இடைத்தேர்தல் சொல்லும் செய்தி!
தமிழக மக்கள் ஆளுமையை விரும்புபவர்கள்.
காமராசர் என்ற ஆளுமையை விரும்பி வாக்களித்தவர்களே தவிர ஒரு கட்சிக்காக வாக்களித்தவர்கள்
இல்லை. அண்ணாதுரை என்ற ஆளுமைக்காகவும், கருணாநிதி என்ற ஆளுமைக்காகவும் வாக்களித்தவர்களே
தவிர ஒரு கட்சிக்காக வாக்களித்தவர்கள் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற ஆளுமைக்காக
வாக்களித்தவர்களே தவிர ஒரு கட்சிக்காக வாக்களித்தவர்கள் இல்லை.
தமிழர்கள் ஆளுமையை விரும்புபவர்கள் என்பதால்தான்
திரை நாயகர்களின் முதல்வர் கனவு இந்த டிஜிட்டல் யுகத்திலும் விடாமல் தொடர்கிறது.
ஓர் இடைத்தேர்தலில் தனக்கான வாக்கு வங்கியைத்
தக்க முடியாத அளவுக்கு ஓர் எதிர்கட்சி டெபாசிட் இழக்கும் நிலைக்குச் சென்றிருப்பது
பொதுமக்கள் விரும்பும் ஓர் ஆளுமையை எதிர்கட்சியால் தர முடியவில்லையோ என்பதைக் காட்டுகிறதா
என்ற கேள்வி தற்போது தவிர்க்க முடியாததாகிறது.
இந்த இடைத்தேர்தல் வெற்றி பணத்தால் சாதிக்கப்பட்டது
என்று இதற்கு சப்பைகட்டும் கட்ட முடியாது. அப்படி பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது
உண்மையென்றால் அதைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்து அதை தடுக்க வேண்டிய கடமை எதிர்கட்சிக்கு
இருக்கிறது.
ஓர் இடைத்தேர்தலின் வெற்றியில் ஒரு சுயேட்சையின்
வாக்கு விகிதத்தில் பாதியை ஆளுங்கட்சி பெற்றிருப்பதும், அதில் பாதியை எதிர்கட்சி பெற்றிருப்பதும்
எதார்த்தமாக கருதுவதற்கான ஒரு முடிவாக இருக்க முடியாது.
எந்த வகையில் பார்த்தாலும் இந்த வெற்றி
தரும் செய்தி ஒன்று இருக்கிறது. இந்த வெற்றி சரியான வழியில் பெறப்பட்ட வெற்றி என்று
சொன்னாலும் இது ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் களங்கமே. தவறான வழியில் பெறப்பட்ட
வெற்றி என்று சொன்னாலும் அந்தத் தவறான வழியைத் தடுக்க முடியாத ஆளுங்கட்சி மற்றும்
எதிர்கட்சியின் கையாலகத்தனமும் ஒரு களங்கமே.
ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ இரண்டுமே
பொதுமக்கள் விரும்பும் ஓர் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. ரெய்டுக்கோ,
வழக்குக்கோ அச்சப்படாத, நடுவண் அரசுக்கு நடுங்காத, அசால்ட்டாக பதில் சொல்லும் ஓர்
ஆளுமையைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வியை அவர்கள் தங்கள் மனதில்
இந்த நேரத்தில் எழுப்பிப் பார்க்கலாம்.
*****
தோழர் நல்லகண்ணுவும் தேர்தல்களில் கண்டுகொள்ளப்படாத ஓர் ஆளுமை
ReplyDeleteஇதைத்தான் என்னால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை
உண்மைதான் ஐயா! ஜனநாயகம் என்பது செரிக்க முடியாத நெகிழியாக மாறிக் கொண்டு இருக்கிறது!
Delete