11 Dec 2017

சத்தியம் என்று நம்புங்கள்!

சத்தியம் என்று நம்புங்கள்!
            ஓர் ஆசிரியர் என்பவர் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக இருக்கும் நேரத்தில் அப்படி இருந்தால் போதும். ஒரு ஆலைத் தொழிலாளி வேலை பார்க்கும் நேரத்தில் ஆலைத் தொழிலாளியாக இருந்தால் போதும். அரசியல்வாதி அப்படி இருக்க முடியாது. இருபத்து நான்கு மணி நேரமும் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
            அரசியல்வாதியால் வேலை முடிந்து விட்டது என பேக்கப் சொல்லி விட முடியாது.
            கொஞ்சம் ஓய்வுக்காக ரிலாக்ஸாக வெளிநாடு டூர் போகிறேன் என்றெல்லாம் கிளம்பி விட முடியாது. நாட்டின் தலைவராகவே இருந்தாலும், அது அரசு ரீதியாக இருந்தாலும் விமர்சனத்திலிருந்து தப்ப முடியாது. மனஉளைச்சல் தாங்க முடியவில்லை என்று இமயமலைக்குத் தப்பி ஓடுவதெல்லாம் சான்ஸே கிடையாது. ஞாயிற்றுக் கிழமை விடுப்பெல்லாம் கேட்க முடியாது.
            வெயில் ஜாஸ்தியா இருக்கு, வெள்ளம் வந்திடுச்சு, சுட்சுவேசன் சரியில்லைன்னு சூட்டிங்கைத் தள்ளி வைக்கிற மாதிரியெல்லாம் தள்ளி வைக்க முடியாது. கேரவன் வசதியெல்லாம் கிடைக்குமா எனத் தெரியாது.
            இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இருந்தால் நல்லா இருக்குமே என்று சப்பைக் கட்டெல்லாம் கட்ட முடியாது.
            பம்மி டயலாக் பேசி, பாய்ந்து அடிப்பதெல்லாம் முடியாது. பக்கம் பக்கமாக வசனம் பேசியெல்லாம் கெட்டவர்களை நல்லவர்களாக திருத்தி விட முடியாது. புள்ளிவிவரங்களை அள்ளி வீசி வேலை வாங்கி விட முடியாது.
            முக்கியமாக இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதைப் பண்ணுபவர், கதை சோடிப்பவர், டூப் போடுபவர் என்று யாரும் இருக்க மாட்டார்கள். விழுந்தால் அடிபடும். எழுந்து நடக்க வேண்டும். ரீடேக் போவதெல்லாம் நடக்கவே நடக்காது. தப்பு பண்ணினால் ஜென்மத்துக்கு மறக்க மாட்டார்கள் மக்கள்.
            ஆன் தி ஸ்பாட் முடிவு எடுத்தாக வேண்டும். ட்விஸ்ட் வைப்பதாக மெளனம் காக்க முடியாது. அப்படி வைப்பதற்கெல்லாம் ரூஸ்வெல்ட், சர்ச்சில், சீசர் போல் இருக்க வேண்டும்.
            குறைந்தபட்சம் நயன்தாரா போல நேர்மையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும்.
            இதன் மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னைக் கேட்காதீர்கள். என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை என்பதுதான் சத்தியம்.
            சத்தியம் செய்தால் நம்பி விட மாட்டீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்! நான் நயன்தாரா பற்றி எழுதுவேன் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...