17 Dec 2017

சோளகர் தொட்டி - அரசப் பயங்காரவாதத்தின் அரிய சாட்சியம்!

சோளகர் தொட்டி - அரசப் பயங்காரவாதத்தின் அரிய சாட்சியம்!
            ச. பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' நாவல் பழங்குடி மக்களின் சிதைவு பற்றிய சமகால நாவல். அதிரடிப் படைகள் எனும் அரச பயங்காரவாதத்திற்கும், காட்டில் புகும் கடத்தல்காரர்கள், கங்காணிக்காரர்கள் எனும் சுரண்டல்வாதத்திற்கும் அப்பாவி பழங்குடிகள் எப்படி பலியாகிறார்கள் என்பதை வலியோடு பதிவு செய்கிறது இந்நாவல்.
            நாவலின் முதல் பாகம் பழங்குடிகளின் பழக்க வழக்கங்களையும், மெல்ல அவர்களின் வாழ்வில் ஊடுருவும் கங்காணிக்காரர்களையும், இரண்டாம் பாகம் அவர்களின் வாழ்வையும் உடலையும் சிதைக்கும் அதிரடிப்படையின் அட்டூழியங்களையும் மூடி மறைக்காமல் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
            சற்றேறக்குறைய வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் நாகரிகக் குடிகள் என்று சொல்லப்படும் நகர மக்களின் மேல் ஏவப்பட்ட போலீஸ் பயங்கரவாரத்தைச் சொல்வது என்றால், இந்நாவல் தொல்குடிகள் என்று சொல்லப்படும் பழங்குடிகள் ஏவப்பட்ட போலீஸ் பயங்கரவாதத்தை ரத்தமும் சதையுமாகச் சாட்சியம் செய்கிறது.
            வீரப்பனின் தேடுதல் வேட்டையில் போலீஸாரால் கிழித்துத் தொங்கவிடப்பட்ட பழங்குடிகளின் சதைகளும், உடைபட்டு நொறுங்கிய எலும்புகளும், துடிதுடிக்க ரத்தக் கவிச்சியோடு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுகளும் வார்த்தைக்கு வார்த்தைக்கு படமாய் விரிகின்றன.
            ஹிட்லரின் வதை முகாம்களுக்கு சற்றும் குறைவில்லாத வன்கொடுமை முகாம்களாக அதிரடிப்படையின் வதைமுகாம்கள் இருந்ததற்கான வரலாற்று சாட்சியம் இந்நாவல். மின் அதிர்வுகளைச் செலுத்தி பழங்குடிகளை வதை செய்யும் வொர்க் ஷாப்பில் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் மலம் கழித்து விடுபவனை அம்மலத்தை எடுத்துத் தின்னச் சொல்லும் அவலம் ஒன்று போதும் அதன் உச்சபட்ச கொடுமையைக் காட்ட.
            போலீஸாரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்டிரை ஏற்று மணம் செய்து கொள்ளும் பண்பட்ட மனமுள்ள பழங்குடிகளா இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? கண்களை கட்டிக் கொண்ட நீதித் தேவதையை நினைத்துக் கொண்டு ஆறுதல் அடைய வேண்டியதுதானா?
            சமீபத்தில் வினோத்தின் இயக்கத்தில் கார்த்திக்கின் நடிப்பில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் பழங்குடிகளை மனித வேட்டையாளர்கள் போல் சித்தரித்ததற்கு மாறாக மனித வதை வேட்டையாளர்களாக திகழ்ந்த படித்தப் பண்பட்ட அதிரடிப்படைகளின் வன்கொடுமைகளை வரலாற்று சாட்சியமாக முன் வைக்கிறது இந்நாவல்.
            'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில்ல் சொல்வது போல அவர்கள் உணவுக்காக, வாழ்வுக்காக மனித வேட்டையாளர்களாக மாற ஒரு காரணம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அதிரடிப்படைகள் வதை செய்யும் வன்கொடுமையாளர்களாக மாற என்ன காரணம் இருக்கிறது?
            காடுகளைப் பாதுகாப்பதாக அரசத் திட்டங்கள் காடுகளை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது அந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துபவர்கள் அதைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள். காடுகளை அழிக்க அங்கு வாழும் பழங்குடிகளை அழிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது. காடுகளை அழிப்பதற்கு முன் பழங்குடிகளை அழிக்கிறார்கள். அல்லது அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம், நாகரிகம் அளிக்கிறோம் என்ற பெயரில் அங்கிருந்து வெளியேற வைக்கிறார்கள்.
            பழங்குடியினரே காடுகளின் காவலர்கள். அவர்களை அவர்களின் வாழ்வை வாழ அனுமதித்தால் போதும். காடுகள் வாழும். அவர்களின் வாழ்வை அவர்களை வாழ விட்டால் நாம் எப்படி காடுகளைச் சுரண்டுவது? காடுகளைச் சுரண்ட நமக்குக் காவல் வேண்டாமா? அதற்குத்தானே இருக்கவே இருக்கிறது அதிரடிப் படைகள் எனும் அரசப் பயங்கரவாதம்.
            பயங்கரவாதம் என்பது நாட்டுக்கு வெளியிலிருந்து மட்டும் உருவாகி வருவதல்ல. தேவைப்பட்டால் தனது தேவைக்கு ஏற்ப அதை நாட்டுக்கு உள்ளுக்குள்ளும் உருவாக்கிப் பிரயோகிக்கும் வித்தையை அதிகார அமைப்புகள் செய்யும் என்பதை இந்நாவலைப் படித்த முடித்தவுடன் உணர்வீர்கள்.
            வலியில்லாத வாழ்க்கை ஏது? வலியே வாழ்க்கையாகி விடக் கூடாதல்லவா! நாவலில் ஒலிக்கும் குரல் அதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடிகள் கண்ணீர் வடித்தால், காவிரியில் தண்ணீர் வராது என்பதுதான் இந்நாவல் ‍சொல்லாமல் சொல்லும் மறைமுகமான கேயாஸ் தியரி என்று நினைக்கிறேன்.

*****

2 comments:

  1. ஐயா!
    சிறப்பான பதிவு. இந்நாவலை வலியில்லாமல், கண்ணீரில்லாமல் படித்திட முடியாது. அரச பயங்கரவாதத்தின் உச்ச பட்ச கொடுமைகளைக் கண்டது வாச்சாத்தி. அதன் வலிகளை அதே வலுவுடன் நமக்கு நாவல் கடத்தும். இதனை தற்போது வெளியான தீரன் படத்துடன் தொடர்பு படுத்தி நீங்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை சிறப்பானது.

    ReplyDelete
  2. தீர்க்கமான திறனாய்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...