ஒரு ஊர்ல ஒரு குடும்பம் - சிறுகதை
- விகடபாரதி
பிரேமாவுக்கு தன் கணவனின்
மீது சந்தேகம் வலுத்தது. அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. ஆனால் மனதின் ஓர் ஓரத்தில் சந்தேகம்
கிடந்து அலைத்துக் கொண்டு இருந்தது. அதை எப்படிப் போக்கிக் கொள்வது என்ற தவிப்பு
அவளை வாட்டியது.
பரமசிவம் ஆபீஸ் விட்டு
வந்ததும் வராததுமாக தன் சந்தேகத்தை ஆரம்பித்தாள். "நேத்திக்கெல்லாம் அஞ்சரைக்கே
வந்துட்டீங்க! இன்னிக்கு மணி ஆறேகால் ஆயிடுச்சே!"
"அபீஸ்ல கொஞ்சம்
வேலை. முடிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு!"
"போன செவ்வாய்
கிழமையும் இதையேத்தானே சொன்னீங்க!"
"ஆமாம்"
"டெய்லியா ஆபீஸ்ல
வேலை இருக்கும்"
"நான் வேலை பார்க்குறது
தனியார் நிறுவனம். அப்படித்தான். எப்ப வேலை அதிகமாகும், குறையும்னு சொல்ல முடியாது"
"ரெண்டு வாரத்துக்கு
முன்னாடி ஒரு நாள் லேட்டா வந்தீங்களே! அப்பயுமா ஆபீஸ்ல வேலை இருந்துச்சு!"
"ம்ஹூம்! அப்ப
இருந்திருக்காது. டிராபிக்கா இருந்திருக்கும். கொஞ்சம் லேட்டாயிருக்கும்"
"நல்லாவே சமாளிக்குறீங்க!"
"அபீஸ் விட்டு
சீக்கிரமா வரணும். அவ்வளவுதானே! நாளையிலேர்ந்து பாரேன்!"
"அது மட்டுமில்ல!
உங்க ஆபீஸ்ல புதுசா ஒருத்தி சேர்ந்திருக்காளாமே, ரேகாவோ சோகாவே! அவளைப் பார்க்காமலும்
வரணும்!"
பரமசிவத்துக்கு சிரிப்பு
வந்தது. "சரி! அப்படியே செஞ்சிட்டாப் போச்சு!"
"அப்படின்னா தினமும்
அவளைப் பார்த்துகிட்டு இருந்துட்டுதான் லேட்டா வர்றீங்களா?"
"ஏன் நான் அவளைப்
பார்க்கக் கூடாதா?"
"அதான் கண்ணுக்கு
அழகா என்னையை கட்டி வெச்சு இருக்கீங்களே! பத்தாதா? அவளையும் வேற பார்க்கணுமா?"
"தப்பு! தப்பு!
ரொம்ப தப்பு! மன்னிச்சுக்கணும்! நான் என்ன இனிமே என்ன பண்ணணும்னு மேடமே சொல்லிடுங்களேன்!"
"பண்றதையெல்லாம்
பண்ணிட்டு இப்ப எங்கிட்ட வந்து கேட்டா... நீங்க வேற அபீஸூக்கு போங்க. இல்ல, அவளை வேற
ஆபீஸூக்குப் போகச் சொல்லுங்க!"
"நடக்குற காரியமா
இது?"
"எல்லாம் நடக்கும்!
இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போயிடுவேன்!"
"சரி போய்க்கோ!"
பரமசிவம் விளையாட்டாகத்தான் சொன்னான். அது அவ்வளவு பெரிய விபரீத விளைவு எடுக்கும்
என்று அவன் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக பிரேமா துணிமணிகளை அள்ளி டிராவல் பேக்கில்
திணித்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
"ஏ! பிரேமா! ச்சும்மா
விளையாட்டுக்குச் சொன்னேன்!" என்று பரமசிவம் ஓடிப் போய் தடுத்தான்.
"மனசுல உள்ளதுதான்
வெளியில வரும். இப்ப வெளியில வந்துடுச்சு. நீங்க டெய்லி ஆபீஸ் போய் அவளைப் பார்க்க
கஷ்டப்படணும். இங்கேயே அழைச்சு வந்து வெச்சுக்குங்கோ! நான் போறேன்!" என்று சொல்லி
விட்டு வாசலைத் தாண்டி கிளம்பி விட்டாள்.
பரமசிவம் ஓடிப் போய்
தடுக்க, தடுக்க அவள் வேகமாக திமிறிக் கொண்டு சென்று கொண்டே இருந்தாள். அவள் தெருமுனை
வரை சென்று விட்டாள். பரமசிவம் பரிதாபமாகக் கெஞ்சிப் பார்த்தான். தெருவில் நின்ற அனைவரும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிரேமா வேகமாக ஓடிப்
போய் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிய போது, பரமசிவம் கையறு நிலையை உணர்ந்தான்.
எப்படி இப்படி சில நிமிடங்களில்
வாழ்க்கை திசை மாறுகிறது என்பதை நினைத்த போது அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
எது விளையாட்டுத்தனமான
பேச்சு, எது சந்தேகத்திற்கு இடமான பேச்சு என்பதை வகைபிரித்து பார்க்க முடியாமல் அலட்சியமாக
இருந்து விட்டேனே என்று அவன் தன்னைத் தானே நொந்து கொண்டான்.
மறுநாள் அவள் எப்படியும்
வீடு திரும்பி விடுவாள் என்று எதிர்பார்த்தான். திரும்பவில்லை. நேரில் சென்று அழைப்பதே
நல்லது என்று தோன்ற, அதன்படியே சென்று அழைத்தான். பிரேமா வர மறுத்தாள்.
மாமனாரும், மாமியாரும்,
மைத்துனனும் அவனைக் கடுமையாகத் திட்டி அனுப்பினார்கள். தவறு நடந்தாக அவர்களிடம் அவன்
மன்னிப்பும் கேட்டுப் பார்த்தான். அவர்களை அவனை ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.
பரமசிவம் கூனிக் குறுகிப் போனான்.
ஒரு வாரம் போகட்டும்
என்று காத்திருந்தான். அவன் காத்திருப்புக்கு எந்த பலனும் இருக்கவில்லை. நிலைமை இறுக்கமாவதாக
அவன் உணர்ந்தான். மறுமுறை ஒருமுறை அழைப்பது நல்லதாகப் படவே, மற்றும் ஒருமுறையும் பிரேமாவை
அழைப்பதற்காக அவன் சென்றான்.
இந்த முறை நிலைமை முன்பை
விட படுமோசமாக இருந்தது. ஊரில் சிலர் சேர்ந்து கொண்டு அவனை நாரசமான வார்த்தைகளால்
திட்டினார்கள். கேவலமாகப் பேசினார்கள். ஒருசிலர் அவனை அடிக்கவும் கை ஓங்கினார்கள்.
அங்கிருந்து தப்பித்து வருவது பெரும்பாடாகி விட்டது பரமசிவத்துக்கு.
அவனைத் திட்டிய போதெல்லாம்,
அவனை அடிக்க அங்குள்ளவர்கள் கை ஓங்கிய போதெல்லாம் பிரேமா கைகொட்டிச் சிரித்தாள்.
அதைத்தான் பரமசிவத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்படி என்ன நான் தப்பு
செய்து விட்டேன் என்று நொந்து கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழிகள் தெரியவில்லை.
இனி பிரேமாவை அழைக்கப்
போவதில்லை என்று அவன் முடிவெடுத்த போது, பிரேமாவின் வீட்டினார் ஆட்களைத் திரட்டிக்
கொண்டு பஞ்சாயத்துப் பேச வந்தனர்.
பரமசிவம் கள்ளத்தொடர்புகளை
கை விட வேண்டுமென்று வந்தவர்கள் பேசினார்கள். அப்படி ஒரு உறவே தனக்கில்லை என்று அவன்
மன்றாடி சொல்லிப் பார்த்தான்.
அப்படி இப்படி இருந்தாலும்
இனி இருக்கக் கூடாது என்று பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் கண்டிக்கவே, கோபமாகப் பேசி அறியாதா
பரமசிவம், "ஆமாங்கடா! நான் அப்படித்தான் இருப்பேன். உங்களால என்ன முடியுமோ பண்ணிக்குங்கடா!"
என்று பேச ஆரம்பித்த போதுதான் வந்தவர்கள் முகத்தில் ஓர் அதிர்ச்சியைக் காண முடிந்தது.
"நான்தான் அப்பவே
சொன்னேனே! இவன் சரிபட்டு வர மாட்டான். அத்துவிடச் சொல்லுங்க!" என்று பிரேமாவின்
அப்பா.
"எப்படிங்கடா அத்து
விடுறது? சொல்லுங்கடா நாதாரி நாய்களா?" என்றான் பரமசிவம் உச்சஸ்தாயில்.
"செஞ்ச நகை நட்டு,
பாத்திரப் பண்டம், சீர்வரிசை சாமான்களையெல்லாம் எடுத்து வைக்கச் சொல்லுங்க!"
என்றான் மைத்துனன்.
"எல்லாம் இந்த
வூட்டுலதான் இருக்கு. நான் வெளியில போய்ட்டு வர்றத்துக்குள்ள எல்லாத்தையும் எடுத்துகிட்டு
இடத்தை காலி பண்ணிடணும். இனிமே எவனாது இது சம்பந்தமா பேச வந்தீங்கன்னா அப்புறம் இருக்கு
நடக்குறது?" பரமசிவம் வேக வேகமாக வெளியேறினான்.
திரும்பி அவன் வந்து
பார்த்த போது அவனுடைய பொருள்களையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போயிருந்தனர். அதற்காக
அவனுக்குப் பெரிதாக வருத்தம் எதுவும் இல்லை.
பரமசிவம் கல்லுளிமங்கன்
போல் ஆனான். காலையில் எழுந்து ஆபிஸ் செல்வது, மாலையில் வீடு திரும்புவது, நன்றாகப்
படுத்து உறங்குவது என்று அவன் நாள்கள் கழிய ஆரம்பித்தன.
பிரேமா யாரோடு அவனைத்
தொடர்புபடுத்திப் பேசினாளோ அந்த ரேகாவுக்கும் குழந்தை பிறந்து தவழத் தொடங்கியது.
பரமசிவம் அதே பழைய பரமசிவமாகத்தான்
இருந்தான்.
வேறொரு பெண்ணை ஏறிட்டுப்
பார்ப்பதோ, இன்னொரு கல்யாணத்திற்கோ எந்த முயற்சியோ அவன் செய்யவில்லை. அவனைப் பொருத்த
வரையில் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்பது போன்ற ஒரு மனநிலைக்கு வந்திருந்தான்.
ஒரு நாள் திடுதிப்பென்று
பிரேமா அங்கு வந்தாள். அவள் வீட்டை விட்டுக் கிளம்பும் போது எந்த டிராவல் பேக்கை எடுத்துச்
சென்றாளோ அதே பேக்கோடு வந்திருந்தாள்.
அவன் அவளை வா என்று
கூப்பிடவில்லை. ஏனென்றும் கேட்கவில்லை. அவளும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை.
மறுநாள் அவன் ஆபீஸ்
கிளம்பிய போது சாப்பாட்டுத் தட்டை அவன் முன் வைத்தாள். பரமசிவம் எந்த மறுபேச்சும்
பேசாமல் சாப்பிட்டு விட்டு எழுந்தான். ஆபீஸ் கிளம்பும் முன் அவன் கையில் மதிய சாப்பாட்டுக்
கூடையைத் திணித்தாள். அவன் வாங்கிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான்.
அடுத்த சில நாள்களில்
பஞ்சாயத்து நாளன்று வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பொருள்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
அவர்கள் மனமொத்த தம்பதிகளாக
குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். இன்றோடு அந்த ஆதர்ச தம்பதிகளின் குடும்ப வாழ்க்கை முப்பது
ஆண்டுகளைக் கடக்கிறது. இந்த முப்பது ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கிடையே ஒரு வார்த்தை
கூட பேசிக் கொள்ளவில்லை.
*****
- விகடபாரதி
No comments:
Post a Comment