காலரைப் பிடிக்காமல் உலுக்கும் கலை!
வகுப்பறை நாட்களில், "இலக்கியம் என்றால்
இலக்கோடு இயம்பப்படுவது" என்ற விளக்கத்தைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டோம்.
அதென்ன இலக்கியத்தின் இலக்கு என்றால்...
சிலப்பதிகாரம்தான் அதற்கானப் பதில். இலக்கை இயம்பி விட்டு தொடங்கும் இலக்கியம் சிலப்பதிகாரம்.
அறத்தை நிலைநாட்டுவதுதான் இலக்கியத்தின்
இலக்கா? பெண்டிரைப் போற்றுவதுதான் இலக்கியத்தின் இலக்கா? ஊழ்வினையிலிருந்து தப்பிக்க
முடியாது என்பதை உணர்த்துவதான் இலக்கியத்தின் இலக்கா? என்ற கேள்விகள் சிலப்பதிகாரத்தைப்
படித்த பின் எழுந்தால் சற்றேறக்குறைய அதுதான் என்பதை பின்னர் வந்த இலக்கியங்களும் கட்டியம்
கூறுவதை நோக்கலாம்.
இராமாயணம் 'பிறன்மனை நோக்காதப் பேராண்மை'
என்ற அறத்தை நிலைநாட்டினால், மகாபாரதம் ஒட்டுமொத்தமாக தர்மத்தை நிலைநாட்டுவதுதான்
முக்கியம் என்று அறத்தை தர்மம் என்ற பெயரால் நிலைநாட்டுகிறது.
தற்கால புதினங்களைப் படிக்கும் போது மனதை
விரிவுபடுத்துவதுதான் அதன் இலக்கு என்பதாகப் புரிபடும். அதாவது அறத்தினின்று குறுகிய
மனத்தை அறத்தை நோக்கி விரிவுபடுத்துவது என்பதாக அதன் இலக்கு அமைவதைக் காணலாம்.
சுயநலத்தால் கெட்டிப்பட்டுப் போன மனத்தை,
மனிதநேயம் என்ற மகத்தான பண்பைச் சுட்டிக்காட்டி நெகிழ்வுபடுத்தும் பணியை இன்றைய கவிதைகளும்,
சிறுகதைகளும், புதினங்களும் செய்து கொண்டிருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் சமகாலத்தின்
செய்யப்பட வேண்டிய மாபெரும் அறம் அதுதானன்றோ!
எனக்கு நான் கூட துணையில்லை என்று ஏங்கிச்
செத்த தனிமையுணர்வுமிக்க கவிஞனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்பது என்னவென்றால்,
தன்னை நேசிக்கும் தனக்குத் துணையான ஒரு இதயம் வேண்டும் என்பதுதானே. அந்த இதயம் கூட
குறைந்தபட்சம் தன்னுடைய இதயமாக இருக்கக் கூடாது என்ற கேள்வி எவ்வளவு அதிர்ச்சியைத்
தருகிறது. அந்த அதிர்ச்சியைக் கடக்காமல் இன்றைய இலக்கியங்களைக் கடக்க முடியாது. இன்றைய
இலக்கியங்கள் சாதிக்க நினைக்கும் இலக்கு அதுதான். சட்டைக் காலரைப் பிடிக்காமலே ஒட்டுமொத்த
உடலோடு மனதையும் உலுக்கியெடுக்கும் நுட்பம் செறிந்தவை இன்றைய இலக்கியங்கள். அதன் பிடியிலிருந்து
தப்பிப்பது சாதாரணமானதன்று. அதனால் கூட அதற்கு வாசகர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால்
எழுதுபவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment