இவ்விவாதத்தைத் தொடர நினைத்தால் புதுமைப்பித்தன் வந்து கேட்கும் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது?
            மேலும் சாபத்தால் இந்திரன் உடலெங்கும் பெண்ணுறுப்பாய் ஆதல், அகலியைக் கல்லாக ஆதல் - இவையெல்லாம் சாத்தியமா? என்பதற்கு எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது எவ்வாறு?
            தவறு செய்யாத அகலியைத் தண்டித்த கெளதமர், பேராண்மை என்பது அறுகண் ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு என்ற குறளின் படி கணித்துப் பார்த்து ஆண்மையற்றவராகி விட்டால் என்ன செய்வது?
            திருக்குறள் சாதி, மத, வர்க்க, நாடு பேதமற்ற நூலாக இருப்பது போலவே புராண பேதமற்ற நூலாகவும் இருக்கட்டும். புராணங்கள் புராணங்களாகவே இருக்கட்டும். வள்ளுவம் அதன் மெய்ப்பொருளால் சிறக்கட்டும்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...