1 Dec 2017

பணத்தின் குணம்!

பணத்தின் குணம்!
            பண ஆசை பிடித்தவர்கள் பொதுவாக மாரடைப்பில் காலமாகின்றனரா என்ன? கேள்விப்படும் மரணங்கள் பலவும் அந்த விதத்தில் இருக்கின்றன. பணம் அவர்களின் இதயத்தைச் சுருங்கச் செய்து விடுகிறதோ என்னவோ! இதயம் சுருங்கிச் சுருங்கி அதற்கு மேல் சுருங்க முடியாது எனும் நிலையில் வெடித்து விடுகிறதோ என்னவோ!
            பணமே வாழ்வைத் தீர்மானிக்கிறது என்பதை மறுக்க முடியுமோ? வாழ்வின் வசதிகள், சொகுசுகள், அந்தஸ்துகள் எல்லாம் பணத்தால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. நல்லது! அப்படியே ஆகுக! என்றாலும்...
            ஒரு மனிதனைக் கெடுக்க அவனிடம் மிகுதியானப் பணத்தைக் கொடுத்தாலே போதும். அவனாகவே கெட்டுப் போவான். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பலரும் கெட்டுப் போக ஒரு வகையில் அவர்களின் கையில் கொடுக்கும் மிகுதியான பணமும் ஒரு காரணமோ என்று எழும் சந்தேகத்தைத் தடுக்க முடியவில்லையே!
            பண மாற்றம் குண மாற்றம் என்பார்களே நம் முன்னோர்கள்! பணத்தைக் கண்ட போதும் மனிதனின் குணத்தைக் காணும் மனிதர்கள் பூமியில் ஆபூர்வம்தான் அல்லோ! குணத்தைக் கொண்டாட வேண்டிய பண்பட்ட பூமியில் பணத்தைக் கொண்டாடுவதால்தான் உலகமே பணத்தை நோக்கி ஓடுகிறது அன்றோ! சரிதான் என்றாலும்...
            குபேரன் வீடானாலும் சாப்பிடுவதற்கு பணத்தை வைக்க முடியாது. ஓர் அளவைத் தாண்டியும் அடங்காத ஆசையோடு பணத்தைச் சேர்ப்பவர்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது, பணம் மனிதனை அனுபவிக்கிறதே என்று!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...